Tuesday 23rd of April 2024 02:49:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 36 (வரலாற்றுத் தொடர்)

எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 36 (வரலாற்றுத் தொடர்)


பண்டா – செல்வா ஒப்பந்தமும் கண்டி யாத்திரையும்! - நா.யோகேந்திரநாதன்!

"சென்ற ஆண்டு இடம் பெற்ற போராட்டங்கள் தமிழ் மக்கள் ஒற்றையாட்சியின் கீழ் சமனாக நடத்தப்படமாட்டார்கள் என்பதை தெளிவாக்குகின்றது. இது மொழி உரிமைக்காக மட்டும் நடத்தப்படும் போராட்டமல்ல. இது தமிழ் மக்களின் சமத்துவத்துக்கும் சுதந்திரத்துக்குமான ஒப்பற்ற போராட்டமாகும்".

இது திராவிடர் கழகத்தின் ஸ்தாபகத் தலைவரும் இந்திய பிராமணித்துவ மேலாதிக்க ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் அரசியலாதிக்கத்துக்கு எதிராகவும் ஆரியக் கலாச்சாரத் திணிப்புக்கு எதிராகவும் துணிச்சலாக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தித் தமிழ் மக்களை எழுச்சிபெற வைத்த பெரியார் ஈ.வே.ரா. தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பாகவும் அவற்றுக்கான சிங்கள இனவாதிகளின் எதிர்வினை தொடர்பாகவும் வெளியிட்ட கருத்தாகும்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைமையில் இடம்பெற்ற போராட்டங்கள் காரணமாகவும் தமிழரசுக் கட்சி 20.07.1958ல் வடக்கு, கிழக்கு ரீதியில் பரந்த ஹர்த்தால், சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தப் போவதாக விடுத்த அறிவிப்பும், தென்னிலங்கையில் இடதுசாரிகள் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளும் தமிழ் நாட்டில் ராஜாஜி, பெரியார் ஈ.வே.ரா., சி.என்.அண்ணாத்துரை, ஆதித்தனார், ம.பொ.சி. போன்ற தலைவர்கள் விடுத்த கடும் கண்டனங்களும் தனது நோக்கங்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமென பண்டாரநாயக்க கருதினார். இலங்கையை ஒரு இறைமையுள்ள, சுயாதீனமான, சுயசார்புப் பொருளாதார நாடாக உருவாக்கும் முகமாக அவர் மேற்கொண்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இப்படியான எதிர்ப்புப் பேரலை இடையூறாக அமைந்து விடுமென அஞ்சினார் அவர்.

எனவே உடனடியாகவே அவர் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுகளை தமிழரசுக் கட்சியுடன் ஆரம்பித்ததுடன் 20.07.1957ல் நடாத்த உத்தேசிக்கப்பட்டிருந்த ஹர்த்தால் போராட்டத்தைக் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

அவ்வகையில் 1957 ஜூலை மாதம் 27ம் நாள் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது ஏறக்குறைய ஒரு சமஷ்டி அமைப்புக்கான அம்சங்களை உள்ளடக்கியிருந்ததாலும், 1944ல் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இனப்பிரச்சினைத் தீர்வாக "பிரிந்து போகக்கூடிய உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை கொண்ட பிரதேச சுயாட்சி" என எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இருந்தமையாலும் இவ்வொப்பந்தத்தைத் தமிழ் மக்களும் இடதுசாரிகளும் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையுமெனவே எதிர்பார்க்ப்பட்டது.

பண்டா – செல்வா ஒப்பந்தம் மூலம் வடக்கு ஒரு பிராந்திய அலகாகவும் கிழக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அலகுகளாகவும் பிரிக்கப்படுமெனவும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அலகுகள் மாகாண எல்லைகளுக்கு அப்பாலும் ஒன்றிணையவும் ஒரு அலகு இரண்டாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ பிரிய முடியுமெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் விவசாயம், கூட்டுறவு, காணி மற்றும் காணி அபிவிருத்தி, குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், நீர்ப்பாசனம், வீதிகள் என்பன பிராந்திய சபைகளின் கீழ்க் கொண்டுவரப்படுமெனவும் வரி விதிப்பதற்கும் கடன் பெறுவதற்கும் பிரதேச சபைகளுக்கு அதிகாரம் உண்டெனவும் வடக்குக் கிழக்கில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாக இருக்குமெனவும் இணக்கம் காணப்பட்டது. இவ்வொப்பந்தம் ஓரளவுக்குத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவானதெனத் தமிழரசுக் கட்சியினரும் தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் ஐ.தே.கட்சியினரும் அதன் உபதலைவராக விளங்கிய ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் மீண்டும் தமது இனவெறிப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுத் தமிழ் மக்கள் மீதான வெறுப்புணர்வைச் சிங்கள மக்கள் மத்தியில் தூண்டி விடுவதில் தீவிரமான செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

பண்டா – செல்வா ஒப்பந்தம் மூலம் நாடு பிளவுபட்டு விடுமென்றும் தமிழர்களுக்குத் தனியரசு உருவாக்கப்பட்டு விடுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரங்களை மேற்கொண்டது."முதல் காலடி" என்ற பிரசுரத்தை வெளியிட்டு நாடு பிளவுபடப் போகிறதெனவும் சிங்கள மக்கள் தங்கள் தாய் நாட்டைக் காப்பாற்ற முன் வரவேண்மெனவும் அதன் மூலம் அறைகூவல் விடுத்தது. அக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகை சியரட்ட சமஷ்டி வழங்கப்படப் போகிறதெனவும் அதனால் சிங்கள மக்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிவருமெனவும் சிங்கள மக்களை அச்சுறுத்தியது. அப்பத்திரிகையில் ஜே.ஆர்.ஜயவர்த்தன சிங்கள மக்களுக்குப் பயத்தையும் தமிழர் மீதான வெறுப்பையும் தூண்டும் வகையில் தொடர் கட்டுரைகளை எழுதி வந்தார்.

மேலும் பிக்கு பெரமுன, பாஷா பெரமுன, ஏ.எச்.மெத்தானந்த தலைமையிலான பௌத்த தேசியப் படை, பௌத்த மகா சம்மேளனம் போன்ற அமைப்புகளும் பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராகத் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டன.

ஐ.தே.கட்சியின் இத்தகைய பிரசாரங்களின் பின்னால் இன்னொரு உள்நோக்கமும் அமைந்திருந்தது. ஏகாதிபத்தியசார்பு கொண்ட சிங்கள மேல்நாட்டுக் குடியினரின் நலன்களை ஐ.தே.கட்சி அடிப்படையாகக் கொண்டிருந்த காரணத்தால் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சுயசார்ப்புக் கொள்கை கொண்ட தேசிய நலன்கள் சார்ந்த பண்டாரநாயக்கவின் ஆட்சியை மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்க வைக்கவும் முடிந்தால் கவிழ்க்கவும் அப்பிரச்சினையை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். 1956 தேர்தலில் பண்டாரநாயக்க அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க ஐ.தே.கட்சி எட்டே எட்டு ஆசனங்களை மட்டும் பெற்று அடைந்த தோல்வியிலிருந்து மீளௌவும் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து, கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஒரு பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்கள் இலங்கை இரண்டாகப் பிரிக்கப்பட்ட படங்களைத் தாங்கிக் கொண்டும் இனவாதக் கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர். இவ்வூர்வலம் கம்பஹாவுக்குள் புகுந்து இப்புலுகொட சந்தியை அடைந்தபோது அது வழிமறித்துத் தாக்கப்பட்டது. கம்பஹா நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவாலும் அவரது ஆதரவாளர்களாலும் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான பாதயாத்திரை அடித்து விரட்டப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

எனினும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் ஐ.தே.கட்சியினரும் தங்கள் இனவாதப் பிரசாரங்களை பௌத்த அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக மேற்கொண்டனர்.

இவற்றை அடுத்து 28.4.1957ல் பிக்குகள் எக்சத் பெரமுனவைச் சேர்ந்த பிக்குகள் பிரதமரின் இல்லமான "ரொஸ்மிட் பிளேஸ்" இல்லத்தின் முன்னால் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அதில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய சில பிக்குகள் 24 மணி நேரத்தில் பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படாவிட்டால் தாம் தீக்குளிக்கப் போவதாக மிரட்டினர். எதுவுமே செய்யமுடியாத நிலையில் பண்டாரநாயக்க அவர்கள் உண்ணாவிரதிகள் முன்னிலையிலேயே ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். அடுத்த நாள் பாராளுமன்றத்திலும் ஒப்பந்தம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. உருவாகி ஒன்பது மாதங்களிலேயே ஒரு வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஒப்பந்தம் மரணமடைந்து விட்டது.

பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்படுவதற்கு முன்பாக 1957 மார்ச் மாதத்தில் வடபகுதிக்கு சிங்கள ஸ்ரீ இலக்கத்தகடுகள் பொறிக்கப்பட்ட பஸ்கள் அனுப்பப்பட்டன.

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் பஸ் தேசிய மயத்துக்கு முன்பு தனியார் பஸ் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளே தேசிய மயத்தின் பின் சபையிலும் அதிகாரத்திலிருந்தனர். அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களே. எனவே அவர்கள் திட்டமிட்ட வகையில் குழப்பங்களை ஏற்படுத்தும் முகமாகவே சிங்கள "ஸ்ரீ" இலக்கத் தகடு பொறித்த பஸ்களை வடக்குக்கு அனுப்பியிருந்தனர்.

அதனால் ஏப்ரல் மாதத்தில் தமிழரசுக் கட்சியினரால் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே இனப் பிரச்சினைத் தீர்வாக பேச்சுகள் மூலம் ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில் "ஸ்ரீ" பிரச்சினையையும் பண்டாரநாயக்கவுடன் தமிழரசுக் கட்சி பேசித் தீர்த்திருக்கலாம். மாறாக "ஸ்ரீ" எதிர்ப்புப் போராட்டம் வடக்குக் கிழக்கு எங்கும் விஸ்தரிக்கப்பட்டது.

வடக்கே "ஸ்ரீ" எதிர்ப்புப் போராட்டம், தெற்கே பிக்குகளின் போராட்டம் என்பன பண்டாரநாயக்கவை இக்கட்டான நிலைக்குத் தள்ளின.

இந்த நிலையிலே ஒப்பந்தம் கிழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து ஜே.ஆர். தலைமையில் தென்னிலங்கையெங்கும் தமிழ் எழுத்துக்களுக்குத் தார் பூசும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் ஆங்காங்கே தமிழ் கடைகளும் தாக்கப்பட்டன.

பண்டா – செல்வா ஒப்பந்தம் கைவிடப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சி நேரடி எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்க முடிவெடுத்தது.

அதன்படி 1958ம் ஆண்டு மே மாதம் வவுனியாவில் இடம்பெற்ற மாநாட்டில் வடக்குக் கிழக்கெங்கும் சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்துவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இம்மகாநாட்டில் பங்கு கொள்ள திருகோணமலையிலிருந்து வருகை தந்துகொண்டிருந்த பேராளர்கள் கல்லோயாச் சந்தி புகையிரத நிலையத்தில் வைத்து சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டனர். இவர்களில் படுகாயங்களுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சிறு காயங்களுக்கு உட்பட்டோரும் ஏனையோரும் பேருந்துகளில் ஏறி வவுனியா வந்து மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் கண்டி யாத்திரை மூலம் மூட்டி விடப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் பல்வேறு இடங்களிலும் சிறுசிறு சம்பவங்களாக மெல்ல மெல்லப் பரவி வந்த நிலையில் தென் பகுதியில் தமிழ் எழுத்துக்களை அழிக்கும் நடவடிக்கைகளுடன் மேலும் உக்கிரமடைய ஆரம்பித்தன. இப்படியான நிலையிலேயே கல்லோயா சந்தியில் வெடித்த வன்முறைகள் கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் கொலை வெறித் தாண்டவமாக விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து வன்முறைகள் பொலன்னறுவைக்கும் பரவியது.

அதையடுத்துத் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், சூறையாடல்கள், சொத்தழிப்புக்கள், பாலியல் கொடுமைகள் என வன்முறைகள் கொழும்பு உட்பட தென்னிலங்கை முழுவதும் முடுக்கிவிடப்பட்டன.

திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக் கலவரத்தில் 1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாகக் கப்பல்கள் மூலம் வடபகுதிக்கு அனுப்பப்பட்டனர்.

எப்படியிருந்தபோதிலும் ஜே.ஆர். தலைமையில் கண்டி யாத்திரையை தொடக்கமாகக் கொண்டு ஆரம்பித்த இனக்குரோத வன்முறைகள் இன அழிப்புக் கலவரமாக விரிவடைந்து பேரழிவை ஏற்படுத்தியதுடன் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமைந்த பண்டா –செல்வா ஒப்பந்தமும் கிழித்தெறியப்படும் நிலை உருவாக்கப்பட்டது. ஜே.ஆர். தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக தொடக்கிவிடப்பட்ட வன்முறைகள் பெரும் இன அழிப்புக் கலவரமாக விரிவடைந்ததுடன் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு எட்டக்கூடிய ஒரு நல்ல சந்தர்ப்பமும் இழக்கப்பட்டது. இதன் காரணமாக இனங்களுக்கிடையே கசப்புணர்வு மேலும் மேலும் வலுவடைந்து பின்னால் வந்த மோதல்களுக்கு முக்கியமான காரணமாய் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும்

அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE