தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடியா இலங்கை அணி 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
தென்னாபிரிக்க ஜொகானஸ்பேர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குசல் பெரேரா 67 பந்துகளை எதிர்கொண்டு பதினொரு நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 60 ஓட்டங்களையும், டீ சில்வா 29 ஓட்டங்களையம், ஷமீர 22 ஓட்டங்களையும், திரிமன்னே 17 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் 157 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதலாவது இனிங்ஸ் முடிவுக்கு வந்தது.
தென்னாபிரிக்க அணி சார்பில் நோர்ட்ஜே 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களையும், முல்டர் 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இதையடுத்து தனது முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்க அணி தற்போது வரை 12 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்களைப் பெற்று ஆடி வருகிறது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மர்க்ரம் 5 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டீன் எல்கர் 29 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இனிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை