Saturday 16th of January 2021 11:47:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
எரிக்கப்படும் முஸ்லிம்களின் உடல்களும் கருக்கப்படும் மதத் தனித்துவமும்! - நா.யோகேந்திரநாதன்!

எரிக்கப்படும் முஸ்லிம்களின் உடல்களும் கருக்கப்படும் மதத் தனித்துவமும்! - நா.யோகேந்திரநாதன்!


எரிக்கப்படும் முஸ்லிம்களின் உடல்களும் கருக்கப்படும் மதத் தனித்துவமும்! - நா.யோகேந்திரநாதன்!

கடந்த வாரம் கொரோனா தொற்றில் மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத சம்பிரதாயத்துக்கு அமையப் புதைக்கப்படுவது தடுக்கப்பட்டு, அவற்றை எரிக்க வேண்டுமென அரசாங்கம் விடுத்துள்ள கட்டளைக்கெதிராக யாழ்ப்பாணத்தில் ஒரு கண்டனப் போராட்டம் இடம்பெற்றது. கொரோனா தொற்றில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் பாரம்பரிய மதமுறைப்படி அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கோரி நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி சகல தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தமிழ் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழரும், முஸ்லிம்களும் பெரும்பான்மை சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆட்சியாளர்களால் பல்வேறு வழிகளிலும் பல்வேறு விதமான கொடிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிவரும் நிலையில் முஸ்லிம் மக்களின் உரிமையை நிலைநாட்ட தமிழர்களும் ஒன்றிணைந்து போராடுவது காலத்தின் தவிர்க்கமுடியாத தேவையாகும். எனவே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மேல் இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக ஒன்றிணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதே பேரினவாத சக்திகளிடமிருந்து சிறுபான்மையினராகிய இரு சமூகங்களையும் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும். இதை முஸ்லிம், தமிழ் தலைமைகள் உணர்ந்து செயற்படாத பட்சத்தில் இரு இனங்களுமே தொடர்ந்து பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.

யாழ்ப்பாணத்தில் இப்போராட்டம் இடம்பெற்ற நாளில் புத்தளம் கொழும்பு முகத்திடல், பாலமுனை, கல்முனை ஆகிய பகுதிகளிலும் முஸ்லிம்கள் இத்தகைய போராட்டங்களை நடத்தியுள்ளனர். கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வரை ஒரு தந்தையும் எட்டு வயது மகனும் நடைபவனிப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனால் பொலிஸார் நீதிமன்ற உத்தரவைக் காட்டி அதைத் தடுத்த நிலையில் அவர்கள் வாகனமொன்றில் சென்று அக்கரைப்பற்று உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். அதே நாளில் இப்பிரச்சினை தொடர்பாகப் பலமுனைகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.

இவை மட்டுமின்றி நாட்டில் பல பகுதிகளிலும் முஸ்லிம்களின் உடல்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவேண்டுமெனக் கோரி முஸ்லிம் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு முஸ்லிம் மக்களின் மத உரிமையை மறுதலித்து அரசாங்கம் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள ஒடுக்குமுறைக்கெதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாதெனக் கோரி கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

சிஹலஉறுமய மற்றும் பல பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து முஸ்லிம் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாதெனக் கோரி இப்போராட்டம் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்றது. சுகாதார ஒழுங்கு விதிகளையும் கடைப்பிடிக்காமை தொடர்பாக பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே முறுகல் நிலை தோன்றியது.

ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் மகஜரை வாங்க வந்தபோதும் அதை அவர்கள் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். இறுதியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி வந்து மகஜரைக் கையேற்ற பின்பே அவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதா? அல்லது எரிப்பதா? என்பது தொடர்பாக நிபுணர் குழுவே தீர்மானிக்குமெனவும் அதை நாட்டின் சகல பிரஜைகளும் பின்பற்றுவது கட்டாயமெனவும் இராணுவத் தளபதியும் தொற்று நோய்த்தடுப்பு ஜனாதிபதிச் செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா தனது இராணுவ பாணியில் மிட்டியுள்ளார்.

இன்னொருபுறம் நாட்டின் மூன்று பிரதான பௌத்த மதபீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் பிரதிப்பதிவாளர் நாரம்பவே ஆனந்த தேரர் தற்போதைய நிலையில் பிரிவினைகளுக்கு இடம் கொடுக்காமல் எவ்வித அழுத்தங்களுக்கும் பணிந்து போகாமல் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற வகையில் முஸ்லிம் சடலங்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாதென வலியுறுத்தி;யுள்ளார்.

இலங்கையில் இப்போதும் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பே அமுலில் உள்ளது. அதன்படி பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள அதேவேளையில் ஏனைய மதங்களின் வழிபாட்டுரிமை, மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கான உரிமை என்பன வழங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் கொரோனாவால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதைத் தடுப்பது அப்பட்டமான அரசியல் சாசன மீறல் நடவடிக்கையாகும். இந்த மீறலை இலங்கை அரசாங்கமே மேற்கொள்கிறது என்பதில் இந்த நாட்டின் எவ்வளவு தூரம் ஜனநாயக மீறல் இடம்பெற்று வருகிறது என்பதைத் தெளிவாகவே புரிய வைக்கிறது.

நோயாளிகளின் உடல்களைப் புதைப்பதால் நோய்க் கிருமிகள் நிலத்தடி நீரில் கலந்து அந்நீரைப் பாவிக்கும் மக்களுக்கு நோயத் தொற்று ஏற்படுமெனக் காரணம் கூறப்படுகிறது. நிலத்தில் புதைக்கப்படும் உடலில் உள்ள நோய்க் கிருமிகள் மண்ணை ஊடுருவிச் சென்று நிலத்தடி நீரில் கலக்குமென்பதை மருத்துவ நிபுணர்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. கொரோனாக் கிருமிகள் காற்றினாலோ, நீரினாலோ பரவக்கூடியவையென இதுவரை எந்த மருத்துவ ஆராய்ச்சிகளும் தெரிவிக்கவில்லை. அப்படியானால் கோரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நிலத்தில் ஊறி நிலத்தடி நீருடன் கலந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. இக்கிருமிகள் தொடுகை மூலமே பரவுகின்றன என்பதாகவே கைழுவுதல், முகக் கவசமணிதல், இடைவெளிகளைப் பேணுதல் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே ஜனாஸாக்களைப் புதைப்பதன் மூலம் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. எனவே இத் தடையானது முஸ்லிம்கள் மீதான இன ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவம் என அறியமுடிகிறது.

அதில் உலக சுகாதார நிறுவனம் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால், இலங்கையிலுள்ள நிபுணர்கள் புதைப்பதால் ஆபத்து உண்டா? இல்லையா? என வாரக்கணக்கில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் முடிவு வெளிவருமுன்பே தடை அமுலுக்கு வந்து விட்டபடியால் முடிவு எப்படி அமையும் என நாம் ஊகிக்கமுடியும்.

அரசாங்கத்தினதும், பௌத்த நிறுவனங்களினதும் முடிவையே தங்கள் முடிவாக நிபுணர்கள் குழு வெளியிட்டால் ஆச்சரியப்பட்டு விடமுடியாது. பல முஸ்லிம் நாடுகள் அடக்கம் செய்வதை அனுமதித்துள்ள நிலையில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் மேற்கு நாடுகளில் அடக்கம் செய்வது தடுக்கப்படாத நிலையிலும் இலங்கையின் ஆட்சியாளர்களோ, பௌத்த மத பீடங்களோ, சில மருத்துவ நிபுணர்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது. இவர்கள் தங்கள் இனமத ஒடுக்குமுறைச் சித்தாந்தத்திற்கு சர்வதேச நியமங்களைக் கீழ்ப்படுத்தி விடுவார்கள்.

2015ம் ஆண்டுக்கு முன்பாக பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையங்களை சூறையாடுதல், எரித்தல் புனித குரான் நூலைத் தூக்கி வீதியில் எறிதல், பள்ளிவாசல்களுக்குள் பன்றி இறைச்சிகளை வீசுதல், பேருவளை தர்க்கா நகர் ஆகிய இடங்களில் தொடங்கிய இனக்குரோதத் தாக்குதல் மூலம் முஸ்லிம்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய வன்முறைகள் என்பவற்றை மறந்துவிட முடியாது. அதேவேளையில் ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து கம்பஹா மாவட்டத்திலும் வடமேல் மாகாணத்திலும் முஸ்லிம்கள் மேல் தொடுக்கப்பட்ட வன்முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவை அனைத்தையும் ஞானசார தேரர், அத்துரலிய நந்தன தேரர் உட்படப் பல பௌத்த அமைப்புகளே முன் நின்று வழி நடத்தின.

இவ்வன்முறைகள் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை என்பது முக்கிய விடயமாகும்.

இப்படியான வன்முறைகள் தொடர்பாக முஸ்லிம் தலைமைகள் உரிய முறையில் தங்கள் எதிர்ப்புகளை வெளியிடவில்லை. சில கண்டன அறிக்கைகளுடன் தங்கள் எதிர்ப்புக் குரலை மட்டுப்படுத்திக் கொண்டனர். மாறிமாறி இரு அரசாங்கங்களிலும் ஒட்டிக்கொண்டே காலத்தைக் கடத்தினர்.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் தலைவர்கள் ஆட்சியாளர்களுடன் ஒரு மென்மையான உறவைப் பேணிவர அடுத்த கட்டமாக இனவாதிகள் முஸ்லிம்களின் பாரம்பரிய வழக் கத்திலேயே கைவைத்தனர்.

முஸ்லிம் பெண்கள் அவர்களின் பாரம்பரிய உடையான 'பர்தா' அணியக் கூடாதென இனவாதிகள் கூக்குரலிட ஆரம்பித்தனர். சில இடங்களில் பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் மீது வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. வாழைச்சேனையில் "பர்தா" அணிந்து வந்த இரு முஸ்லிம் பெண்களின் பர்தாவை நடு வீதியில் வைத்துக் கிழிக்கமுயன்றனர். அவர்கள் ஓடிச் சென்று தபால் நி;லையத்தில் புகுந்து தப்பிக் கொண்டனர். இவ்வாறே மட்டக்களப்பில் ஒரு பொலிஸ் அதிகாரி, மோட்டார் சைக்கிள் பின் ஆசனத்தில் அமரும் பெண்கள் இரு புறமும் கால்களைப் போட்டு அமரவேண்டுமெனக் கட்டளையிட்டார். இவ்வாறானால் பர்தா அணியும் பெண்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்கமுடியாது.

எவ்வாறு முஸ்லிம்கள் மீது வன்முறைகள் ஏவி விடப்பட்டபோது முஸ்லிம் தலைமைகள் ஒரு நழுவல் போக்கைக் கைக்கொண்டனரோ அவ்வாறே முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பேணும் பர்தா தொடர்பான அநீதிகளுக்கெதிராகவும் பொங்கியெழத் தவறி விட்டனர். குறைந்தபட்சம் தங்கள் அமைச்சுப் பதவிகளை விட்டு வெளியேறித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதைக் கூடச் செய்யவில்லை.

இவ்வாறு தொடர்ந்து முஸ்லிம் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட விட்டுக்கொடுப்புகள் அவர்கள் இனத் தனித்துவத்தின் மீது கை வைக்கும் இரண்டாவது கட்டத்துக்கான வாய்ப்பை உருவாக்கிவிட்டது. அதாவது முதலாவதாக முஸ்லிம் பெண்களின் பர்தாவில் தொடங்கி இரண்டாவதாக மையங்களை அடக்கம் செய்வதில் வந்து நிற்கிறது.

கடந்த காலங்களில் தமிழர், முஸ்லிம்கள் என இரு சமூகங்களும் சிங்களப் பேரினவாதிகளாலும் சிங்கள ஆட்சியாளர்களாலும் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் என்ற வகையில் ஒன்றிணைந்து நேச சக்திகளாகச் செயற்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், ரிசாட் பதியுதீன் முதலியோர் தமிழ் மக்களுக்கு எதிராகவே காலங்காலமாகச் செயற்பட்டு வந்தனர். விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதைச் சொல்லிச் சொல்லியே தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கினர். ரிசாட் பதியுதீன் மன்னாரிலும் முல்லைத்தீவிலும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பது, வீட்டுத் திட்டங்களில் அநீதி இழைப்பது போன்ற விடயங்களை மேற்கொண்டு தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை வளர்த்தார். எந்த அரசாங்கத்தைத் திருப்திப்படுத்த தமிழ் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாரோ அதே அரசாங்கமே இப்போது அவரைச் சிறையில் தள்ளியது.

இவ்வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை ஆட்சியதிகாரம் உட்படப் பல விடயங்களில் விட்டுக்கொடுத்தாலும் அவர்கள் தமிழ்த் தரப்பை விட ஆட்சியாளர்களுடன் நெருங்கிச் செயற்படுவதிலேயே கூடிய அக்கறை செலுத்தினர்.

முஸ்லிம் தலைமைகள் தமிழர்களைப் போன்று தாங்களும் சிறுபான்மையினர் என்பதை உணர்ந்து தமிழ்த் தரப்புகளுடன் இணைந்து செயற்படுவதற்குப் பதிலாக ஆட்சியிலுள்ள அரசாங்கத்துடன் இணைந்ததன் காரணமாக அவர்களின் பாரம்பரிய மதக் கடமைகளுக்கே ஆபத்து உருவாகியுள்ளது.

எதிர்காலத்தில் இந்துக்களின் திருமணங்களின்போது ஓமம் வளர்ப்பதாலும் கிறிஸ்தவத் தேவாலயங்களில மெழுகுதிரி கொளுத்துவதாலும் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுகிறது எனச் சொல்லி அவற்றைத் தடை செய்யும்படி பௌத்த அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஆச்சரியப்பட இடமில்லை.

எனவே தமிழ், முஸ்லிம் தரப்புகள் இலங்கையில் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற வகையில் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே இரு சமூகங்களும் பேரினவாத ஒடுக்குமுறைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

பர்தா அணிவதைத் தடுத்தல், ஜனாசாக்களை அடக்கம் செய்வதைத் தடுத்தல் போன்ற இனத்துக்குரிய தனித்துவமான பாரம்பரிய முறைகளை வலுவிழக்கச் செய்தல் போன்றவை இன அழிப்பின் ஒரு பகுதி என்பது உணரப்படவேண்டும்.

அருவி இணைத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

05.01.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE