Monday 19th of April 2021 10:01:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவின் செல்வாக்குக்கு எதிரான நகர்வை மட்டும் தான் இலங்கையின் இறைமை எனக் கருதுகிறதா அமெரிக்கா ?

சீனாவின் செல்வாக்குக்கு எதிரான நகர்வை மட்டும் தான் இலங்கையின் இறைமை எனக் கருதுகிறதா அமெரிக்கா ?


இலங்கை அரசியலில் வெளியுறவுக் கொள்கை அதன் இருப்பினைத் தீர்மானிக்கும் பலமுடையது என்பது கடந்தகாலம் முழுவதும் அவதானிக்கக் கூடிய விடயமாக அமைந்திருந்தது. அத்தகைய போக்கினையே தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறது. அதில் இலங்கையின் தற்போதைய போக்கில் இந்தியா சீனா அமெரிக்கா எனும் சக்திகளுடன் நட்புறவு வைத்துக் கொள்வதில் பின்பற்றிவரும் உத்திகளை புரிந்து கொள்வது அவசியமானது. இந்தியா அமெரிக்கா ஓரணியில் செயல்பட்டாலும் இலங்கை இரு நாடுகளையும் தனித்தனியே கையாளும் போக்கினைத் தனித்துவமான உபாயமாக கடைப்பிடிதி;துவருகிறது. சீனாவுடனான உறவை அகரீதியிலும் புறவயமாகவும் தெளிவு படுத்தியுள்ளதுடன் அமெரிக்க இந்தியாவை கையாள்வதில் வெற்றி கண்டுவருகிறது. அமெரிக்க இந்தியத் தரப்புகள் சீனாவை அகற்றுவதற்கான நலன்களை பிரயோகிக்கின்றதை காணமுடிகிறது.அதில் பிரதான அங்கமான இலங்கைத் தமிழரது விடயங்களை முன்னகர்த்;துவதும் பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் சமரசம் செய்வதுமாக 2009 பின்னான அரசியலை பயன்படுத்திவருகின்றன. இதில் இன்னோர் கட்டம் தற்போது அரங்கேறிவருகிறது. இக்கட்டுரையும் அத்தகைய சீன செல்வாக்கினை இலங்கையிலிருந்து அகற்றுவதற்கான வரைபுகளை அமெரிக்க காங்கிரஸ்ல் முன்வைக்கும் நிலையை விபரிப்பதாக உள்ளது.

சீனாவின் செல்வாக்குக்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மாத்திரமே இலங்கைக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கப்படும் என்ற நிபந்தனையை அமெரிக்க காங்கிரஸ்ல் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய இலங்கையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் உறுதிசெய்தால் மாத்திரமே அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமென அச்சட்டமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்;டுள்ளது. அது மட்டுமன்றி இலங்கையில் இன மற்றும் மதக் குழுக்களுக்கிடையே நல்லிணக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஆட்சி முறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிக்க வேண்டும் என்பதோடு இலங்கை மக்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தை அவர்களின் இன மற்றும் மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் எனவும் அவற்றை உறுதி செய்ய உறுதி செய்ய வேண்டும் எனவும் அச்சட்ட மூலத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. மேலும் குற்றங்களில் ஈடுபுட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இதனை நோக்கும் போது அமெரிக்காவின் நலனுக்குட்பட்ட விடயங்களை இலங்கை ஆட்சித்துறை மேற்கொள்ளும் போது மட்டுமே நிதி உதவிகளை வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்க காங்கிரஸ் எடுத்துள்ளது தெளிவாகிறது. அது மட்டுமல்ல உலக நாடுகளின் இறைமையை முதன்மைப்படுத்தும் நாடாக அமெரிக்கா மாறியுள்ளமை இலங்கையிலிருந்து சீனாவை வெளியேற்றுவதற்கு மட்டுமானதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம் கொவிட்-19 பின்னர் நாடுகள் அதிகம் முதன்மைப்படுத்தும் விடயமாக இறைமை விளங்குகிறது. இறைமையின் பெயரால் மக்களும் சிறிய தேசியங்களும் அதிகம் நெருக்கடிக்குள்ளாகும் யுகம் ஒன்றுக்குள் பிரவேசிக்கும் நிலை ஏற்பட்டுவருகிறது. குறிப்பாக மத்திய ஆசியக் குடியரசுகளும் ஆபிரிக்க நாடுகளும் இலத்தீனமரிக்க கண்டத்து நாடுகளும் இறைமையின் பெயரால் சர்வாதிகார அணுகுமுறையும் இராணுவத்தின் மேலாதிக்கமும் தனிமனித ஆட்சிக்கான நீடிப்புகளும் நிகழ ஆரம்பித்துள்ளன. அந்த வரிசைக்குள் இலங்கை நகருமை; வெளித் தோற்றம் ஒன்றினைக் காணமுடிகிறது என்ற விமர்சனம் தென் இலங்கை புத்திஜீவிகளால் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. மக்கள் இறைமை என்ற பிரயோகம் அரசியலமைப்புக்குள் அடக்கப்பட்டுள்ளதே அன்றி நடைமுறையில் அரசின் இறைமை ஆட்சியாளரின்’ இறைமையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.இது புராதன இறைமைக் கோட்பாட்டின் வடிவமே அன்றி அதன் விருத்திக் கட்டங்கள் எதனையும் கொள்ளவில்லை என்றே குறிப்பிடலாம்.

இதில் அமெரிக்கரது வாதம் சீனாவினை வெளியேற்றும் இலங்கையின் கொள்கையை இறைமை எனக்கருதுகிறது. ஆனால் இலங்கை ஆட்சியாளரும் தீவிர போக்குடைய அரசியல் வாதிகளும் பௌத்த மகாசங்கத்தினர் சிலரும் இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கைக்குள் செல்வாக்குச் செலுத்துவதனை இலங்கையின் இறைமைக்கு விரோதமானது எனக் கருதுகின்றன.அதே நேரம் சீனாவின் இலங்கை மீதான செல்வாக்கினை இலங்கையின் இறைமைக்கு உட்பட்டதென்ற கருத்து நிலையைக் கொண்டுள்ளன. சீனாவின் உறவினால் இலங்கையின் இறைமை பாதுகாக்கப்படுவதாகவே அத்தகைய தரப்புக்கள் முட்டுமல்ல அரசாங்கமே கருதுகிறது. காரணம் இலங்கைக்குள் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியையும் சர்வதே அளவில் ஏற்பட்டுவரும் அரசியல் நெருக்கடியையும் தீர்த்து வைக்கும் சீனாவுடனான நெருக்க இறைமையைப் பாதிக்காது எனக் கருதுகிறது.அதாவது சீனா இலங்கையின் இறைமையை பாதுகாக்கின்ற நாடாக விளங்குகிறது. இலங்கைக்க விஜயம் செய்த சீனத் தூதுக்குழுக்களும் இலங்கை;கான தூதுவரும் பலதடவை உறுதிப்படுத்திய விடயம் இலங்கையின் இறைமையைப் பாதுகாப்பதாகவே உள்ளது. அதனடிப்படையிலேயே இலங்கை அரசாங்கமும் சீனா தொடர்பிலான செல்வாக்கினை இறைமைசார்ந்து மீறலாக கருதமுடியாதுள்ளது.

இறைமையானது அதன் அர்த்தத்தில் உலக அரசுகளிடம் இல்லை என்றே கூறலாம். சந்தையும் வர்த்தகமும் பொருளாதார வளங்கள் தொடர்பிலான ஆட்சியாளரின் அணுகுமுறைகளும் இறைமையை காணாமல் செய்துள்ளன. வளங்களினை கைப்பற்றுவதற்கும் அரசுகளின் எல்லைகளை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக தோன்றிய இறைமைக் கோட்பாட்டை அரசுகள் தற்போது உடன்பாடுகளுக்கூடாகவும் கூட்டு ஒத்துழைப்புக்கூடாகவும் பரஸ்பரம் ஆட்சியை தக்கவைப்பதற்கூடாகவும் இழந்து வருகின்றன. மக்களிடமிருந்து இறைமையை பெற்றுக் கொள்ளும் ஆட்சியாளர்கள் தமது நலன்களையும் பிராந்திய சர்வதேச சக்திகளின் நலன்களையும் பாதுகாக்ப்பதற்காக பிரயோகப்படுத்துகின்றனர். அதனையே இறைமை எனக்கருதுகின்றனர்.

எனவே அமெரிக்கர்கள் இலங்கையின் இறைமையை பாதுகாக்க முனைகின்றனர் என்பதை விட சீனாவை வெளியேற்றுவதன் மூலம் அமெரிக்க நலன்களை தக்கவைத்துக் கொள்ளலாம் எனக்கருதுகினிறனர்.அதனடிப்படையில் ஒன்று அமெரிக்கா தலைமையில் வகுக்கப்பட்ட இந்தோ-பசுபிக் உபாயம் பாதிப்பினை சீன -இலங்கை நெருக்கத்தினால் ஏற்படும் என அமெரிக்கா கருதுகிறது. அதனையே இலங்கையின் இறைமையுடன் தொடர்புபடுத்தி சீனாவின் செல்வாக்கினை அகற்ற முனைகிறது. இலங்கையின் இறைமை பாதிப்படைவதென்பது மக்கள் சார்ந்த அரசியலாகவும் எதிர்தரப்பின் அரசியலாகவும் உருவாக்கி எதிர்காலத்தில் ஆட்சி மாற்றத்திற்கான முனைப்புகளை சாத்தியப்படுத்தலாம் என கருதி செயலி;படுகிறது.

இரண்டு இந்தோ-பசுபிக் தந்திரோபாயம் பாதிப்படையுமாயின் இந்தியாவின் நலன்களும் பாதிப்படைவதுடன் பிராந்திய ரீதியில் சீனாவின் கை ஓங்கிவிடும் என அமெரிக்கா கருதுவதன் நிமித்தமே இறைமை பற்றிய உரையாடலை தொடக்கியுள்ளது. இது மறுவழமாக சீனாவின் ஓரே சுற்று ஓரே பாதைத்திட்டதை வெற்றிகரமானதாக்கிவிடும் என்ற எதிர்முனைப்புடனேயே இலங்கை விடயத்தை அமெரிக்கா நோக்குகிறது.

மூன்று அமெரிக்காவின் எம்சிசி உடன்பாட்டின் மூலம் திட்டமிட்ட திருகோணமலை நகர உருவாக்கம் மற்றும் துறைமுகம் மீதான ஆதிக்கம் எனும் நலன்கள் பாதிப்படைந்துள்ளதை காணமுடிகிறது. இத்தகைய உடன்படிக்கையை இலங்கை நிராகரித்ததற்கு பின்னால் இறைமை ஒரு கருதுகோளாக இருந்துள்ளது. அதனை இலங்கையில் எழுந்த எதிர்ப்புவாதங்கள் தெளிவாகப் புலப்படுத்தியிருந்தன. எனவே தான் அமெரிக்கா சீனாவின் செல்வாக்கினையும் அத்தகைய இறைமைக் கோட்பாட்டுக்குள் வகைப்படுத்த விளைகிறது.

நான்கு இவ்வாறு அமெரிக்க நலன்கள் பாதிப்படையவும் சீவின் நலன்கள் மேலோங்கவும் உலகளாவிய அமெரிக்க வாய்ப்புகள் பலவீனமடையும் என்ற எண்ணமே இலங்கையின் இறைமை சார்ந்த அமெரிக்க உரையாடலுக்கு காரணமாகும். இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் அணுகுமுறை ஒவ்வொன்றும் நெருக்கடியை எதிர்கொள்கிறதென்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையுடன் எப்படியாவது உறவு கொள்ள வேண்டிய நிலைக்குள் அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளதையே 2020 இன் அமெரிக்கப் பதிவாக உள்ளது.

எனவே அமெரிக்கா ஜெனீவாவில் தமிழருக்காக எந்த தீர்மானத்தையும் இதுவரையும் கொண்டுவரவுமில்லை. எதிர்காலத்திலும் கொண்டுவரப் போவதில்லை என்பதை தமிழ் தரப்பு புரிந்து கொள்வது அவசியமானது. சீனாவின் செல்வாக்கை இலங்கையிலிருந்து அகற்றுவதற்காகவே நிதி வழங்குவதும் தீர்மானங்கள் முன்வைப்பதும் உபாயமாகக் கொண்டுள்ளது. தமிழரது பிரச்சினைக்கான தீர்வை தமிழரே கண்டறியவேண்டும். அமெரிக்காவும் பிரிட்டனும் தமது நலனுக்காகவே தீர்மானங்களை உலகிலுள்ள நாடுகள் மீது ஐ.நா விலும் பிற அமைப்புக்களிலும் முன்வைத்து வருகின்றன. அதற்காக அந்த நாடுகளில் பிரச்சினை இல்லை என்பது அர்த்தமல்ல. அத்தகைய பிணக்குகளை தமது நலனுக்கு வல்லரசுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.றோஹிந்திய முஸ்லீம்கள் போன்று இத்தகை நாடுகளின் ஆதரவை முன்னிறுத்தி தமிழ் அரசியல் மற்றும் செயல்பாட்டாளர்கள் தீர்மானங்களை கொண்டுவருதல் வேண்டும். அதுவே ஆரோக்கி-யமான விளைவைத் தமிழருக்கு தரும். இது அமெரிக்காவுக்கு பிரிட்டனுக்கு இலங்கையுடனான உறவை சீர் செய்ய உதவுவதாக அமையுமே அன்றி வேறு எந்த விளைவும் ஏற்படாது. அமெரிக்கா உலக நாடுகளுக்கு நிதி வழங்குவதே அமெரிக்க நலனைப் பாதுகாப்பதற்காகவே. அவ்வாறுதான் அதனால் உருவாக்கப்பட்ட நிதி நிறுவனங்களது பணிகளுமாகும். இது அமெரிகாவின் உலகளாவிய ஆதிக்கம் பலவீனமடைவதனை அடையாளப்படுத்துகிறதா என்ற கேள்வியை தருகிறது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்r


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE