Saturday 20th of April 2024 06:07:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
ட்ரம்பை உடனடியாகப் பதவி நீக்க வேண்டும் என  இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி வலியுறுத்து!

ட்ரம்பை உடனடியாகப் பதவி நீக்க வேண்டும் என இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி வலியுறுத்து!


அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டத்துக்குள் புகுந்து நேற்று நடத்திய வன்முறையை அடுத்து ட்ரம்பை உடனடியாகப் பதவி நீக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

டிரம்பின் பதவிக் காலம் முடிவடைய இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில் அதற்கிடையில் அவர் பதவி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் அழுத்தமாக விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் அபார வெற்றி பெற்று ஜனவரி 20-ஆம் திகதி ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

எனினும் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக ஆதாரம் இன்றி தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார். இது ட்ரம்ப் மீது அமெரிக்கர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை ட்ரம்ப் மீதான அதிருப்தி அலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

தனது ஆதரவாளர்களைத் தூண்டும் வகையில் டிரம்ப் பேசியதாகவும், இந்த கலவரத்துக்கு அவரே பொறுப்பு என்றும் அவரது சொந்தக் கட்சியினரே குற்றம்சாட்டிவருகின்றனர்.

இதற்கிடையில் இவ்வாறான மோசமான வன்முறைக்குத் தூபமிட்ட ட்ரம்ப் தொடர்ந்து ஒரு நாள்கூட பதவி வகிக்கக்கூடாது என ஜனநாயக கட்சி செனட்டர் ஷூமர் தெரிவித்துள்ளார்.

தற்போது செனட்டில் பெரும்பான்மை பெற்றிருக்கிற ஜனநாயக கட்சிக் குழுவுக்கு அடுத்த மாதம் தொடங்கவுள்ள புதிய கூட்டத்தில் இருந்து ஷூமர் தலைமை வகிக்கவுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது திருத்தத்தைப் பயன்படுத்தி ட்ரம்பை பதவி நீக்கவேண்டும் என்று அவர் கோருகிறார். உடல், உள ரீதியாக ஜனாதிபதி ஒருவர் பாதிக்கப்பட்டு தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும்போது துணை ஜனாதிபதி அந்தப் பொறுப்புக்கு வர இந்த திருத்தம் வழி செய்கிறது.

ஆனால் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் 8 அமைச்சரவை உறுப்பினர்கள் உடன்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

எனினும் ட்ரம்ப் மிக ஆபத்தான நபர் என்று குறிப்பிட்டுள்ள அவைத்தலைவர் நான்சி பெலோசி, அமெரிக்காவில் மிகப் பெரிய அவசர நிலை உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் அமைச்சரவை சகாக்கள் 25-ஆவது திருத்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், கண்டனத் தீர்மானத்தின் கீழ் ட்ரம்பை தண்டிக்கவேண்டுமானால், அதற்கு செனட்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். அதற்கு ஜனநாயக கட்சியினர் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றாகவேண்டும்.

இந்நிலையில் ட்ரம்பை பதவி நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சி மட்டுமன்றி ஆளும் கட்சியிலிருந்தும் குரல்கள் வலுவடைந்துள்ளபோதும் இன்னும் 12 நாட்களே பதவிக் காலம் இருக்கும் நிலையில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

எனினும் இவ்வாறான ஒரு கோரிக்கையுடன் மிகவும் அவமானகரமாகவே ட்ரம்ப் பதவி விலகும் நிலை அவரால் வித்திடப்பட்ட கலவரத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE