Saturday 20th of April 2024 10:33:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
பீஜிங் அருகே 11 மில்லியன் மக்கள் வசிக்கும்  ஷிஜியாஜுவாங் நகரம் முடக்கப்பட்டது!

பீஜிங் அருகே 11 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷிஜியாஜுவாங் நகரம் முடக்கப்பட்டது!


பீஜிங்கிற்கு அண்மையில் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் ஏபெய் மாகாண தலைநகரான ஷிஜியாஜுவாங் நகரில்அதிக கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

ஷிஜியாஜுவாங் நகரில் வசிப்பவர்கள் நகரத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், நகருக்கு வந்து-செல்லும் விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.

ஷிஜியாஜுவாங்கில் புதன்கிழமை மொத்தம் 117 கோவிட் -19 நோய்த்தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். அத்துடன், கொரோனா அறிகுறிகளுடன் 67 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நகரத்தை முடக்கும் தீா்மானம் எடுக்கப்பட்டது.

ஜனவரி 2-ஆம் திகதி முதல், ஏபெய்மாகாணத்தில் மொத்தம் 304 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவர்கள் ஷிஜியாஜுவாங் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என ஏபெய் மாகாண சுகாதார ஆணையகம் அறிவித்துள்ளது.

ஷிஜியாஜுவாங் நகரம் பீஜிங்கிலிருந்து தென்மேற்கே 180 மைல் (289.6 கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ளது.

தொற்று நோயாளர் தொகை அதிகரித்துள்ளமையை அடுத்து அவசரநிலைகளைத் தவிர்த்து, ஷிஜியாஜுவாங்கில் இருந்து அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் வாகனங்களுக்கும் வெளிச்செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை அறிவித்தனர்.

நகரத்திற்குள் ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

2019 டிசம்பரில் சீனாவின் ஹூபோ மாகாணம் வுஹானில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்தது. இதனையடுத்து வுஹான் நகரம் முழுமையாக முடக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் அந்த சமூக முடக்கலை நினைவூட்டும் வகையில் ஷிஜியாஜுவாங் நகர கட்டுப்பாடுகள் அமைந்துள்ளன.

சீனாவில் சந்திர புத்தாண்டு விடுமுறைக்கு சில வாரங்களே உள்ள நிலையில் மீண்டும் தொற்று நோய் அதிகரித்துள்ளமை இயல்வு நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு சந்திர புத்தாண்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சீன அரசாங்கம் வுஹானை முற்றாக முடக்கும் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அதற்கு முன்னரே மில்லியன் கணக்கான மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில் இந்த ஆண்டு சந்திர புத்தாண்டை ஒட்டி அதிகரிக்கும் பயணங்களால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, விடுமுறைக் காலத்தில் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சீனர்களை சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஷெஜியாஜுவாங்கில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் கடந்த வாரம் முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

நகரில் உள்ள 11 மில்லியன் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு 3,000 சுகாதாரப் பணியாளர்கள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை வரை 6 மில்லியனுக்கும் அதிகமானவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 2 மில்லியனுக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஷெஜியாஜுவாங் நகர துணை மேயர் மெங் சியாங்காங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மில்லியன் கணக்கானவர்களிடையே பெருமெடுப்பில் நடத்தப்பட்ட சோதனைகளில் 11 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் மெங் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE