Thursday 25th of April 2024 03:48:41 PM GMT

LANGUAGE - TAMIL
.
இனப் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வே வேண்டும்: ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியிடம் சிவிவி உறுதிபடத் தெரிவிப்பு!

இனப் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வே வேண்டும்: ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியிடம் சிவிவி உறுதிபடத் தெரிவிப்பு!


தமிழர்கள் எதிர்நோக்கி வரும் இனப்பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காணப்பட்டேயாக வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கர் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவரின் அலுவலகத்திற்கு சென்று இன்று மதியம் சந்தித்தார்.

அப்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. போரின் பின்னரான வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, தேர்தலின் பின்னர் அங்கு காணப்படும் நிலைமை, கட்சிகளின் நிலவரம், அவர்களிடையேயான வேற்றுமைகள், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு நன்மையை வழங்கலாம் என்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

அதன் பின்னர் ஜெனிவாவில் வரும் மார்ச் மாதத்தில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் மற்றும் வருங்காலத்தில் பொருளாதார ரீதியாக வட கிழக்கு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் செய்யக்கூடிய நன்மைகள் எவை என்பது பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அதற்கு பதிலளித்த நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி பயணித்தால் போரின் பின்னர் வட கிழக்கிற்கு ஏதேனும் நன்மைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதா என்று அறிந்து கொள்ளலாம் என பதிலளித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஹெனா சிங்கர், தான் ஒரு முறை தான் வடக்கு நோக்கி வந்ததாகவும் அவ்விடங்கள் கிராமப்புறங்கள் போல காட்சியளிப்பதாகவும் கூறினார்.

அதற்கு பதிலளித்த நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் போரின் பின் 11 வருடங்களாகியும் வடக்கு மாகாண நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார். அவ்வாறு முன்னேற்றம் ஏற்படுவதை மத்திய அரசாங்கம் விரும்பவில்லை என்பதே யதார்த்தம் என்றார்.

தேர்தல் பற்றி குறிப்பிடும் போது கொள்கைகளில் இருந்து பிறழ்ந்ததனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கி வெகுவாக குறைந்தது என்று கூறினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதனுடைய ஆரம்பகால முக்கிய குறிக்கோள்களை மறந்துவிட்டதால்த் தான் மக்கள் மற்றைய கட்சிகளை நாட வேண்டியிருந்தது என்று கூறினார்.

தமிழ் மக்களுக்கு போரின் போதும் அதன் பின்னரும் நேர்ந்தவற்றைப் பற்றி முற்றாக அறிந்து கொண்டால்த் தான் ஐக்கிய நாடுகள் சபை வட கிழக்கிற்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம். தமிழ் மக்களுக்கு நேர்ந்த பல கொடூரங்களையும் துன்பியல் நிகழ்வுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால்த்தான் தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். முதலாவது அவர்களுக்கு நியாயமான அரசியல்தீர்வு வேண்டும். இரண்டாவது அங்குள்ள மாணவ மாணவியரின் கல்வி நிலை உயர வேண்டும். மூன்றாவது தொழில்களை உருவாக்க பல செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயம் சம்பந்தமாகவும் மீன்பிடி சம்பந்தமாகவும் நவீன அணுகுமுறைகளை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். குளங்கள் தூர்வாரப்பட்டு புனருத்தாரணஞ் செய்யப்பட வேண்டும். உள்நாட்டு மீன் வகைகள் இவற்றில் வளர்க்கப்பட வேண்டும். கிராமங்கள் தோறும் இருக்கும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும். அங்கு கணணி வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். உள்ள10ர் கிராம வீதிகள் செப்பனிடப்பட வேண்டும்.

வடக்கையும் கிழக்கையும் கிழக்குக் கரையோரமாக இணைக்க கடுகதி பெருந்தெருவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று கூறி இவ்வாறு பல விடயங்களை வதிவிடப் பிரதிநிதிகளுக்கு வலியுறுத்தினார்.

முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரிகள் வந்த போது அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஆவணங்களின் பிரதிகளை திருமதி.சிங்கர் அவர்களிடம் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் கையளித்தார்.

மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுமா என்று கேட்ட போது இந்தியாவின் அனுசரணை இல்லாமல் 13வது திருத்தச் சட்டத்தை கைவாங்க முடியாது என்று கூறி தமிழர்களுக்குக் கூடிய வலுவுள்ள ஓர் அரசியல் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலேயொழிய 13வது திருத்தச் சட்டத்தை நீக்க இந்தியா இடமளிக்காது என்று கூறினார். இவ்வாறு பலவாறான விடயங்கள் இரு தரப்பினரிடையேயும் ஆராயப்பட்டன. ஈற்றில் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.


Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE