Friday 19th of April 2024 07:49:06 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்ராறியோவில் உடன் அமுலாகும்  வகையில் அவசர நிலை அறிவிப்பு!

ஒன்ராறியோவில் உடன் அமுலாகும் வகையில் அவசர நிலை அறிவிப்பு!


ஒன்ராறியோவில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மற்றொரு மாகாணம் தழுவிய அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வியாழக்கிழமை 12:01 மணி முதல் அத்தியாவசிய தேவைகளைத் தவிர அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறத் தடை அமுலாகிறது. 28 நாட்களுக்கு இந்தத் தடை அமுலில் இருக்கும் என மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார்.

மேலும் குறிக்கப்பட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து தொலைக்கல்வி மூலமான செயற்பாடுகளே இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா தொற்று நோயாளர் தொகை அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. அத்துடன், கொரோனா மரணங்களும் உயர்ந்து வருகின்றன.

இந்நிலையிலேயே தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, மக்கள் 28 நாட்கள் வீடுகளில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ் பார்க்கில் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாகாண முதல்வர் டக் போர்ட் அரசின் இந்த உத்தரவுகளை அறிவித்தார்.

புதிய அவசர நிலை அறிவிப்பின் கீழ் அத்தியாவசிய பொருட்களை வாங்குதல், மருத்துவத் தேவைகள் தவிர அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் தொற்று நோய் பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஒரே விடயம் தவறான பாதையில் செல்கிறது. அது வைரஸ் தீவிர பரவல் என முதல்வர் டக் போர்ட் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

ஒன்ராறியோவில் டிசம்பர் 26 முதல் மாகாணம் தழுவிய சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக இப்போது சுகாதார அவசரகால நிலை அமுல் செய்யப்பட்டுள்ளது.

புதிய அவசரகால அறிவிப்பு தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் மாகாண அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்குகிறது.

வணிக நிறுவனங்களை மூடவும் நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களைத் தடை செய்யவும் மாகாண மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறுவதைத் தடை செய்யவும் இதன் மூலம் மாகாண அரசுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்கிறது.

அவசரகால உத்தரவை மீறி வீடுகளை விட்டு வெளியேறுவோர், முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடுவோர் மற்றும் அறிவிக்கப்பட்ட ஏனைய சுகாதார வழிகாட்டல்களைப் பேணாதவர்கள் இந்த உத்தரவின் கீழ் தண்டனை பெறுவார்கள் மற்றும் தண்டம் விதிக்கப்படும்.

அனைத்து அரச சட்ட அமுலாக்கப் பிரிவினருக்கும் எந்தவொரு வளாகத்தையும் தற்காலிகமாக மூடவும் அரசின் உத்தரவுகளை மீறுவோரைக் கலைக்கவும் அவசரகால நிலையின் கீழ் அதிகாரங்கள் உள்ளன.

ஒரு வளாகத்தை தற்காலிகமாக மூடுவதற்கும் உத்தரவுக்கு முரணாக நடந்துகொள்ளும் மக்களைக் கலைப்பதற்கும் அவசரகால நிலையின் கீழ் அரசுக்கு அதிகாரம் உண்டு என மாகாண சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் முதல்வருடன் இணைந்து பங்கேற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டாவது அவசரகால உத்தரவு இதுவாகும். கடைசியாகப் பிறப்பிக்கப்பட்ட அவசரகால உத்தரவு ஜூலை 24 அன்று காலாவதியானது. ஆனால் அதன் கீழ் வழங்கப்பட்ட 47 அவசர உத்தரவுகளில் பல தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தன.

புதிய உத்தரவின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் குறுகிய நேரமே இயங்க முடியும். அத்துடன், வெளிப்புறங்களில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஒன்றுகூடக்கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 10 இல் இருந்து ஐந்தாகக் குறைக்கப்படும் எனவும் முதல்வர் டக் போர்ட் அறிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE