Friday 19th of April 2024 09:38:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
கடலில் விழுந்த இந்தோனேசிய  விமானத்தின் ஒரு கருப்பு பெட்டி மீட்பு!

கடலில் விழுந்த இந்தோனேசிய விமானத்தின் ஒரு கருப்பு பெட்டி மீட்பு!


62 பேருடன் கடந்த சனிக்கிழமை கடலில் விழுந்து காணாமல் போன இந்தோனேசிய போயிங் 737 விமானத்தின் கருப்புப் பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஜாவா கடலில் இந்த விமானம் விழுந்தது.

காணாமல் போயிருந்த இந்த விமானத்தின் சிதைவுகள் கடலில் இருந்து மீட்கப்பட்டன. அத்துடன் விமானத்தில் இருந்தவர்களில் பணிப்பெண் ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ச்சியான தேடுதலில் பின்னர் தற்போது விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கருப்புப் பெட்டியும் மீட்கப்படும் பட்சத்தில் விமானம் விழுந்ததற்கான காரணம் குறித்த முக்கிய தகவல்களை அறிய முடியும் என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பல மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த விமானம், கடந்த டிசம்பர் 14ஆம் திகதி நடத்தப்பட்ட தகுதிகாண் பரிசோதனைக்கு பிறகே மீண்டும் பறக்க அனுமதி வழங்கப்பட்டதாக அந்த நாட்டின் போக்குவரத்துத்துறை நேற்று செவ்வாய்கிழமை அறிவித்தது.

கடந்த சனிக்கிழமையன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் 10,900 அடி உயரத்தை எட்டியதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு, அது திடீரென செங்குத்தாக சரிந்து 250 அடியை எட்டியதாக தெரியவந்துள்ளது.

விமானத்தின் சேதமடைந்த இறக்கையிலுள்ள விசிறியுடன் விசையாழி வட்டும் (Turbine disc) கிடைத்துள்ளதால், விமானம் நடுவானில் வெடித்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் தவறானது என்று தெரியவந்துள்ளதாக அந்த இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் தலைவர் சூர்ஜான்டோ தஜ்ஜோனோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடலிலிருந்து மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்களை கொண்டு முதல்கட்ட ஆய்வுகள் முழு வீச்சில் நடந்துவந்தாலும் இந்த விசாரணை முழுமையாக நிறைவடைய ஒரு வருடம் வரை ஆகுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடலில் விழுந்த விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 7 பேர் சிறுவர்கள், 3 பேர் குழந்தைகள் என்றும் இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் புடி கர்ய சுமாடி தெரிவித்தார்.

இந்த விமானத்தில் இருந்த ஒருவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE