Wednesday 20th of January 2021 09:03:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
புள்ளியில் கருவான ஒற்றுமையை புலரும் தமிழ்ப் புத்தாண்டில் புதிய யுகமாக்குவோம்!

புள்ளியில் கருவான ஒற்றுமையை புலரும் தமிழ்ப் புத்தாண்டில் புதிய யுகமாக்குவோம்!


தைத்திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்பது தமிழர்களின் தேசிய விழா, மதங்களைக்கடந்து தமிழர்களை இனத்தால் ஒன்றிணைக்கும் ஒரேயொரு தனிப்பெரும் சூரியப்பெருவிழா. திருவள்ளுவர் ஆண்டு 2052 கொரோணா வைரசு பெருந்தொற்று நீங்கி புதுப்பொலிவுடனும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் ஆண்டாக மலரட்டும். ஜெனிவா விடயத்தை கையாள்வது எனும் ஒற்றைப் புள்ளியில் தாயகத் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுவரும் கட்சிகள் உள்ளிட்ட தரப்பினரிடம் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை புலருகின்ற புதிய தமிழ்ப் புத்தாண்டில் புதிய யுகமாக்கும் வகையில் நீடித்து நிலைத்ததாக மாற்றியமைப்போமென மண்ணுறங்கும் மாவீரர்கள் மற்றும் தமிழ் மக்களது கல்லறைகள் மீது உறுதி செய்வோம். இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் இனப்படுகொலையை அரங்கேற்றிய இனப்படுகொலையாளிகள் மீண்டும் இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரத்தை மொத்தமாக அலங்கரித்துள்ள புறச்சூழலானது தமிழ் மக்களது இருப்பிற்கும், தமிழர் தேசத்தின் பாதுகாப்பிற்கும் பேரச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. இத்தருணத்தில் தமிழர் தாயத்தில் தமிழ்த் தேசியத் தளத்தில் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், ஆன்மீகத் தரப்பினர் என அனைத்து சக்திகளும் ஒத்தியங்கத் தவறுமோயின் மீண்டுமொரு அரசியல் முள்ளிவாய்க்காலை தமிழினம் சந்திப்பதை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாத நிலைமையே உருவாக்கும். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்களப்பேரினவாத அரசால் இனவழிப்பு அரங்கேறிய போது அதனை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாத நிலையில் வாய் மூடி மௌனிகளாக கையைப் பிசைந்து நின்ற துயரத்தின் நீட்சி கடந்த 11 ஆண்டுகளாக தமிழர்களைத் தொடர்ந்தே வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிரான நேரடி, மறைமுக செயற்பாடுகளை துளியளவேனும் எதிர்க்க திராணியற்ற நிலைக்கு தமிழ்த் தேசிய தரப்பு பலவீனப்பட்டமைக்கு காரணம் ஒற்றுமையீனமே. கடந்து செல்லும் ஆங்கில வருடம் 2020ஆம் ஆண்டோடு அத்துன்பியல் வரலாறும் கடந்தே போகட்டும். புதிதாய் புலரும் தமிழ்ப் புத்தாண்டில் நிலம்-புலம்-தமிழகம் இணைந்த வகையில் ஒத்திசைவான கூட்டு செயற்பாட்டை முன்னெடுப்பதுடன் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல், சமூக செயற்பாடுகளை மீளுருவாக்கம் செய்வோம். யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட போது நிலம்-புலம்-தமிழகம் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பைக் காட்டமாகத் தெரிவித்தது இந்த ஒற்றுமைக்குக் கட்டியம் கூறுவதுபோல அமைந்தது. சிவில் சமூத்தின் பங்களிப்புடன், மக்கள் மயப்படுத்தப்பட்ட உரிமைப் போராட்டங்கள் வாயிலாகவே தமிழ்த் தேசிய அரசியல் தரப்பு தவிர்க்கவியலாத வகையில் வலிமை பெற முடியும். அவ்வாறு தாயகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பு வலிமைபெறும் போது அதற்கு ஆதரவாக புலம்பெயர் தளமும் தமிழ்நாட்டு களமும் அனைத்துலக பரப்பில் கூட்டு வலிமையை ஏற்படுத்தி ஈழத்தமிழர்களுக்குப் பக்கபலமாக செயற்பட முடியும். ஆகவே நிலம்-புலம்-தமிழகம் இணைந்த கூட்டுச் செயற்பாடு எமது விடுதலை நோக்கிய பாதையில் தொடரவேண்டும் என மண்ணுறங்கும் மாவீரர்கள் மற்றும் தமிழ் மக்களது கல்லறைகள் மீது இந்த மலரும் தமிழ்ப் புத்தாண்டில் உறுதிபூணுவோம். -தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்-

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, உலகம், கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE