Monday 19th of April 2021 10:12:28 PM GMT

LANGUAGE - TAMIL
-
“ஜெய்சங்கர் விஜயமும் இலங்கை - இந்திய நலன்களும்” - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்!

“ஜெய்சங்கர் விஜயமும் இலங்கை - இந்திய நலன்களும்” - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்!


இலங்கை - இந்திய உறவின் பிரதான காலப் பகுதியாக 2021 அமையப் போகின்றது என்பதை கட்டியம் கூறுவதாக இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளது. கடந்த இரு நாட்களிலும் (06.07.2021) இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்புகளும் அது வெளிப்படுத்தியுள்ள செய்திகளையும் முதன்மைப்படுத்தி இக் கட்டுரை இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் முக்கியத்துவத்தைத் தேடுவதாக அமைய உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிற்பாடு Saga Doctrine என்றழைக்கப்படும் (Security and growthfor all in the region) பிரகடனத்தை பிராந்திய மட்டத்தில் முதன்மைப்படத்தி வருகின்றது. அதில்; ஒரு அங்கமாகவே ஜெய்சங்கரின் விஜயம் அமைந்துள்ளது என இந்திய ஊடகங்கள் கருத்துப் பரிமாறி உள்ளன. அதற்கான ஆதாரங்களையும், அடிப்படைகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. அவற்றை நோக்குவது அவசியமாகும். இந்திய வெளிவிவகார அமைச்சரும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் கூட்டாக ஊடகங்களை சந்தித்த போது தெரிவித்த கருத்துக்கள் முதன்மையானவையாக விளங்குகின்றது.

முதலாவது ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமும், நீதியும், சமாதானமும் கொண்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களுக்கு உகந்த விடயம்.

இரண்டாவது பதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தம் உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வில் ஈடுபடுவது இலங்கையின் நலன்களுக்கு உகந்த விடயம். இது பதின்மூன்றாவது திருத்தம் உட்பட இலங்கை அரசின் வாக்குறுதிகளுக்கு அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வின் பொருத்தப்பாடுடையது என அவர் மேலும் தெரிவித்தார்.

மூன்றாவது இந்திய மீனவர்கள் விரைவில் நாடு திரும்புவதை தாம் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

நான்காவது பொருளாதார ரீதியாக அதிக ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்தோடு மேற்கோண்டு ஏற்கனவே கையெழுத்தான உடன்பாடுகளின் அடிப்படையில் அவற்றை அமுல்படுத்துவதும் பின்பற்றுவதுமான பூர்வாங்க வேலைப்பாடுகளை இலங்கை அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஐந்தாவது இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் கொரோனா தடுப்பூசி தொடர்பான விண்ணப்பக் கோரிக்கையை முன்வைத்திருப்பதோடு இந்தியா தயாரிக்கும் கொரோனா வைரஸ் இற்கு எதிரான மருந்தினை ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்கும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தயார் என தெரிவித்துள்ளது. அது மட்டுமுன்றி இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை ஊக்குவிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

இவற்றை விட ஜனாதிபதியையும், இலங்கைப் பிரதமரையும் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் இந்தியாவின் பாதுகாப்பு இலங்கை - இந்திய கூட்டு ஒத்துழைபட்பு மற்றும் பொருளாதார விடயங்களில் அதிக ஒத்துழைப்பு செலுத்தியதாகவும் தெரியவருகின்றது. வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சிறந்த இராஜதந்திரியாகவும் அனுபவம் மிக்க அரசியல்வாதியாகவும் விளங்குவதோடு இத்தகைய விஜயத்தின் ஊடாக அதிகமான பயன்பாடுகளை இந்தியா எட்டுவதற்கான முனைப்பனை வெளிப்படுத்தியுள்ளார். இவரது விஜயம் இராஜதந்திர ரீதியானது என்பதைக் கடந்து இந்திய நலன்களை அதிகம் பிரதிபலிப்பதாக உள்ளது.

முதலாவது வெளிவிவகார அமைச்சர்; இலங்கை விஜயத்தின் போது வெளிப்படுத்திய கருத்துக்கள் ஒவ்வொன்றும் இராஜதந்திர ரீதியான உரையாடலாகவே தெரிகின்றது. ஊடகங்கள் மத்தியில் இனப் பிரச்சினை தீர்வு பொறுத்தும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பொறுத்தும் அதன் மாகாண சபை தேர்தல் தொடர்பாகவும் வெளிப்படுத்திய அனைத்து சொல்லாடல்களும் இலங்கை ஆட்சியாளர்களிடையே தமிழ் மக்களையோ, தமிழ் மக்களின் அரசியல் சகத்திகளையோ, தென் இலங்கை அரசியல் சக்திகளையோ, தீவிர அரசியல் சக்தியகளிடையோ தமிழக தேர்தல் காலத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் பணியாளர்களையோ பாதிக்காத விதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைப் பாவித்து இராஜதந்திர ரீதியான சொல்லாடலைக் கொண்டு இந்திய நலன்களை விட்டுக் கொடுக்காத வகையில் சாத்தியமான உகந்த பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இரண்டாவது ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களின் சமத்துவமான நீதியான கௌரவமான அர்த்த பூர்வமான அதிகாரப் பங்கீட்டை வலியுறுத்தியதன் மூலம் இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா எதனை எதிர்பார்க்கின்றது என்பதனைப் பூடகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதனை எல்லாம் கடந்த அரசாங்கம் இலங்கையிலுள்ள அரசாங்கம் என்பதை இந்தியத் தரப்பு பலதடவை உணரத் தவறியுள்ளமை கவனிக்கத்தக்கது.

மூன்றாவது பொருளாதார விடயங்களை உரையாடுகின்ற போது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை தொடர்ந்து பேணவும் அமுல்படுத்தவும் இந்தியா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அத்தகைய விடயம் கொழும்பு நிதி நகரத்தின் கிழக்கு முனையம் தொடர்பான கையாளுகையை முதன்மைப்படுத்துவதாகவே தெரிகின்றது. ஆனால் நேற்றைய தினம் (06.01.2021) பாராளுமன்றத்தில் இலங்கைப் பிரதமர் உரையாற்றுகின்ற போது கொழும்புத் துறைமுகம் எந்த நாட்டினுடைய நலன்களுக்காகவும் ஒப்படைக்கப்படாது என வெளிப்படுத்தியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. ஆனால் வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் மிகப் பிரதான நோக்கங்களில் ஒன்றாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நோக்கம் இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அடைவதற்கான விஜயமாகவே காணப்படுகின்றது.

நான்காவது தமிழகத்தில் நிகழும் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அ.தி.மு.க.வுக்குமான உடன்பாடு ஒன்று காணப்படுவதோடு தேர்தல் கூட்டிலுள்ள கட்சிகளாகவே காணப்படும் நிலையில் பாரதீய ஜனதாக் கட்சி தமிழகம் நோக்கிய அரசியல் பலப்படுத்தலை உறுதிப்புடுத்துவதுடன் தமிழக மீனவ விவகாரம் சர்ச்சை மிக்கதாக உள்ளதை உணர்ந்துள்ளது. எனவே இக் காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டெடுப்பதையும் அதனால் ஜனதாக் கட்சி, அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிவாய்ப்பினை உறுதிப்படுத்துவதும் அவரது விஜயத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். அதனையே ஊடகங்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஐந்தாவது ஜெனீவா விவகாரம் அதிகமான நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என மேற்கு நாடுகளும் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் வலியுறுது;தி வருகின்றன. இத்தகைய சந்தர்ப்பத்தில் புதிய தீர்மானம் ஒன்றிற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதோடு அதன் விளைவுகளை கையாளுகின்ற திறனுடைய நாடாக இந்தியா காணப்படுவதும் மேற்கு நாடுகளின் நெருக்கமான நட்ப சக்தியாக இந்தியா விளங்குவதும் முக்கிய விடயமாகும். அத்தகைய புதிய தீர்மானத்ரைத பலமானதாகவும் அல்லது பலவீனமானதாகவும் மாற்றுகின்ற திறன் இந்தியாவிற்கு உண்டு. அது சார்ந்து இலங்கை தரப்புக்கு ஒரு செய்தியை வழங்குவதோடு கிழக்கு முனையம் தொடர்பாக ஏற்படடிருக்கும் அதிருப்தியை ஜெனீவாவை முன்னிறுத்திய தந்திரோபாயத்தை ஜெய்சங்கரின் விஜயம் வெளிப்படுத்துகின்றது.

ஆறாவது இதந்கு மேலதிகமாக இலங்கையின் தமிழ் தரப்பை சந்திக்கும் செய்தியோடு இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அமைந்திருந்தமை அதிக முக்கியத்துவம் பொருந்தியதாகும். அதாவது ஜெனீவா விடயத்துடன் கிழக்கு முனையம் பொறுத்தும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை எவ்வாறானதாக அமையும் என்பதைப் பொறுத்தும் தமிழர் தரப்பை பயன்படுத்தவும் அதனை அடிப்படையாகக் கொண்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருப்பதை அவரது விஜயம் உணர்த்துகின்றது.

எனவே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் விஜயம் அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக விளங்குகின்றது. இது இந்தியாவுக்கு அதிக நலன்களையும் இலங்கைக்கு அதிகமான எச்சரிக்கையையும் ஏற்படுத்தியிருப்பதோடு தமிழர்களை முன்னிறுத்தி அத்தகைய இராஜதந்திர உரையாடலை உருவாக்கியுள்ளார். இது மட்டுமன்றி தமிழர் தரப்பு ஆரோக்கியமற்ற நகர்வுக்கான சூழலை மீளவும் ஏற்படுத்தக் கூடிய விதத்தில் ஜெய்சங்கரின் விஜயம் அமைய வாய்ப்புள்ளது..

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE