Thursday 25th of April 2024 01:00:51 AM GMT

LANGUAGE - TAMIL
-
திருகோணமலையிலும் பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு!

திருகோணமலையிலும் பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு!


திருகோணமலை பட்டிணமும் சூழலும் (உப்புவெளி) பிரதேச சபையின் புதிய தவிசாளராக இன்று ஆர்.ஏ.எஸ்.ரி. ரத்நாயக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இரண்டாம் முறையாக இன்று தோற்கடிக்கப்பட்டமைக்கமைய உள்ளூராட்சி சபைகளின் திருத்தச் சட்டப் பிரிவின் பிரகாரம் இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சி.மணிவண்ணன் தலைமையில் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது 22 உறுப்பினர்களைக் கொண்ட உப்புவெளி பிரதேச சபையில் கூடுதலான உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு விருப்பம் தெரிவித்தமைக்கமைய திறந்த வாக்கெடுப்பு நடை பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் க.தங்கராசாவின் பெயர் முன்னாள் தவிசாளர் வைத்தியர் ஈ.ஜி.ஞானகுணாளனால் முன்மொழியப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி ஆர்.அமுதவல்லியால் வழிமொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் உறுப்பினர் ஆர்.ஏ.எஸ்.ரி. ரத்நாயக்காவின் பெயர் உறுப்பினர் ஏ.சி.பைரூஸால் முன்மொழியப்பட்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணனால் வழிமொழியப்பட்டது.

இதன்போது வாக்கெடுப்புக்கு விட்ட நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்கராசா சார்பாக 10 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ரத்நாயக்கா சார்பாக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன்படி புதிய தவிசாளராக ரத்நாயக்கா ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து உப்புவெளி பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமானது.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களில் இரு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவாகவும், மற்றைய உறுப்பினர் நவ்பர் (உப தலைவர் ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். அத்துடன் வரதர் அணி உறுப்பினர் சி. விபுசன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினருக்குச் சார்பாக வாக்களித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் 3 உள்ளூராட்சி சபைகள் உள்ள நிலையில் அதில் உப்புவெளி சபை தோற்கடிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE