Friday 29th of March 2024 04:44:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம்!

மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம்!


பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காணி சுவீகரிப்பு செயற்பாடுகளை நிறுத்த கோரியும் வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். ஆயினும் இன்றைய தினம் காணி அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் காணி அளவிடுவதற்கு அங்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நாளாந்தம் திடீர் திடீரென மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினரின் தேவைகளுக்காக அதிகரிக்கும் நோக்கில் நிலஅளவைத் திணைக்களத்தினால் செலவிடுவதை நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே வழங்க கோரியும் வேலணைப் பிரதேச செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

இதன்போது வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு எமது நிலம் எமக்கு வேண்டும், சுவீகரிக்காதே சுவீகரிக்காதே எமது காணிகளை சுவீகரிக்காதே, நிறுத்து நிறுத்து காணிகளை அளவிடுவதை நிறுத்து, வேண்டும் வேண்டும் எமது காணிகள் எமக்கு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டு பிரதேச செயலகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள் நுழைவதற்கு தடை விதித்திருந்தனர்.

எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாம் பிரதேச செயலரிடம் மனு கையளிக்க வேண்டும் என்றும் தமக்கான நீதி கிடைக்க வேண்டும் என்றும் காணி அளக்கப்படுவதை நிறுத்துவது தொடர்பில் பிரதேச செயலர் உறுதிமொழி வழங்க வேண்டும் என்று கோரி பிரதேச செயலரைச் சந்திக்க போவதாக கூறியிருந்தனர்.

பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மீண்டும் காணிகளை சுவீகரிக்க முடியாது என்றும் காணி சுவீகரிக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதேச செயலரிடம் தெரிவித்திருந்தனர்.

மேலும் மக்களின் காணிகளை சுவீகரிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன் போது இந்தக் காணிகளை சுவீகரிக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும் அதில் மக்களுக்கு விருப்பமின்மை அல்லது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அதனை தாம் தற்காலிகமாக இடை நிறுத்துவதாகவும் இது தொடர்பில் காணி அமைச்சு தெரியப்படுத்தி அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் பிரதேச செயலர் சோதிநாதன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது அரசின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் சிவில் நிர்வாகத்தை வடகிழக்கு முழுவதும் முடக்கி தமிழ் மக்களது கடுமையான எதிர்ப்பை அரசிற்கு காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE