Sunday 28th of February 2021 04:04:16 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இனமோதல் - 39 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இனமோதல் - 39 (வரலாற்றுத் தொடர்)


‘தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டமும் பண்டாரநாயக்க படுகொலையும்’ - நா.யோகேந்திரநாதன்!

“ஒரு சுதந்திரமான மக்கள் அவர்கள் தமது சொந்த மொழி மூலம் ஆட்சி செய்யப்படுவது இன்றியமையாததாகும். மக்கள் அவர்களின் சொந்த மொழியாலன்றி வேறு மொழி மூலம் ஆட்சி செய்யப்படுவார்களாயின் அவர்கள் சுதந்திரமான மக்களல்ல. இலங்கையில் சிங்களம் பேசும் மக்களுக்குச் சிங்கள மொழி எவ்வாறு உள்ளதோ அது போன்றே தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ் மொழி இருக்கவேண்டும்”.

இது 1958ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ம் நாள் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்துக்கு ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டு 1966ல் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அச் சட்டமூலத்தை ஆதரித்து ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

எனினும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காணி, பொலிஸ், நிதி நிர்வாக அதிகாரங்கள் தவிர்க்கப்பட்டு வடக்குக் கிழக்கில் அரசாங்க அலுவல்களில் தமிழ் மொழி உபயோகத்துக்கான உரிமை மட்டுமே இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது. எனினும் இச்சட்டம் பண்டாரநாயக்காவால் 1958ல் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டாலும் அதற்கான ஒழுங்கு விதிகள் 1966ம் ஆண்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சியால் நிறைவேற்றப்பட்டு அது நடைமுறைச் சட்ட வலுவைப் பெற்றது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சட்ட மூலத்தை நிறைவேற்றிய போதும் அதற்கு ஒழுங்கு விதிகளை வரைந்து அதை அமுல்படுத்துவதற்கான கால அவகாசம் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் இச் சட்ட மூலத்தை நிறைவேற்றி ஒரு ஆண்டில் அதாவது 29.09.1959 அன்று சோமராம தேரர் என்ற புத்தபிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை அடுத்து பிரதமராகப் பதவியேற்ற டபிள்யூ.தஹநாயக்க அவ்விடயத்தைத் தொடரத் துணியவில்லை.

பண்டாரநாயக்க ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி 24 மணி நேரத்தில் சிங்களத்தை அரச கரும மொழியாக்கப் போவதாக வாக்குறுதியளித்ததன் பேரில் அவர் தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய போதும் அவர் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான நிரந்தரமான தீர்வை எட்டும் வகையில் பண்டா – செல்வா ஒப்பந்தத்தை உருவாக்கினார்.

சிங்களத்துக்கு முதலிடம் வழங்குவதில் ஐக்கிய தேசியக் கட்சி இவருடன் ஒரே பாதையில் நின்றபோதும் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தது மட்டுமின்றி பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராகச் சிங்கள மக்களை எழுச்சி பெற வைக்கும் வகையில் திட்டமிட்ட போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டது. அவற்றின் உச்சகட்டமாகவே 1958 இனக் கலவரம் மூலம் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியதுடன் நாட்டில் இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்த வேண்டிய நிலையையும் உருவாக்கியது.

ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நச்சுத்தனமான பிரசாரங்களும் கண்டி யாத்திரை உட்பட்ட போராட்டங்களும் இன அழிப்புக் கலவரங்களும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தை கிழிக்க வைக்கும் நோக்கத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அப்போராட்டங்களுக்குப் பின்னால் பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் பிரதான நோக்கம் வலிமை பெற்றிருந்தது.

பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்க எரிபொருள் விநியோக நிலையங்களைத் தேசிய மயமாக்கியமை, தோட்டங்களைத் தேசிய மயமாக்கியமை, திருகோணமலை, கட்டுநாயக்க ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய படைத்தளங்களை வெளியேற்றியமை போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள், ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ சக்திகளின் கடும் வெறுப்புக்கு உள்ளாகின. அமெரிக்கா, பி.எல்.480 என்ற உதவித்திட்டத்தை நிறுத்தியதன் மூலம் கோதுமைக்குப் பற்றாக்குறை ஏற்படுத்தியது. அதன் மூலம் அவர்களால் பண்டாரநாயக்கவைப் பணிய வைக்க முடியவில்லை. அவர் சீனாவுடன் ரப்பர் - அரிசி ஒப்பந்தத்தை செய்து நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொண்டார்.

ஏகாதிபத்திய சார்பு, பெரும் முதலாளித்துவ சக்திகளின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பண்டாரநாயக்க ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளைப் பல்வேறு விதங்களிலும் மேற்கொண்டது. அதிலும் ஜே.ஆர்.ஜயவர்த்தன இடதுசாரிகளால் “யங்கி டிக்கி” அதாவது “அமெரிக்க வால்” என நையாண்டி செய்யப்படுமளவுக்கு அவர் வலுவான ஏகாதிபத்திய தாசராக விளங்கினார். எனவே அவர் பண்டாரநாயக்க ஆட்சியைக் கவிழ்க்க பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஒரு சக்திமிக்க ஆயுதமாகப் பயன்படுத்தினார்.

இவ்வாறான கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் முன் நின்று பிடிக்க முடியாத நிலையில் பண்டாரநாயக்க பண்டா – செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். அதன்பின் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரமும் அவருக்குப் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. எனினும் ஏகாதிபத்திய சக்திகளின் அவரின் ஆட்சியைக் கவிழ்த்துவிட வேண்டுமென்ற நோக்கம் மட்டும் நிறைவேறவில்லை.

இவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்ட பண்டாரநாயக்க இனக் கலவரங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஒரு சில நாட்களிலேயே முப்படைகளின் அதிகாரக் கட்டமைப்பிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டார்.

குறிப்பாக அன்ரன் முத்துக்குமார் என்ற இராணுவத் தளபதியைப் பாகிஸ்தான் தூதுவராகப் பதவி உயர்த்தி அனுப்பி விட்டு உடுகம உட்பட தனது நம்பிக்கையாளர்களை இராணுவக் கட்டளையிடும் பதவிகளுக்கு நியமித்தார்.

அதேவேளையில் பண்டா – செல்வா ஒப்பந்தம் செயலிழந்து போய்விட்ட நிலையில் அவர் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

ஆனால் அதை அவர் அமுலுக்குக் கொண்டு வருமுன்பே கொல்லப்பட்டு விட்டார். ஆனால் பண்டாரநாயக்கவின் கொலைக்கு அவர் பண்டா – செல்வா ஒப்பந்தம் மூலம் நாட்டைப் பிளவுபடுத்த முயன்றமையும் அது இயலாமல் போன நிலையில் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் மூலம் தனிச் சிங்களச் சட்டத்தை வலுவிழக்கச் செய்தமையுமே காரணமெனப் பெரும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பண்டநாயக்க மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சோமராம தேரர் தான் பண்டா – செல்வா ஒப்பந்தம் பற்றி; ஆத்தி;ரம் கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாக புத்தரகிந்தர தேரரின் சதிக்கு உடன்பட்டு நாட்டுக்காகவும் இனத்துக்காகவும் மதத்துக்காகவும் இப் படுகொலையைச் செய்ததாகவும் வெளியிட்ட கூற்று இப்பிரசாரத்திற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டது.

பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமாறு கோரிப் பிரதமர் இல்லத்தின் முன் சத்தியாக்கிரகம் செய்த பிக்குகளில் சோமராம தேரரும் ஒருவர் என்பதும், அவரின் கண்களின் முன்பே ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை தமிழ் மொழி விசேட சட்டம் அரச கரும மொழிச் சட்டத்துக்கு, அதாவது தனிச் சிங்களச் சட்டத்தை மீறாத வகையிலேயே அமுலாக்கப்படவேண்டும் என்பதும் அச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

அப்போது கொழுந்து விட்டெரிந்த இனவாத சூழலில் பண்டாரநாயக்க கொலைக்கு அவரின் தமிழ் மக்களின் உரிமைகள் சம்பந்தமான நடவடிக்கையே காரணம் எனப் பிரசாரம் செய்யப்பட்டாலும் கூட அது இரண்டாந்தரக் காரணமாகவே அமையமுடியும். ஆனால் பிரதான காரணம் அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளே என்பதே உண்மையாகும். அவர் அமெரிக்க, பி;ரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு எதிராக நேரடியாகவே போர் தொடுத்தார். அவரது தேசிய மயக் கொள்கைகள் அந்நிய பொருளாதாரச் சுரண்டலுக்கெதிரான நேரடி மோதலாகவே விளங்கின.

களனி என்பது ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. 1955ல் களனியில் இடம்பெற்ற ஐ.தே.கட்சி மாநாட்டிலேயே இலங்கையின் அரச கரும மொழியாக சிங்களம் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டுமென்ற தீர்மானம் ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் முன் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

களனி ரஜமஹவிகாரை விகாராதிபதி புத்தரகிந்த தேரரே அப்படுகொலையில் பிரதான சூத்திரதாரி என விசாரணைகள் மூலம் தெரியவந்தது.

இக்கொலையில் இன்ஸ்பெக்டர் நியூட்டன் பெரேராவால் வழங்கப்பட்ட கைத்துப்பாகியே பயன்படுத்தப்பட்டது. இதற்கான தோட்டாக்கள் பண்டாரநாயக்க அமைச்சரவையில் ஒரு அமைச்சராகவிருந்த விமலா விஜயவர்த்தன வீட்டில் வைத்தே நியூட்டன் பெரேராவால் புத்தரகித்தரிடம் வழங்கப்பட்டன. விமலா விஜயவர்த்தன ஏரிக்கரை பத்திரிகை நிறுவன உரிமையாளர் குடும்ப நெருங்கிய உறவினராவார். அதன் பின்பே சோமராமதேரருக்கு முத்துராஜவல பகுதியிலுள்ள ஒதுக்குப்புறத்தில் நியூட்டன் பெரேரா துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சியை வழங்கியிருந்தார். இத்துப்பாக்கி தொடர்பான சம்பவங்களில் ஜயவர்த்தன என்பவரும் பங்கு கொண்டிருந்தார். இவர் ஒரு ஆசிரியராவார்.

ஒருநாள் காலையில் பண்டாரநாயக்கவைச் சந்திக்க சோமராம தேரர் வந்திருந்தார். ஒருவர் எந்த உயர் பதவியில் இருந்தாலும் புத்த பிக்குகளைச் சந்திக்கும்போது முன்புறமாகக் குனிந்து வணங்குவதே சிங்கள மக்களின் வழமை. அப்படி வணங்கும் போதே சோமராமதேரர் பண்டாரநாயக்க மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். குண்டுகள் நெஞ்சில் பாய பிரதமர் நிலத்தில் சரிந்து விழுந்தார்.

தப்பி ஓட முயன்ற சோமராம தேரர் மீது காவற்கடமையில் நின்ற பொலிஸ் சுட்டதில் அவரும் காயமடைய அவர் கைது செய்யப்படுகிறார்.

படுகாயமடைந்து மரணத் தறுவாயில் கிடந்த பண்டாரநாயக்க “ஒரு காவியுடையணிந்த மூட மனிதன் என்னை சுட்டு விட்டான். அவனைப் பழிவாங்காமல் மன்னித்து விடுங்கள்” என கேட்டுக்கொண்டார். ஆனால் வழக்கு விசாரணையின் பின்பு சோமராமதேரர் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

சோமராம தேரரின் வாக்குமூலத்தின்படி அமைச்சர் விமலா விஜயவர்த்தனவும் கைது செய்யப்பட்டார். பின்பு அவருக்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை எனச் சட்டமா அதிபர் தெரிவித்ததன் அடிப்படையில் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பின்பு இடம்பெற்ற வழக்கில் ஐவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் புத்தரகித்தர தேரர், சோமராம தேரர், ஜயவர்த்தன ஆகியோர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். ஏனைய நியூட்டன் பெரேரா, அனுர டி சில்வா ஆகிய இருவரும் குற்றமற்றவர்களென விடுவிக்கப்பட்டனர்.

மேல் முறையீட்டில் சோமராமதேரருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் புத்தரகிந்தருக்கும் ஜயவர்த்தனவுக்கும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

சோமராமதேரர் 07.07.1962 வெலிக்கடைச் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவர் இறப்பதற்கு இரு நாட்களின் முன்பு கிறீஸ்தவராக மாறி டேவிட் என்ற பெயருடன் பாவமன்னிப்புப் பெற்றுக்கொண்டார். புத்தரகிந்தர் 7½ ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நி;லையில் 1967ல் மாரடைப்பில் காலமானார். ஜயவர்த்தன 17 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்பு 1977ல் விடுதலையாகி வெளியே வந்தார்.

1963ல் இக்கொலை பற்றியும் அதன் பின்னணி பற்றியும் ஆராய சர்வதேச நிபுணர்கள் கொண்ட ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அவ்வாணைக்குழு கொலைக்கும் அமைச்சர் விமலா விஜயவர்த்தனவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என அறிவித்தது. ஆனால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எப்படியிருப்பினும் இனப்பிரச்சினை தொடர்பாக பண்டாரநாயக்க எடுத்த தீர்வு முயற்சிகளை ஏற்றுக்கொள்ளாத சில சிங்கள இனவாதிகளான தனி நபர்கள் இணைந்து திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு கொலை என்றளவிலேயே இது முடிக்கப்பட்டது. இக்கொலையின் பின்னாலிருந்த தேசிய, சர்வதேசிய அரசியல் பின்னணிகள் முற்றாகவே மறைக்கப்பட்டு விட்டதாக அந்நாட்களில் சில இடதுசாரிகள் கண்டனம் வெளியிட்டிருந்தனர். எப்படியும் பண்டாரநாயக்கவின் தேசிய முற்போக்குக் கொள்கைகள் ஏகாதிபத்திய மேட்டுக்குடி முதலாளித்துவ சக்திகளுக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கியதுடன் இலங்கையை ஒரு சுயாதிபத்தியமுள்ள நாடாக்குவதில் அவர் அளப்பரிய பங்கு வகித்தார் என்பதும் மறுக்கமுடியாத உண்மைகளாகும்.

இந்நிலையில் பண்டா – செல்வா ஒப்பந்தமும் தமிழ் மொழிகள் விசேட ஏற்பாடுகள் சட்டமும் மட்டுமே அவரின் படுகொலைக்குக் காரணங்கள் எனச் சாதிப்பது சில மேலாதிக்க சக்திகள் தொடர்பான உண்மைகளை மறைக்கும் நோக்கம் கொண்டவையென்றே கருதப்படுகிறது.

எனவே பண்டாரநாயக்கவின் படுகொலைக்கு காரணம் பண்டா – செல்வா ஒப்பந்தமும் தமிழ் மொழிகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலமுமே எனப் பிரசாரம் செய்யப்பட்ட போதிலும் அவரின் கொலைக்கு அவரின் துணிச்சலான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளும் தேசிய சுயாதிபத்தியத்தை நிலை நிறுத்தும் கொள்கைகளுமே பிரதான காரணம் என்பதே அரசியலை நேர்மையாக அணுகுபவர்களின் ஆணித்தரமான கருத்தாகும்.

தொடரும்....

அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE