Saturday 27th of February 2021 12:00:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
மெக்ஸிக்கன் ஜனாதிபதிக்கு  கொரோனா தொற்று!

மெக்ஸிக்கன் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று!


மெக்ஸிக்கன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக தனது உத்தியோகபூர்வ ருவிட்டரில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனக்கு லேசான நோய் அறிகுறிகளே உள்ளதாகவும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் லோபஸ் ஒப்ராடோர் குறிப்பிட்டுள்ளார்

67 வயதான லோபஸ் ஒப்ராடோர் , மெக்ஸிக்கோவில் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

அத்துடன், ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக அவா் செயற்படவில்லை. முக கவசங்களை அவர் அரிதாகவே அணிகிறார். அடிக்கடி விமானப் பயணங்களை மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களும் அவா் மீது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பொருளாதார மந்த நிலையத்தை தவிர்ப்பதாகக் கூறிக்கொண்டு சமூக முடக்கல் நடவடிக்கைளை அவர் எதிர்த்து வந்தார். இதனால் மெக்ஸிக்கோவில் மோசமான தொற்று பரவலுக்கு அவரே காரணமானார் எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

மெக்ஸிகோ தொற்று நோயால் மோசமான நிலையில் உள்ளது. இந்நாட்டின் தலைவர்கள் கொரோனா வைரஸ் குறித்து தீவிரமாக இருக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு அவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வலியுறுத்தினார்.

தொற்று நோயைக் கட்டுப்படுத்த முகமகவசம் அணிவது முக்கியம். சமூக இடைவெளியைப் பேண வேண்டும். இவற்றுக்கு முன்மாதிரியாக தலைவர்கள் இருக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் அதானோம் கெப்ரேயஸ் மேலும் கூறினார்.

இதேவேளை, வயது காரணமாக மெக்ஸிகன் ஜனாதிபதி லோபஸ் ஒப்ராடோர் கொரோனா தொற்று ஆபத்தான பிரிவினர் என்ற வரையறைக்குள் வருகிறார். அவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. மாரடைப்பிற்குப் பின்னர் அவா் அறுவை சிகிச்சைக்கு செய்துகொண்டுள்ளார். எனினும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர் இதுவரை முன்வரவில்லை.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி மெக்ஸிக்கோவில் கிட்டத்தட்ட 630,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மெக்ஸிக்கோவில் இதுவரை 150,000 போர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 17 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய விடுமுறை காலங்களில் மக்கள் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவில் ஒன்றுகூடியதால் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகரில் உள்ள மருத்துவமனைகள் பல வாரங்களாக உச்சபட்ச திறனுடன் இயங்கிவருகின்றன.

இந்நிலையில் ஸ்புட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசிகளை மெக்ஸிக்கோவுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். இது குறித்து இன்று திங்கட்கிழமை மெக்ஸிக்கோ ஜனாதிபதியுடன் புடின் பேசவுள்ளதாக செய்திகள் நேற்று வெளியாகி சிறிது நேரத்திலேயே லோபஸ் ஒப்ராடர் கொரோனா தொற்றுக்குள்ளான தகவல் வெளியானது.

ஏற்கனவே பைசர் தடுப்பூசிகளை மெக்ஸிக்கோ பெற்றுள்ளது. எனினும் தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த அது போதாததால் வேறு தடுப்பூசிகளை பெற அந்நாட்டு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE