Saturday 20th of April 2024 07:12:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்ராறியோ, கியூபெக் உள்ளிட்ட கனேடிய  மாகாணங்களில் குறையும் கொரோனா தொற்று!

ஒன்ராறியோ, கியூபெக் உள்ளிட்ட கனேடிய மாகாணங்களில் குறையும் கொரோனா தொற்று!


கனடாவில் கொரோனா தொற்று நோயாளர் தொகை அண்மைய சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் இந்தப் போக்குத் தொடருமா? என்பது குறித்து உடனடியாகக் கணிக்க முடியாது என கனேடிய தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் தெரிவித்துள்ளார்.

பல மாகாணங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் புதிய கொத்தணிகளால் குறைந்துவரும் தொற்று நோயாளர் தொகை மீண்டும் அதிகரிக்கும் அச்சுறுத்தல் உள்ளதையும் நாம் அவதானித்து வருகிறோம் எனவும் அவா் கூறினார்.

பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் தொற்று நோயாளர் தொகை குறைந்துவருவதாகவும் அவா் குறிப்பிட்டார். ஆனால் வேறு மாகாணங்களில் தொற்று அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது.

தடுப்பூசி போடும் பணிகள் இடம்பெற்று வரும் சமநேரத்தில் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்திலும் ஈடுபடவேண்டியுள்ளது எனவும் அவா் கூறினார்.

இதேவேளை, வடக்கு ஒன்ராறியோவின் மிகப் பெரிய அளவான தடுப்பூசி முயற்சிகளுக்கு கனேடிய ஆயுதப்படைகள் ஆதரவளிக்கும் என்று மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

அத்துடன், நியூபவுண்ட்லாண்ட் - லாப்ரடோர் மற்றும் மனிடோபாவிலும் தடுப்பூசி பணிகளுக்கு இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

கனடாவில் தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான ஒன்ராறியோவின் தினசரி தொற்று நோயாளர் தொகை ஞாயிற்றுக்கிழமை 2,417 ஆக பதிவானது. கடந்த மாதத்தில் தினசரி தொற்று நோயாளர் தொகை 3,000 –க்கும் அதிகமாக இருந்த நிலையில் அண்மைய நாட்களில் ஒன்ராறியோவில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கியூபெக்கில் கடந்த சில நாட்களாக மருத்துவமனைச் சேர்க்கை குறைவடைந்து வருகிறது. எனினும் ஞாயிற்றுக்கிழமையும் அங்கு 1,350-க்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.

சஸ்காட்செவனின் கோவிட்-19 தொற்று நோயாளர் தொகை ஞாயிற்றுக்கிழமை 260 ஆக உயர்ந்தது. இந்நிலையில் பைசர் தடுப்பூசி விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மாகாணம் அதன் தடுப்பூசிகளை பணிகளை இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மனிடோபாவில் ஞாயிற்றுக்கிழமை 222 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், மூன்று கொரோனா மரணங்களும் பதிவாகின.

அல்பர்ட்டாவில் 463 புதிய தொற்று நோயாளர்கள் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டனர். கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் ஆல்பர்ட்டாவில் தொற்று நோயாளர் தொகை குறைந்து வருகிறது.

நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடோரில் ஞாயிற்றுக்கிழமை புதிய தொற்று நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. நோவா ஸ்கோடியா மாகாணத்தில் ஒரேயொரு தொற்று நோயாளி மட்டுமே நேற்று அடையாளம் காணப்பட்டார்.

தடுப்பூசிப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் கனடாவில் தொடர்ந்து தொற்று நோய் குறையும் சந்தர்ப்பம் உள்ளதாக கனேடிய தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும் அனைத்து கனேடியர்களும் தொடர்ந்து சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொது சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாகப் பின்பற்றுவதன் மூலம் இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய திரிவு வைரஸ் பரவல் உட்பட, ஒட்டுமொத்த கோவிட் -19 பரவலைக் குறைக்க முடியும் எனவும் அவா் தெரசா டாம் நம்பிக்கை தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE