Wednesday 17th of April 2024 07:36:02 PM GMT

LANGUAGE - TAMIL
-
அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம்; பிள்ளையான்!

அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம்; பிள்ளையான்!


அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். மாகாண சபை முறைமை ஒன்று வருமாக இருந்தால் மாகாண சபையை ஆட்சியமைக்கும் பொறுப்பும், ஆட்சியமைக்க வைக்கும் பொறுப்பும் மக்கள் கையில் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுங்கான்கேணி கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறியும் மக்கள் சந்திப்பு சுங்கான்கேணி பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் -

எனது மக்கள் பணி தொடரும் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. வீதிகள், பாடசாலைகள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். இந்த வருடம் அபிவிருத்திகள் ஓரளவு இடம்பெற்றாலும், 2022ம், 2023ம் ஆண்டளவில் அதிகளவான வேலைத் திட்டங்கள் இடம்பெறும்.

கொரோனா தாக்கம் காரணமாக உலக பொருளாதாரத்தில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டிலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளுர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். கொரோனா தாக்கம் என்று பார்த்தால் தற்போது டெங்கு தாக்கல் அதிகரித்துள்ளது.

வாழைச்சேனை பிரதேசத்தில் டெங்கு அதிகரித்துள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதும், மக்கள் குப்பைகளை சரியான முறையில் அகற்றாமை, உள்ளுராட்சி மன்றங்களும் சரியான முறையில் இயங்காமையே காரணம் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியை அதிகரிக்கும் வகையில் இவ்வருட நிதி மூலம் மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். அதில் சுங்கான்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் உள்வாங்கப்படும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பிள்ளையானின் சொத்து அல்ல. அது உங்கள் கட்சி. கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய கட்சியாக மாற்றக் கூடிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தினை நம்புபவர்கள்.

அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். மாகாண சபை முறைமை ஒன்று வருமாக இருந்தால் மாகாண சபையை ஆட்சியமைக்கும் பொறுப்பும், ஆட்சியமைக்க வைக்கும் பொறுப்பும் உங்கள் கையில் உள்ளது. அரச கொள்கையினுடாக வரும் அனைத்து விடயங்களும் செய்து தருவேன்.

பாரம்பரிய உற்பத்தியை நம்பி வாழும் மக்கள் நாம். இதனை மேம்படுத்த வேண்டும். அதிலும் இதனை குறைந்த விலைக்கு விற்கும் நிலைமைக்கு மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. இதனை மாற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.

சுங்கான்கேணி பிள்ளையார் ஆலய தலைவர் எஸ்.பாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கிராம சேவை அதிகாரி எஸ்.ஹரிகரன், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சுங்கான்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலய நிருவாக சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், சுங்கான்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்று பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பாடசாலை வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், பாதிப்படைந்து காணப்படும் வீதிகளையும் பார்வையிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE