பருவநிலை மாற்றங்களால் ஏற்பட்ட இயற்கைக் பேரழிவுகளால் கடந்த 20 ஆண்டுகளில் உலகெங்கும் கிட்டத்தட்ட 48 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஜேர்மன்வாட்ச் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கோவிட்19 தொற்று நோய் நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இணைய வழித் தொடர்பாடல் முறையில் நடைபெற்ற பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் ஜெர்மன்வாட்ச் என்ற கருத்தாய்வு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
புயல்கள், வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்றவற்றால் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.
இயற்கைப் பேரழிவுகள் மற்றும் அதனால் உயிரிழப்புக்கள் அதிகரிக்க வளரும் நாடுகளின் பங்கு பெருமளவில் உள்ளது எனவும் ஜேர்மன்வாட்ச் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இத்தகைய இயற்கைப் பேரழிவுகள் உலகப் பொருளாதாரத்திற்கு இந்த நூற்றாண்டில் 2.56 டிரில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டிலிருந்து பதிவான கிட்டத்தட்ட 11,000 க்கும் மேற்பட்ட தீவிர இயற்கை அனர்த்தங்களால் 480,000 பேர் இறந்துள்ளனர். புவேர்ட்டோ ரிக்கோ, மியான்மர் மற்றும் ஹெய்ட்டி ஆகிய நாடுகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏழை நாடுகளில் வெப்பநிலை உயர்வைக் குறைக்கவும், மாறிவரும் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தங்களை தயார் செய்துகொள்ளவும் ஏதுவாக, பணக்கார நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் என 2015 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் கீழ் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் வளரும் நாடுகளுக்கு பருவநிலை நடவடிக்கைகளுக்காக கிடைக்கும் உண்மையான நிதி மிகவும் குறைவாக உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துவதாகவும் ஜேர்மன்வாட்ச் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.