Thursday 25th of April 2024 07:04:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
சிங்களவர்களைத் தூண்டிவிட்ட அரசு இப்போது விழி பிதுங்கித் தவிக்கிறது  - மனோ எம்.பி!

சிங்களவர்களைத் தூண்டிவிட்ட அரசு இப்போது விழி பிதுங்கித் தவிக்கிறது - மனோ எம்.பி!


"எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசு, இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கின்றது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாகத் திகழ்கிறது." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவைப் பங்காளியாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு, தெருவில் இறக்கி, அரசியல் செய்த ராஜபக்ச அரசு, இப்போது அதே இந்தியாவுக்கு, அதே கிழக்கு முனையத்தை, அதே அடிப்படையில், கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இது இவர்களது இனவாதப் பரம்பரை பழக்கம். எமது நல்லாட்சியின்போது தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வுத் திட்டத்தை, புதிய அரசமைப்பாக நாம் கொண்டு வர முயற்சி செய்தபோது, அதை எதிர்த்து நாட்டில் பேரினவாதத் தீயைப் பற்ற வைத்தவர்கள் இவர்களாகும். இவர்களை ஒதுக்கித் தள்ளி ஆரம்பித்த பணியை முடிக்க, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதுகெலும்பு இருக்கவில்லை.

அதைபோல், அமெரிக்க அரசுடன் எம்.சி.சி. ஒப்பந்தம் குறிந்து நாம் பேசிய போது, அதை எதிர்த்து நாட்டை தீ வைத்து கொளுத்தி, இதுபற்றி ஒன்றுமே தெரியாத, வண. உடுதும்பர காஸ்யப்ப என்ற பெளத்த தேரரைக் கொண்டு வந்து எம்.சி.சிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்தவர்கள், இவர்களாகும்.

பின்னர் ஆட்சிக்கு வந்த உடன், எம்.சி.சி. ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இனாமாக தர இருந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துக்கு ஆசைப்பட்டு, அமெரிக்காவுடன் பேச்சை ஆரம்பித்தார்கள். எம்.சி.சி. ஒப்பந்தத்தில், 70 விகிதம் நல்லதே என உதய கம்மன்பில என்ற தமிழ், முஸ்லிம் மக்களை சதா கரித்து கொட்டித்தீர்க்கும் அமைச்சர் சொன்னார். ஆனால், கடைசியில் “சரிதான் போங்கடா” என அமெரிக்கா எம்.சி.சி. ஒப்பந்தத்தையும், 400 மில்லியன் அமெரிக்க டொலரையும் எடுத்துக்கொண்டு போயே போய் விட்டது.

“ஐயோ, கைக்கு வந்தது, வாய்க்கு எட்டவில்லையே” எனக் கையை விட்டு போய்விட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நினைத்து நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசின் உள்ளே ஒப்பாரி ஓலம் கேட்டது.

அதைபோல், கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளைப் பங்காளிகளாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது, அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு தெருவில் இறக்கி அரசியல் செய்த, மஹிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் அடங்கிய கூட்டணி, இன்று நந்தசேன கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆட்சி அமைத்தவுடன், சுருதி இறங்கிப் பேசுகின்றது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதவும் முடியாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள, இதே கொழும்புத் துறைமுகத்தில் 85 விகித பங்குரிமையுடன் இவர்கள் சீனாவின் சைனா மெர்ச்சன்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள சி.ஐ.சி.டி. என்ற இன்னொரு முனையத்தை திரும்பி வாங்கவும் முடியாமல், கோட்டாபய ராஜபக்ச அரசு, விழி பிதுங்கிப் போய் நிற்கின்றது.

இந்நிலையில் இந்த அரசில் இருக்கும் ஒரு அரை அமைச்சரான நிமல் லான்சா, "கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை யார் தடுத்தாலும், இந்தியாவுக்கு வழங்கியே தீருவோம்” என வெட்டி வீறாப்பு பேசுகின்றார். இதை இவர் இன்றைய எதிரணியான எங்களிடம் கூறத் தேவையில்லை. தெரியாமல் வாக்களித்த பொதுமக்களிடம் கூறத் தேவையில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும்போது இவர்களே ஊட்டி வளர்த்த இவர்களது கட்சியின் தொழிற்சங்கங்கள் மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர், வண. ஓமல்பே சோபித தேரர், வண. முருத்தெட்டுகம தேரர் ஆகிய பெளத்த தேரர்களிடம்தான் கூற வேண்டும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE