Wednesday 24th of April 2024 05:34:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
குடியெழுப்பப்படும் குருந்துமலை ஐயனார்! - நா.யோகேந்திரநாதன்!

குடியெழுப்பப்படும் குருந்துமலை ஐயனார்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் ராஜாங்க அமைச்சர் விதுல விக்கிரம தலைமையில் இராணுவத்தினரின் உதவியுடன் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் சில நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு காலங்காலமாக அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வந்த ஐயனார் சூலம் பிடுங்கி எறியப்பட்டு எங்கிருந்தோ இவர்களால் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை புத்த பிக்குகளின் பிரித் ஓதலுடன் அங்கு வைக்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் அங்கு "குருந்தசேவ" என்றொரு விகாரை அமைந்திருந்ததாக 1932ம் ஆண்டு வெளிவந்த வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் படைக் கல்லு என்ற இடத்தில் கல்யாணபுர என்ற பௌத்த விகாரையும், பௌத்த துறவிகள் தங்குமிடமும் இருந்ததாகவும் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ராஜாங்க அமைச்சர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை அமைப்பதாகக் கூறி மக்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன என்ற அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையெனவும் குருந்தமலையில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமைகள் எதுவும் ஒடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார். அப்பகுதி விவசாயிகள் தங்கள் கால் நடைகளின் காவற் தெய்வமாக வெள்ளிதோறும் விளக்கு வைத்து அறுவடை காலத்தில் பொங்கிப் படைத்து வழிபடும் ஐயனார் சூலத்தைப் பிடுங்கியெறிந்துவிட்டு அந்த இடத்தில் புத்தர் சிலையை நிறுவிவிட்டு தாங்கள் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையில் தலையிடவில்லை எனச் சொல்வதிலிருந்தே இவர்கள் உண்மையிலிருந்து வெகுதொலைவில் நிற்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

இவ்விடயம் தொடர்பாக தன்னை வரலாற்று ஆய்வாளர் எனக் கூறிக்கொள்பவரும், தொல் பொருட்கள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினருமான எல்லாவல்ல மெத்தானந்த தேரர், குருந்துமலையில் அமைந்திருந்தது ஒரு விகாரை எனவும் அங்கு வைத்தே "குருந்தத்த" என்ற நூல் எழுதப்பட்டதாகவும் அதன் ஓலைச் சுவடிகள் இன்னும் இருப்பதாகவும் முன்பு முனீஸ்வரம் சிவன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டபோது அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு சந்திரவட்டக்கல்லை ஆதாரமாகக் காட்டி அங்கு ஒரு விகாரை இருந்ததாகவும் அதை அழித்தே சோழர்கள் சிவன் கோவிலை அமைத்தனர் என வாதாடியவர் மெத்தானந்த தேரர். அதன் மூலம் ராஜகோபுரம் கட்டப்படுவதை இடைநிறுத்த நீதிமன்றத்தில் மனுச் சமர்ப்பித்தவர். ஆனால் சந்திரவட்டக்கல் என்பது பல்லவர் காலத்தில் வீட்டு வாசல்களில் கால் மிதிக்கப் பயன்படுத்தப்படும் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஒரு மிதி கல்லாகும்.

ஆனால் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் 1833ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 'குருந்தமலைக் காடு' என்றே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே குருந்தசேவ, குருந்தத்த என்பனவெல்லாம் இட்டுக்கட்டப்பட்டவையென்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

குருந்தமரம் என்பது சிவவழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு விருட்சமாகும். சிவன் கோவில்களில் இதைத் தலவிருட்சமாக நட்டுப் பேணி வருவதுண்டு. அரிமர்த்தன பாண்டியனுக்கு குதிரைகள் வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் தில்லையில் குதிரை வணிகனாக வந்த சிவனுடன் சேர்ந்து குருந்த மர நிழலில் தங்கி அடியார்களுக்கு தானங்கள் வழங்கி பேரின்பப்பேறு பெற்றதாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அதிலிருந்தே சிவாலயங்களுக்கும் குருந்த மரங்களுக்குமிடையேயுள்ள உறவை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எனவே அங்கு ஆதிகாலத்தில் சிவாலயம் அமைந்திருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் குருந்தமலையின் உச்சிப் பகுதியில் எப்போதும் சிதைவடைந்த கருங்கற் தூண்கள் காணப்படுகின்றன. இந்துக் கோவில்களில் மட்டுமே கருங்கல் தூண்கள் உபயோகிக்கப்படுகின்றன. புத்த விகாரைகளில் எங்கும் கருங்கல் தூண்கள் பாவிக்கப்படுவதில்லை.

ஆதியில் குருந்தூர், மண்கிண்டி, ஓதியமலை, தண்டுவான் போன்ற கிராமங்கள் செழிப்பான விவசாயக் கிராமங்களாக விளங்கின எனவும் அங்கு சிவன் கோவிலை அமைத்து வழிபட்டு வந்தனரெனவும் குளக்கோட்ட மன்னன் காலத்தில் அது கட்டிடமாக அமைக்கப்பட்டு பிராமணர் மூலம் ஆறுகாலப் பூஜைகள் இடம் பெற்றதாகவும் கொடிய கொள்ளை நோய் பரவி ஏராளமான மக்களைப் பலி கொண்டதால் மக்கள் அந்த ஊர்களை விட்டு வெளியேறியதால் சிவாலயம் பராமரிப்பற்று சிதைவடைந்து விட்டதாகவும் அப்பகுதியில் வழங்கிவரும் கர்ணபரம்பரைக் கதைகள் தெரிவிக்கின்றன.

குமுழமுனையைச் சேர்ந்த ஒரு விவசாயி காணாமற்போன தனது மாடுகளைத் தேடிக் குருந்தமலைக் காட்டுக்குள் சென்றபோது அங்கு மலையின் உச்சிப் பகுதியில் ஒரு கோவிலின் இடிபாடுகள் காணப்பட்ட இடத்தில் தனது மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். மாடுகளைச் சாய்த்துக்கொண்டு திரும்பிய அவர் தான் கண்ட காட்சிகளை ஊர்மக்களிடம் சொல்லியதையடுத்து அவர்கள் கோவில் அமைந்த பகுதியில் கோவிலில் உள்ள கல்லொன்றையே எடுத்து நட்டு ஐயனாராக வழிபட்டு வந்தனர். தங்கள் கால்நடைகள் காணாமற் போனால் ஒரு கருங்காலிக் கம்பை வெட்டி ஐயனார் அருகில் சாத்தினால் மாடுகள் வீடு வந்து விடுமென ஒரு ஐதீகம் இன்னும் அங்கு நிலவி வருகிறது.

அங்கு புத்தர் கோவில் இருந்ததைப் பற்றி எந்தவொரு தகவலோ அல்லது ஆதாரங்களோ காணப்படவில்லை. அங்கு நிலவிவரும் கர்ணபரம்பரைக் கதைகளில் அப்படியான தகவல்கள் எதுவுமே இல்லை.

ஆனால் பிற்காலத்தல் அறுவடைக் காலங்களில் மண்கிண்டி, பதவியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கூலியாட்கள் தண்ணிமுறிப்பு, குமுழமுனை போன்ற பகுதிகளுக்கு அரிவு வெட்ட வருவதுண்டு. அவர்கள் வாடிபோட்டுத் தங்கிவிட்டு அறுவடைக் காலம் முடிந்ததும் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிப் போய்விடுவதுண்டு. அவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் காலத்தில் வழிபடுவதற்கெனத் குருந்தமலை அடிவாரத்தில் அமைந்திருந்த ஒரு அரச மரத்தின் கீழ் ஒரு சிறிய புத்தர் சிலையை நிறுவினர். சில வருடங்களின் பின் ஒரு புத்தபிக்கு அங்கு வந்து ஒரு சிறு கட்டிடத்தை அமைத்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அவர் வைத்தியங்கள் செய்வதன் மூலம் அப்பகுதி மக்களுடன் நல்லுறவைப் பேணி வந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த நாட்களிலேயே அந்த பிக்கு அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டார். சிங்களக் கூலியாட்கள் வருவதும் நின்று போய்விட்டது. பராமரிப்பின்றி விடப்பட்ட புத்தர் சில சில நாட்களில் காணாமற் போய்விட்டது.

இதுமட்டும்தான் குருந்தமலைக்கும் பௌத்த மதத்துக்கும் உள்ள தொடர்பு.

ஆனால் இராஜாங்க அமைச்சர், தொல்பொருட் திணைக்களத்தினர், மெத்தானந்த தேரர் ஆகியோர் விகாரை பற்றியும் விகாரையில் வைத்து எழுதப்பட்ட நூல் பற்றியும் மடாலயம் பற்றியும் கற்பனைக் கதைகளைக் கட்டி விடுகின்றனர்.

லிங்க வழிபாடு என்பது ஆண், பெண் உறவின் மூலம் தான் மனித குலம் உருவாகியது என்பதை மனிதன் அறிய ஆரம்பித்த காலத்திலிருந்தே உருவான ஒரு வழிபாட்டு முறையாகும். இது தொன்மையான திராவிட நாகரீகத்துடன் சம்பந்தப்பட்ட வழிபாட்டு மரபாகும். இலங்கையை ஆண்ட மன்னனாகிய இராவணன் ஒரு சிவபக்தன் என்பதையும் அவன் லிங்கத்தை வழிபட்டு வந்தவன் என்பதையும் காவியங்களும் புராணங்களும் கூறுகின்றன.

அவ்வகையில் கோணேஸ்வரம், திருகேதீஸ்வரம் போன்று வெடுக்குநாறி லிங்கேஸ்வரர் ஆலயம், குருந்தமலைச் சிவன் கோவில், கின்னியா வெந்நீரூற்று என்பனவும் தொன்மையான திராவிட நாகரீக காலம்தொட்டு நிலைத்து வரும் வழிபாட்டிடங்களாகும்.

இலங்கையை ஒரு சிங்கள பௌத்த தேசமாகக் காட்டும் நோக்குடன் சிங்களப் பேரினவாத சக்திகள் எமது தொன்மையான வழிபாட்டிடங்களை அழித்து அங்கு பௌத்த விகாரைகளை அமைத்து, அதன் பின் விகாரைகளைச் சுற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதே அவர்களின் திட்டமாகும். அதன் மூலம் இலங்கை முழுவதையும் ஒரு பௌத்த சிங்கள தேசமாக மாற்றும் இலக்குடனேயே செயற்பட்டு வருகின்றன.

புல்மோட்டையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 500 ஏக்கர் காணியில் தொல்பொருட் சின்னங்கள் இருப்பதாகக் கூறி ஒரு பிக்குவால், தொல்பொருட் திணைக்களத்தின் அனுசரணையுடன் முஸ்லிம்கள் மீளக்குடியேறுவது தடை செய்யப்பட்டது. இப்போது அங்கு மூன்று விகாரைகள் அமைக்கப்பட்டு அவற்றைச் சுற்றி; மூன்று சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு விட்டன. கொக்கிளாயில் ஒரு தனியார் காணியும் மருத்துவமனைக்குரிய காணியும் அபகரிக்கப்பட்டு அங்கு ஒரு பிரமாண்டமான பௌத்த விகாரை நிறுவப்பட்டு விட்டது. கொக்குத்தொடுவாயிலிருந்து மகாவலி அபிவிருத்திச் சபையின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் 1984ம் ஆண்டு தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் அங்கு ஒரு விகாரை அமைக்கப்பட்டு விட்டது. செம்மலை நீராவியடியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டதுடன் தமிழர்கள் பிள்ளையார் கோவிலை நடத்தத் தொடர்ந்து இடையூறு விளைவிக்கப்பட்டு வருகின்றது. வெடுக்குநாறி ஆலயத்தில் தமிழர்கள் வழிபாடு நடத்துவதைத் தடை செய்யக்கோரி தொல்பொருட் திணைக்களம் வழக்குத் தொடுத்துள்ளது.

அதாவது மணலாற்றை முழுமையாக சிங்கள பௌத்த மயப்படுத்தும் நடவடிக்கைகள் வேகமாகவும் நீண்ட கால இலக்குடனும் பௌத்த பிக்குகளாலும் தொல்பொருட் திணைக்களத்தாலும் இராணுவத்தினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாகவே இராஜாங்க அமைச்சரும் தொல்பொருட் திணைக்களமும் குருந்தமலையில் புத்தர் சிலையை நிறுவி அகழ்வாராய்ச்சி ஆரம்பித்துள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பாகக் கண்டன அறிக்கைகளை வெளியிடுவதுடனோ வீராவேச உரைகளை நிகழ்த்துவதுடனோ எமது எதிர்ப்பை மட்டுப்படுத்தி விடக்கூடாது.

இது ஒரு இன அழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என்பதை புரிந்து கொண்டு, அரசியல் கட்சிகள், பொது ஸ்தாபனங்கள், மத நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE