Thursday 28th of March 2024 06:03:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது!

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது!


2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போர் உச்சம் பெற்றிருந்த வேளையில் போரை நிறுத்தி பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு வலியுறுத்தி சென்னையில் உள்ள சாஸ்த்திரி பவன் முன்பாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருந்த 'வீரத் தமிழ்மகன்' முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்படுகிறது.

ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்து சாவடைந்த முத்துக்குமாரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு சென்னை கொளத்தூரில் இவ் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் நினைவேந்தல் இன்று (ஜன-29) காலை 09.00 மணி முதல் சென்னை கொளத்தூரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அன்புடையீர் வணக்கம்,

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 12ஆவது ஆண்டு நினைவுநாள் (29.01.2021) இன்றாகும்.

தன்னுடைய ஈடு இணையற்ற உயிர்த்தியாகத்தாலும், அளவிட இயலாத அறிவாற்றலாலும் உலகெங்கும் தமிழினத்தை தலைநிமிரச் செய்த அந்த மாவீரனின் நினைவு நாளில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்து எல்லைகளையும் கடந்து தமிழர்களை ஒன்று திரட்டி வீரவணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் புலவர் புலமைப்பித்தன், சத்யராஜ், த.வெள்ளையன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை கொளத்தூரில் முத்துக்குமாரின் திருவுடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் ஈழ சொந்தங்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் முதலான 27 ஈகியர் நினைவாக அந்த மலர்த்தூண் அமைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.

29.01.2021 வெள்ளிக்கிழமை காலை 10.07 மணியளவில், முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்த அதே நேரத்தில் வீரத்தமிழச்சி செங்கொடியின் சார்பாக தோழர்.பேரறிவாளனின் தாயார் அற்தம்மாள், முத்துக்குமாரின் தாயாகவும் திகழ்ந்த சகோதரி தமிழரசி கருக்குவேல்ராஜன் மலர்த்தூணுக்கு மலர்வணக்கம் செலுத்தி வீரவணக்க நிகழ்வை தொடங்கி வைக்கின்றனர்.

அவர்களை தொடர்ந்து நிகழ்வில் பங்குபற்றுவோர் மலர் வணக்கம் செலுத்தி மெழுகுவர்த்திகளை ஏந்தி, அந்த தியாகத் திருவிளக்குகள் நம் நெஞ்சில் மூட்டிய அக்கினிக் குஞ்சை நினைவூட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

எவரும் பேசாமல், முழக்கங்கள் இல்லாமல், அந்த வீர தமிழ் மகனின் மரணவாக்குமூலம் மட்டுமே பின்னணியில் ஒலித்து கொண்டிருக்க, மௌனமலர் அஞ்சலியாக இந்த நிகழ்வு நடைபெறும் என்பதை அன்போடு தெரிவித்துகொள்கிறோம்.

முத்துகுமார் முதலான 27 மாவீரர்களின் மனசாட்சியோடு நாம் ஒவ்வொருவரும் மனம்விட்டு பேச வாய்ப்பளிக்கும் விதத்தில் கனத்த அமைதியுடன் நாம் வீரவணக்கம் செலுத்த இருக்கின்றோம்.

முத்துகுமாரின் குடும்பத்தினர் மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்த மாவீரர்களின் குடும்பத்தினரையும் இந்த நிகழ்வில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முத்துகுமாரின் திருவுடலுக்கு வீரவணக்கம் செலுத்தத் திரண்ட ஒவ்வொருவரையும் இந்த நிகழ்வுக்கு உரிமையுடன் அழைக்க வேண்டியது எங்கள் கடமையாகிறது.

அந்த தமிழர் பெருங்கூட்டம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்கிறது என்பதை உறுதி செய்வது ஒன்றே இந்த வீரவணக்க நிகழ்வின் நோக்கம். நீங்கள் மட்டுமின்றி உங்கள் அமைப்பும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று உரிமையுடன் அழைக்கின்றோம்.

இந்த நிகழ்வை பொறுத்தவரை நாங்கள் வெறும் நார் மட்டுமே. மலர்களாகிய நீங்கள் தான் இதை மாலையாக்க முடியும். எனவே 2021 சனவரி 29 காலை 9 மணியளவில் நிகழ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை உரிமையோடும் உண்மையோடும் அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி

இப்படிக்கு,

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு

செம்பியன்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE