Friday 29th of March 2024 12:20:24 AM GMT

LANGUAGE - TAMIL
-
ராஜீவ் கொலை விவகாரம்; ஏழு பேரும் விடுதலையாகின்றனரா? தமிழக அரசியலில் பரபரப்பு!

ராஜீவ் கொலை விவகாரம்; ஏழு பேரும் விடுதலையாகின்றனரா? தமிழக அரசியலில் பரபரப்பு!


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவருகின்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுவருவதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக தெரியவருகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அதன் பின்னர் குறித்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ம் ஆண்டு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு மத்திய அரசு பதில் வழங்கவில்லை. இதற்கிடையே, தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றி மத்திய அரசு கேட்ட விவரங்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கடிதம் எழுதியது. அதில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என கூறியது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த கூடுதல் ஆவணத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது; இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் தொடராக கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்யவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுனர் பன்வாரிலால் புரோகித்திடம் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரும் கடிதத்தினைக் கையளித்திருக்கின்றார். குறித்த நிகழ்வின் போது அமைச்சர் ஜெயக்குமாரும் பிரசன்னமாகியிருந்ததாக தமிழக ஊடகங்கள் ஒளிப்படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பிந்திக்கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆளுநரின் செயலாளர் இந்தியத் தலைநகர் டெல்லிக்கு அவசர பயணமாகியிருப்பதாக நம்பகரமாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக அரசுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கும் இடையிலான இணக்கமான அரசியல் உறவின் வெளிப்பாடாக ஏழுபேரும் விடுதலையாகக்கூடிய சாத்தியம் நூறுவிழுக்காடாக காணப்படுவதாக தமிழகத்தின் மூத்த ஊடகர்கள் அருவிக்குத் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE