Wednesday 24th of April 2024 02:16:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவில் ஐந்தில் ஒருவர் கொரோனா  தொற்றுக்குள்ளானதாக அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் ஐந்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அதிர்ச்சித் தகவல்!


இந்தியாவில் கோவிட்19 தொற்று நோய் உச்சத்தில் இருந்தபோது நாட்டு மக்களில் ஐந்தில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டிருந்தததாக ஆய்வு முடிவொன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மொத்த சனத்தொகையில் 21 வீதமானவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கலாம் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒருவருக்கு கடந்த காலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததா? என்பதை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ளமை அவருடைய உடலில் உருவாகியிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு கண்டுபிடிக்கலாம்.

இவ்வாறான மூன்றாம் கட்ட கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி முதல் ஜனவரி 8 ஆம் திகதி வரையில் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில், 700 கிராமங்களில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவைத் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததற்கான ஆதாரம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதுக்கு மேல் 28 ஆயிரத்து 589 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 21.4 வீதம் பேரும், 10 முதல் 17 வயதுக்குட்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 25.3 வீதம் பேரும் தொற்றுக்கு ஆளாகி குணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் 31.7 வீதத்தினருக்கும், குடிசைகளற்ற பகுதிகளில் 26.7 வீதத்தினரும், கிராமப்புறங்களில் 23.4 வீதத்தினருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 23.4 வீதம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவைத் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

மேலும், 7,171 சுகாதார பணியாளர்களின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவர்களில் 25.7 வீதம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில் தற்போது நாட்டில் கொரோனா விகிதம் குறைந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்தியா முழுவதும் 12,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE