Monday 17th of May 2021 12:54:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 41 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 41 (வரலாற்றுத் தொடர்)


இன ஒடுக்குமறைக்கெதிரான மக்கள் பேரெழுச்சி! - நா.யோகேந்திரநாதன்!

"சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாதவனும் கூட சுதந்திரத்தை நேசிக்கவே செய்கிறான். நம் உடலுக்கு எலும்புகள் எப்படி முக்கியமோ, சக்கரத்துக்கு அச்சாணி எவ்வளவு முக்கியமோ பறவைக்கு இறக்கைகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மனிதனுக்குச் சுதந்திரம். அது இல்லாமல் போனால் வாழ்வில் முழுமை கிட்டாது. சுதந்திரம் யாருக்காவது மறுக்கப்பட்டால் அதை நீங்கள் பார்த்துக்கொண்டு மட்டுமேயிருந்தால் உங்கள் சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விடுகிறது.

இது லத்தீன் அமெரிக்கப் புரட்சியின் மூலகர்த்தா எனவும் தந்தை எனவும் போற்றப்படும் ஹோசே மாட்டி மனித சுதந்திரம் பற்றி வெளியிட்ட கருத்தாகும். கியூப விடுதலையின் தலைவரும், விடுதலை பெற்ற கியூபாவின் அதிபராக விளங்கியவருமான பெடல் காஸ்ரோ முதற் புரட்சியில் ஏற்பட்ட தோல்வியால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டபோது அவர் ஆற்றிய உரையின் பத்து இடங்களில் மாட்டியின் கருத்துரைகளை "வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்ற பிரசித்தி பெற்ற உரையில் பத்து இடங்களில் உதாரணம் காட்டியதிலிருந்து மாட்டியின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு 1960ல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டபோது அதாவது மொழியுரிமைப் பறிப்பு மூலம் தமிழ் மக்களின் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது தமிழ் மக்கள் தங்கள் எலும்புகள் உருவப்பட்டதாகவும் தங்கள் வாழ்வுச் சக்கரத்தில் அச்சாணி முறிக்கப்பட்டதாகவும் தங்கள் பறப்புக்கான சிறகுகள் வெட்டப்பட்டதாகவும் உணர்ந்தனர். எனவே தமிழ் மக்கள் தமது சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் பொங்கியெழுந்தனர். அப்பேரெழுச்சியே சத்தியாக்கிரகப் போராட்டமாக பரிணாமம் பெற்றது.

தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்குக்கொண்டு வரப்படுவதையும் அதன் அடிப்படையில் முன்மொழியப்பட்ட நீதிமன்ற மசோதாவையும் எதிர்த்து ஆரம்பமான தமிழரசுக் கட்சியின் போராட்டத்தின் முதல் கட்டம் அரச நிர்வாக சேவையை வடக்குக் கிழக்கில் முடக்குவது என்ற நோக்கத்துடன் அமைந்தது. முதலில் அப்போராட்டம் யாழ்ப்பாணம் கச்சேரியின் முன்பு ஆரம்பமானது. கச்சேரியில் பணியாற்றும் அரச பணியாளர்கள் உள்ளே செல்லவிடாமல் வாசலில் அமர்ந்து மறியல் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியின் தொண்டர்களும் கலந்து கொண்டபோதிலும் அடுத்தடுத்த நாட்களில் மக்கள் அணியணியாகத் திரண்டு பங்கு கொள்ள ஆரம்பித்தனர். எனவே மக்கள் திரளை ஒழுங்குபடுத்தும் முகமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகுதிகளிலுமுள்ள மக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனவே தூரஇடங்களிலிருந்து வரும் மக்கள் யாழ்.பஸ் நிலையத்தில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து ஊர்வலமாகக் கோஷங்களை எழுப்பியவாறு கச்சேரி வாயிலை அடைந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சத்தியாக்கிரகிகளுடன் இணைந்து கொண்டனர். அவ்வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை பாடசாலைகளாகக் கலந்து கொண்டனர். அதேபோன்று காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசானத் தொழிற்சாலை, உப்பளத் தொழிலாளர்கள், மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலை என்பவற்றின் தொழிலாளர்களும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அதேவேளையில் தமிழ் காங்கிரஸ், சமசமாஜக் கட்சி ஆகியோரும் தங்கள் கட்சி பேதங்களைக் கடந்து சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்தத்தில் முழு வடமாகாணமுமே எழுச்சி பெற்று தமிழரசுக் கட்சியால் தொடக்கி வைக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் பெரும் மக்கள் போராட்டமாகப் பொங்கியெழும் நிலைமை தோன்றியது.

அப்போது அரசாங்க அதிபராக இருந்த ஸ்ரீகாந்தா கச்சேரிக்குள் மதிலேறிக் குதித்து உள்ளே போக முயன்றமையும் அதைச் சில இளைஞர்கள் கண்டு விட்டுத் தடுத்து நிறுத்திய சம்பவமும் இடம்பெற்றது. ஒருநாள் பொலிஸார் சத்தியாக்கிரகம் நடக்கும் இடத்தில் நுழைய முற்பட்டபோது இளைஞர்கள் பொலிஸ் ஜீப்புக்கு முன்னால் துணிச்சலுடன் படுத்து ஜீப்பைத் திருப்பிய அனுப்பியதும் இடம்பெற்றது.

அதேவேளையில் இப்போராட்டம் அடுத்த வாரத்திலேயே கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. நேமிநாதன், ஏகாம்பரம் ஆகியோர் தலைமையில் திருகோணமலைக் கச்சேரி முன்பும் செல்லையா இராஜதுரை, மன்சூர் மௌலானா, இராசமாணிக்கம் ஆகியோர் தலைமையில் மட்டக்களப்புக் கச்சேரி முன்பும் நிகழ்த்தப்பட்ட மறியல் போராட்டங்கள் பேரெழுச்சியுடன் இடம்பெற்றன.

வடக்குக் கிழக்கில் எங்கும் பரந்து இடம்பெற்ற போராட்டங்களில் இளைஞர்கள், முதியோர்கள், வயது வந்தவர்கள் என ஆண்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். இதில் முக்கிய விடயம் சாதாரணமாகவே பொது விடயங்களில் பங்கு கொள்வதை வழக்கமாகக் கொண்டிராத முஸ்லிம் பெண்கள் கூட ஏராளமாகப் பங்கு கொண்டனர். பெண்கள் தேவாரங்களைப் பாடியும், பஜனைகள் இசைத்தும். தமிழ் பற்றூட்டும் பாரதி, பாரதிதாசன் பாடல்களைப் பாடியும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஒரு புனித நிலை நிலவும் வகையில் முன்னெடுத்தனர்.

வடக்குக் கிழக்கில் தோன்றிய இந்த அலையும் மேலோட்டமாக ஒரு அமைதிப் போராட்டமாகத் தோன்றியபோதும் மௌனமான ஒரு கொந்தளிப்பாகவே விளங்கியது.

ஓரிரு நாட்களிலோ அல்லது ஒன்றிரண்டு வாரங்களிலோ இப்போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடுமென எதிர்பார்த்த அரசாங்கத்தை நாளுக்கு நாள் விரிவடைந்து சென்ற போராட்டம் அச்சமடைய வைத்தது. இரண்டு மாதங்களைக் கடந்த நிலையிலும் போராட்டம் தொடரப்பட்ட நிலையில் அப்போது நீதியமைச்சராக இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க உடனடியாக அவசரகால நிலைமைப் பிரகடனப்படுத்த வேண்டுமெனவும் தமிழரசுக் கட்சித் தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் பிரதமரை வலியுறுத்தினார். அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 04.04.1961 அன்று இது தொடர்பாக ஆராய அமைச்சரவையைக் கூட்டினார். ரி.பி.இலங்கரத்தின, சி.பி.டி.சில்வா போன்ற சில அமைச்சர்கள் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்துவதை எதிர்த்ததுடன் தமிழரசுக் கட்சியுடன் பேச்சுகளை நடத்தவேண்டுமென வலியுறுத்தினர். நான்கு மணித்தியாலங்கள் இடம்பெற்ற விவாதங்களின் பின் இறுதியில் நீதியமைச்சர் பி.சி.பெர்னாண்டோ அவர்களை தமிழரசுக் கட்சியுடன் பேச்சுகளை நடத்த அமைச்சரவை நியமித்தது.

நீதியமைச்சர் பி.சி.பெர்னாண்டோவுக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் தலைமையிலான குழுவினருக்குமிடையில் 3 மணி நேரம் பேச்சுகள் இடம்பெற்றன. அதில் மூன்று கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியினரால் முன்வைக்கப்பட்டன. அதாவது வடக்குக்; கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியென அங்கீகரிக்கப்படவேண்டுமெனவும் அரச கரும மொழிச் சட்டத்தில் தமிழ் அரச பணியாளர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமெனவும், வடக்குக் கிழக்குக்கு வெளியேயுள்ள தமிழர்களின் உரிமைகள் பற்றி நியாயமான தீர்வு காணப்படவேண்டுமெனவும் கோரப்பட்டது. அவற்றை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் அதை அடுத்தநாளே அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக வாக்குறுதியளித்தார்.

அதையடுத்து இக்கோரிக்கைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு 3 மணித்தியாலங்கள் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியில் அவை நிராகரிக்கப்பட்டன.

தமிழரசுக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட குறைந்த பட்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 11ம் திகதி நல்லூரில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 14ம் திகதி ஆரம்பமாகுமெனப் பிரகடனம் செய்கிறார்.

அத்தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ முத்திரை வெளியிடப்பட்டு தமிழீழ தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்படுகிறது. தமிழீழ முத்திரை பொறிக்கப்பட்ட கடிதங்கள் அமைச்சர்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி அரச காணிகளை வழங்கும் முகமாக காணிக் கச்சேரி நடத்தப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து காணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தபால் சேவையை மேற்கொள்ளல், காணிக் கச்சேரி நடத்துதல் என்பன ஒரு அரசாங்கத்துக்குள் இன்னொரு போட்டி அரசாங்கத்தை நடத்தும் ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகவே கருதப்பட்டது.

எனவே 17.04.1961 அன்று அவரசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு கேணல் உடுகம தலைமையில் வடபகுதிக்கு இராணுவம் அனுப்பப்படுகிறது. சத்தியாக்கிரகம் இடம்பெற்ற பகுதிகளில் பிரவேசித்த இராணுவத்தினர் தமிழரசுக் கட்சியின் தலைவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றுகின்றனர். ஏனைய போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் படையினர் கலைந்து போகும்படி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கின்றனர். அவர்களின் அச்சுறுத்தலை எவருமே பொருட்படுத்தவில்லை. பெண்கள் கூடத் தேவாரங்களைப் பாடியபடியே இருக்கின்றனர்.

உடனடியாகவே படையினர் துவக்குப் பிடிகளாலும் கொட்டன்களாலும் தாக்குதலை ஆரம்பிக்கின்றனர். இளைஞர்கள், முதியோர்கள், பெண்கள் என எவ்வித பேதமும் பாராமல் அடித்து நொருக்கி இராணுவ வாகனங்களில் தூக்கி எறிகின்றனர். கொடிய வன்முறைகள் மூலம் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்டவர்கள் போக ஏனையோர் அடித்து விரட்டப்படுகின்றனர்.

அதேவேளையில் ஏப்ரல் 17ல் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தமிழரசுக் கட்சி தடை செய்யப்படுகிறது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டதுடன் பத்திரிகைத் தணிக்கையும் அமுலுக்கு வருகிறது. தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகையும் தடைசெய்யப்படுகி;றது. தலைவர்கள் உட்பட 68 பேர் கைது செய்யப்படுகின்றனர்.

வடபகுதியில் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டு எங்கும் இராணுவ ரோந்து அதிகரிக்கப்படுகின்றது. வீதியில் இராணுவத்தினரால் கண்களில் படும் அனைவரும் படுகொடூரமாகத் தாக்கப்படுகின்றனர். சில துப்பாக்கிப் பிரயோகங்களும் இடம்பெற்றன. அதில் வாய்பேசமாட்டாத ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. உடுப்பிட்டிப் பகுதியில் ஒரு பாலியல் வல்லுறவுச் சம்பவமும் இடம்பெறுகிறது. இராணுவத்தினரின் கொடிய அத்துமீறல்களையடுத்து கடற்படையினர் அனுப்பி வைக்கப்பட்டு முக்கிய இடங்களில் நிறுத்தப்படுகின்றனர். அத்துடன் இராணுவக்கொடுமைகள் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

அதேவேளையில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியது. தமிழரசுக் கட்சி முன் வைத்த அதே நான்கு கோரிக்கைகளை முன்வைத்து 5 இலட்சம் மலையகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்கின்றனர். ஏப்ரல் 24ல் தோட்டத்தொழிற்துறை அத்தியாவசியச் சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அங்கும் இராணுவம் அனுப்பி வைக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர். அதில் அமிர்தலிங்கத்தின் மனைவியாரான மங்கையற்கரசியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் 04.10.61 அன்று அதாவது ஆறு மாதங்களின் பின்பு விடுவிக்கப்படுகின்றனர்.

மேலும் 04.03.1961 திருகோணமலையில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய தடியடிப் பிரயோகத்தில் பலர் படுகாயமடைந்தனர். மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார். மட்டக்களப்பில் பட்டிருப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக அவர் சில மாதங்களில் உயிரிழந்தார். இருதய நோயாளியான ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினர் வி.ஏ.கந்தையா படையினரின் தாக்குதல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவ்வாறு தமிழ் மக்கள் உரிமை கோரி நடத்திய சாத்வீகப் போராட்டம் இராணுவ வன்முறை மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

1950 காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம், 1958 இனக் கலவரம் என்பனவற்றில் சிங்களக் காடையராலும் புத்த பிக்குகளாலும் சில அரசியல்வாதிகளாலும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முதல் முதலாகத் தமிழர்களின் போராட்டத்தின் மேல் இராணுவம் ஏவிவிடப்பட்டது 1961 சத்தியாக்கிரக காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தமிழ் மக்கள் உரிமை கோரி மேற்கொண்ட ஒரு மக்கள் பேரெழுச்சி என்பதையும் மறுத்துவிடமுடியாது.

மக்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படும்போது, அவர்களுக்கு நேர்மையான உறுதியான தலைமைகள் போராட்டங்களைத் தலைமையேற்று முன்கொண்டு செல்லும்போது எவ்வித தியாகங்களுக்கும் தயங்காது போராடத்தயாராகவேயுள்ளனர். ஆனால் தமிழ் தலைமைகளோ சரியான தூரநோக்கின்றி நெருக்கடிகள் ஏற்படும்போது எடுக்கவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய எவ்வித திட்டமுமின்றி செயற்பட்டு வந்தமையால் போராட்டங்கள் மழுங்கடிக்கப்படும் நிலையே மீண்டும் மீண்டும் ஏற்பட்டது. பாராளுமன்றப் பதவிகளை முதன்மையாகவும் ஏனைய மக்கள் மயப்பட்ட அரசியலை அதற்கு சேவை செய்யும் வகையிலும் பயன்படுத்தி வரும்வரை விமோசனத்தை எட்டுவது சாத்தியமாக இருக்கப்போவதில்லை என்பதே தமிழ் அரசியல் வரலாறு புலப்படுத்தும் ஆணித்தரமான உண்மையாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE