Thursday 28th of March 2024 09:03:15 PM GMT

LANGUAGE - TAMIL
.
வடக்கு - கிழக்கில் தமிழர் அதிகாரத்தில் இருப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு! - க.வி.விக்னேஸ்வரன்!

வடக்கு - கிழக்கில் தமிழர் அதிகாரத்தில் இருப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு! - க.வி.விக்னேஸ்வரன்!


இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்யவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதில்லை என்று அமைச்சரவையில் எடுத்துள்ள முடிவு பற்றிய உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தக் கேள்விக்கு அவா் அளித்துள்ள பதில் வருமாறு,

நான் எனது உரைகளில் தொடர்ச்சியாக கூறி வந்ததே இன்றைக்கு இந்தியாவுக்கு நடந்துள்ளது. அன்று தொட்டு இன்றுவரை இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றியே வந்துள்ளன. அதன் தொடர்ச்சியே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில் நடந்துள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் சபை கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னரே இது நடைபெறும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அது சற்று முன்னதாகவே நடந்துவிட்டது. யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை இலங்கை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்க வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகவும் பாரதூரமான ஒரு விடயம்.

இனியாவது இலங்கைத் தீவில் நிரந்தர நம்பிக்கைக்குரிய தரப்பாக இந்தியா தமிழ் மக்களைக் கருதி அவர்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் அவர்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை மையப்படுத்தி தனது கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன். இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்யவேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றினை தமிழ் மக்களே தெரிவுசெய்யும் வகையில் சர்வதேச சமூகத்தினால் வடக்கு கிழக்கில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கையை இந்தியா தலைமை ஏற்று நடத்த முன்வர வேண்டும். கிழக்கு முனை விடயத்தில் நடந்ததே நாளை 13ஆவது அரசியல் திருத்த விடயத்திலும் நடக்கும். ஒற்றை ஆட்சியின் கீழான எந்தத் தீர்வுக்கும் இந்த நிலைமையே ஏற்படும் என்பதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும்.

1987ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது இந்திய மாநிலங்களுக்கு வழங்கும் அதே உரிமைகளை இலங்கையின் மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்றே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் ஜே.ஆர் அவற்றை எல்லாம் மாற்றி ஒரு உருப்படாத 13வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அவர் பின் வந்த ஆர்.பிரேமதாச அதற்கு ஒரு படி மேலே போய் அரசாங்க அதிபர், மாவட்ட செயலர், கிராம சேவகர் ஆகியோரை மாகாண அதிகாரத்தின் கீழிருந்து பிரித்தெடுத்து மத்திய அரசின் அதிகாரத்துக்குக் கீழ் கொண்டு வந்தார்.

வலுவற்ற 13வது திருத்தச் சட்டத்தில் கொடுத்த சொற்ப காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கூட இது வரையில் எந்த சிங்கள அரசாங்கமும் தரவில்லை. சிங்கள அரசாங்கங்கள் கயிறு கொடுப்பதில் மன்னாதி மன்னர்கள். இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் காரியம் முடியும் வரையில் காலைப் பிடிப்பார்கள். அதன் பின் கழுத்தைப் பிடிப்பார்கள். இந்தியாவும் இலங்கைத் தமிழ் மக்களும் ஒருவர்க்கொருவர் உதவியாக இல்லா விட்டால் இருவருக்குமே அதோ கதி தான்.


Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE