Monday 17th of May 2021 12:16:51 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஜனாதிபதியின் தேசிய தின உரையும் மதத்தினூடான அரசியலும்! - நா.யோகேந்திரநாதன்!

ஜனாதிபதியின் தேசிய தின உரையும் மதத்தினூடான அரசியலும்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ "தான் ஒரு பௌத்த தலைவர் என்பதை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கப் போதில்லை எனவும் பௌத்த போதனைகளின்படி இந்த நாட்டை வழி நடத்துவதாகவும் தேசியத்தை மதிக்கும் நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் ஒரு தேசிய தன்மைக்கு எதிராக தேசத் துரோக சக்திகள் தங்கள் இலக்குகளை அடைய அணி திரண்டு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளை நாடுகின்றன" எனவும் தெரிவித்திருந்தார். புத்த பகவானின் பஞ்சசீலக் கொள்கையிலிருந்து வெகு தூரம் விலகி போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதன் மூலமாகவும் இறுதிப் போரின்போது மனிதப் படுகொலைகளை வழிநடத்தியும் இன்றும் ஒரு இராணுவ ரீதியான ஆட்சி மூலம் அடக்கு முறையை முன்னெடுத்தும் ஆட்சியை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அது இந்த நாட்டை பௌத்த போதனைகளின்படி நடத்துவது என்ற அவரின் கூற்றுக்கு அது எவ்வளவு தூரம் பொருத்தமாயிருக்கும் என்பது கேள்விக்குரியதாகும்.

நாட்டின் தேசிய வளங்களை விற்பதற்கு எதிரான எதிர்ப்பு, தென்னிலங்கையில் வலுப்பெற்று வரும் நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான மத ஒடுக்குமுறைகள், மனிதகுல விரோத நடவடிக்கைகள் தொடர்பாக கடும் அழுத்தங்கள் சர்வதேச அளவில் எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி தன்னைப் பாதுகாக்கும் வகையில் பௌத்த சிங்கள கவசத்தை தன்மேல் போர்த்திக் கொள்கிறார் என்றே கருதவேண்டியுள்ளது.

நாட்டின் வளங்களை விற்பது, வாழ்க்கைச் செலவு உயர்வு என்பனவற்றால் சிங்கள மத்தியில் எழும் எதிர்ப்பை திசை திருப்ப பௌத்த மதம் கையெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஏனைய மதங்களுக்கு எதிரான அநீதிகளும் தொடரப்படுகின்றன.

காலங்காலமாக அதிகார பீடங்கள் மக்களின் எதிர்ப்பலையை திசை திருப்பி; தங்கள் அரசியல் அதிகாரத்தைத் தொடர மதங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருவது உலக வரலாற்றில் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன.

உலக வரலாற்றில் பிரான்சியப் புரட்சிக்கு ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. மெல்லமெல்ல வளர்ச்சியடைந்து பலம் பெற்று வந்த கைத்தொழில் வர்க்கத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு ஏற்கனவே ஆட்சியதிகாரத்திலிருந்த நிலவுடமை வர்க்கம் தடையாக இருந்தபோது அதை உடைத்து ஜனநாயக அரசியலை உருவாக்குவதற்கான கதவைத் திறந்துவிட்டது பிரான்ஸ் புரட்சியேயாகும்.

பிரான்ஸில் விளைநிலங்கள் மத நிறுவனங்களதும் மதவாதிகளினதும் உடைமைகளாகவே விளங்கின. ஏனைய மக்கள் அந்நிலங்களின் பண்ணையடிமைகளாகக் கடுமையான முறையில் வேலை வாங்கப்பட்டனர். மத குருமார் தம்மால் குற்றவாளிகளெனக் கருதப்படுபவர்களைச் சிலுவையில் கட்டி உயிருடன் எரியூட்டிக் கொலை செய்வது உட்படக் கடும் தண்டனைகளை வழங்குமளவுக்கு அதிகாரம் பெற்றிருந்தனர். அரசன் அவர்களின் பிரதிநிதியாக அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கமையவே ஆட்சி செலுத்த வேண்டியிருந்தது. ஒரு பண்ணையடிமை பண்ணையை விட்டுத் தப்பியோட முயல்வது அல்லது மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பது போன்றவை மரணதண்டனை அல்லது நீண்ட கொடிய சிறை போன்ற தண்டனைகள் வழங்கப்படக்கூடிய குற்றங்களாயிருந்தன.

அதேநேரத்தில் வளர்ந்து வந்த கைத்தொழில் வர்க்கத்திற்கு ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். எனவே பண்ணையடிமைகளை விடுவிக்க வேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது.

நிலவுடமை பண்ணையடிமை முறையை உடைத்தெறிய அடிமைப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சிக்கு வால்டெயர், ரூசோ போன்ற தத்துவமேதைகள் அரசியல் வடிவம் கொடுத்து மக்களை ஒரு புரட்சியை நோக்கி வழிநடத்தினர்.

எங்கும் சுதந்திரம், சமாதானம், சமத்துவம் என்ற கோஷங்கள் எழுந்தன. அறிஞர்கள், தத்துவமேதைகள், மக்கள் தலைவர்கள் ஆகியோர் அடைத்து வைக்கப்பட்ட பெரும் சிறைச்சாலை தகர்க்கப்பட்டது. அத்துடன் புரட்சி வெடித்து நாடெங்கிலுமுள்ள அதிகார சக்திகள் வேட்டையாடப்பட்டனர். 14ம் லூயி மன்னனும் அவனது சகபாடிகளும் "கில்லிட்" இயந்திரம் மூலம் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டனர்.

புரட்சியின் வெற்றியையடுத்து மாறிமாறி வௌ;வேறு குழுக்கள் ஆட்சியைக் கைப்பற்றும் ஒரு நிலை நிலவிய போதும் இறுதியில் நெப்போலியன் ஒரு நிலையான ஆட்சியை ஏற்படுத்தினான்.

எப்படியிருந்தபோதும் உலகிலிருந்து நிலவுடைமை அரசியலதிகாரத்தை அகற்றி ஜனநாயக அரசியலுக்கான கதவுகளைத் திறந்து விட்டது பிரான்ஸ் புரட்சி என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. அப்புரட்சியின் மூலம் அரசியலில் மதவாதிகளின் மேலாதிக்கம் முற்றாகவே தகர்க்கப்பட்டது என்பது ஒரு சிறப்பம்சமாகும்.

பிரான்ஸ் புரட்சியின் வெற்றியிலிருந்து இன்றுவரை ஐரோப்பா, அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளில் அரசியலில் மதம் மேலாதிக்கம் செலுத்தும் நிலை மீண்டும் தலையெடுக்க முடியவில்லை. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் ஆக்கிரமிக்கப்படும்போது மதமும் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டாலும் அந்த நாடுகளில் பரப்பப்பட்ட மதங்கள் அரசியலாதிக்கம் பெறுமளவுக்கான நிலைமைகள் ஏற்படவில்லை.

ஆனால் பிரான்ஸ் புரட்சி வெற்றி பெற்று சில நூற்றாண்டுகள் கடந்து விட்டபோதிலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் சில முஸ்லிம் நாடுகளிலும் அரசியலில் மதம் என்பது ஒரு ஆதிக்க சக்தியாக வலிமை பெற்றுள்ளது.

இந்தியாவில் இந்துத்துவ பிராமணிய மேலாதிக்கவாதமும் இலங்கையில் பௌத்த சிங்களப் பேரினவாதமும் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக மேலாதிக்கம் வகித்து வருகின்றன. எவ்வாறு பிரான்ஸ் புரட்சிக்கு முற்பட்ட காலத்தில் மதம் ஒரு மேலாதிக்கவாதிகளின் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டதோ, அவ்வாறே அதிகாரங்களைத் தக்க வைக்க மதம் ஆயுதமாகப் பாவிக்கப்படுகிறது. அதாவது மேற்கு நாடுகளில் பிரான்ஸ் புரட்சி ஏற்படுத்திய மாற்றம் இன்றுவரை அதாவது இரண்டு நூற்றாண்டுகள் கடந்தும் இந்தியா, இலங்கை உட்படப் பல ஆசிய நாடுகளை வந்தடையவில்லை.

இலங்கையில் 1972, 1978 அரசியலமைப்புக்கமைய இலங்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்பது அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது.

பௌத்த மதம் பௌத்த மக்களுக்கு எப்படியோ ஏனைய மதங்களும் அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒருவரின் வழிபாட்டுரிமையோ அவரின் மதத்துக்குரிய தனித்துவமான கலாசார சம்பிரதாயங்களோ அவருக்கோ அவரது மதத்தினருக்கோ மட்டுமே உரியது. அவை மற்ற மதத்தினரை எவ்விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. பாங்கோசை ஒலிப்பது, பிரித் ஓதுவது, கோவில்களில் பாடல்கள் போடுவது போன்றவை ஒலி பெருக்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்போது ஏனையோருக்கு இடையூறாக இருந்தால் அவற்றைப் புரிந்துணர்வின் மூலமோ அல்லது சட்டப்படியோ தவிர்க்கமுடியும். எப்படியிருப்பினும் அடிப்படையில் மதம் என்பது தனி மனித ஆன்ம ஈடேற்றத்துடனும் தத்தம் சமூக ஒழுங்குடனும் சம்பந்தப்பட்ட விடயம்.

அதுவே அடிப்படை உண்மையாக இருக்கும்போது ஒரு நாட்டின் ஒரு மதத்திற்கு மட்டும் ஏன் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அப்படியான ஒரு முன்னுரிமைக்கான தேவை என்ன?

ஒரு மதத்துக்கு முன்னுரிமை என்பதற்கான காரணங்கள் எதுவும் நியாயபூர்வமாக இல்லாதபோதும் அதன் பின்னால் ஏனைய மதங்கள் மீதான மேலாதிக்க முனைப்பும், ஆக்கிரமிப்பு நோக்கங்களும் பொதிந்திருப்பதைக் கவனிக்கமுடியும்.\

ஒரு ஆதிக்க சக்தியின் நியாயமற்ற வன்முறைகள் மூலமோ அல்லது சக்திப் பிரயோகத்தின் மூலமோ மேற்கொள்ளப்படக்கூடிய ஒரு ஆக்கிரமிப்பையோ அல்லது அநீதியையோ மதம் மூலம் மேற்கொள்ளப்படுவதை இந்த "ஒரு மதத்துக்கான முன்னுரிமை" வழங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது.

எனவே குறிப்பிட்ட ஒரு மதத்துக்கான முன்னுரிமை என்பது ஏனைய மதங்கள் பின்தள்ளப்பட்டு, ஒரு மதம் முழுமக்கள் மீதும் அரசியல் மேலாதிக்கம் செலுத்தக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குகின்றது. இலங்கையில் பௌத்தர்களுக்கு முன்னுரிமை அரசியல் சாசன ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்கள் மேல் தொடர்ந்து பல அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. இவை சட்டபூர்வமாக நியாயப்படுத்தப்படுவதுடன் அரச திணைக்களங்களும் அத்தகைய பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் மேலும் அவற்றைப் பின்பற்றும் மக்கள் மேலும் ஆதிக்கம் செலுத்தும் நிலையும் இடம்பெற்று வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் மாணிக்கமலை என்ற பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியைத் தீவகாபி யாத்திரிகர்களுக்கு தங்கிச்செல்ல மடம் அமைப்பதற்கென அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. செங்கலடியில் விவசாயிகளின் காணிகளை அவை தொல்பொருள் திணைக்களத்துக்கு உரியவை எனக் கூறப்பட்டு அங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபடத் தொடர்ந்து இடையூறு விளைவிக்கப்பட்டு வருகின்றது. புல்மோட்டையில் முஸ்லிம்களின் 500 ஏக்கர் காணிகள் தொல்பொருட் திணைக்களத்துக்கு உரியவை எனக் கூறப்பட்டு அங்கு மூன்று விகாரைகள் அமைக்கப்பட்டு அவற்றைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கொக்கிளாயில் தனியார் காணியும் மருத்துவ மனைக்குரிய காணியும் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு பெரிய விகாரை ஒன்று அமைக்கப்படுகின்றது. கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் இருந்த பகுதியில் விகாரை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முல்லை மாவட்டத்தில் குருந்தமலை ஐயனார் ஆலயம், நீராவிப்பிட்டி பிள்ளையார் ஆலயம் என்பனவற்றில் புத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெடுக்குநாறி லிங்கேஸ்வரர் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமானதெனக் கூறப்பட்டு அங்கு இந்து மக்களின் பாரம்பரிய வழிபாடுகள் தடை செய்யப்படுகின்றன.

அதாவது பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பது ஏனைய மதங்களைச்; சேர்ந்த மக்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவதும் அம்மக்களின் நிலங்களை அபகரிப்பதுமே என நடைமுறையில் அர்த்தப்படுகின்றது. இலங்கையில் மத பீடங்களே அரசியலை வழிநடத்துகின்றன என்ற ஒரு போலியான தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டு சிங்கள பௌத்த மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

ஆனால் உண்மையில் அங்கு மதம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக இங்கு பெரும்பான்மை இனத்தின் மதம் ஒடுக்குமுறைகளின் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

"ஆசைகளே பாவங்களுக்கு மூல காரணம்" என்றே பௌத்தம் போதிக்கின்றது. இலங்கையில் ஏனைய மக்களின் நிலங்கள், வழிபாட்டிடங்கள் மேல் கொண்ட பேராசையே பௌத்தம் எனக் கருதுமளவுக்கு அநீதிகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையைப் போன்றே தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் நாடான தாய்லாந்தில் பௌத்த மதகுருக்களோ மதத் தொண்டர்களோ கிறீஸ்தவக் குருமாரோ அரசியலில் பங்கு பற்றும் உரிமையோ வாக்களிக்கும் உரிமையோ வழங்கப்படாதவர்களாகவே உள்ளனர் என்பது கவனிக்கப்படத்தக்கது. ஆனால் இலங்கையிலோ மதமே எல்லாவற்றிலும் மேலாதிக்கம் செலுத்துவதாக விளங்கி வருகின்றது.

மதம் மக்களுக்கு அபின் போன்றது என்ற கார்ல்மாக்ஸின் மேற்கோள் மீண்டும் மீண்டும் சரியெனவே நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

இன, மத ஒடுக்குமுறைகளுக்கு தேசியம், தேசப்பற்று போன்ற போலி வடிவங்களைக் கொடுத்தும் அத்தகைய அநீதிகளுக்கு எதிரான எதிர்ப்புகளை தேசத் துரோகம் எனவும் அர்த்தப்படுத்துவதன் மூலமும் ஜனாதிபதி தமது மனித குல விரோத நடவடிக்கைகளையும் தேசிய நலன்களை விற்கும் தேசதுரோக நடவடிக்கைகளையும் மதத்தின்பேராலும் தேசத்தின் இறைமையின் பேராலும் சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்தி வருகிறார்.

மதத்திலிருந்து அரசியலும், அரசியலிலிருந்து மதமும் பிரித்தெடுக்கப்படாதவரை நியாயங்களை நிலைநிறுத்துவது சாத்தியமாயிருக்கப் போவதில்லை. பிரான்ஸ் புரட்சி கற்றுத்தந்த அந்த ஒப்பற்ற பாடத்தை இன்னும் பல ஆசிய நாடுகள் கற்றுக்கொள்ளவில்லை என்பதே எமது நாடுகளின் பின்னடைவுக்குப் பிரதான காரணமாகும்.

அருவி இணையத்திற்காக - நா.யோகேந்திரநாதன்.

09.02.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE