Thursday 18th of April 2024 12:27:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களுக்கு தடை;  சொத்துக்களையும் முடக்குகிறது அமெரிக்கா!

மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களுக்கு தடை; சொத்துக்களையும் முடக்குகிறது அமெரிக்கா!


மியான்மரின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டு இராணுவ ஆட்சித் தலைவர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அத்துடன், பொருளாதார ரீதியாக தடைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மியன்மார் இராணுவ ஆட்சித் தலைவர்கள் மீதான தடைகள் விதிப்பது தொடர்பிலான நிறைவேற்று அதிகார நிர்வாக உத்தரவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.

மியான்மர் இராணுவத் தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வர்த்த நடவடிக்கைகள் மீது தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், அமெரிக்காவில் நிர்வகிக்கப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைக் கையாள்வதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூகி உள்ளி்ட தவைர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்து உயிருக்குப் போராடிவருவதை அடுத்து இந்தத் தடை அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த் தாரை பிரயோகம் நடத்தப்பட்டது. ரப்பர் தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நடத்திய தாக்குதலில் மியா த்வே கைங் என்ற பெண் படுகாயமடைந்தார்.

அவர் மீது நேரடி துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.

போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இராணுவ ஆட்சியாளர்களால் மியான்மரில் 5-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

எனினும் தடைகளை மீறி ஆறிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், சட்டத்துக்கு மேலாக யாரும் இல்லை என மியான்மர் இராணுவ ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார். அத்துடன், அங்கு இராணுவத்தினர் அடக்குமுறைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையிலேயே மியான்மரின் இராணுவ ஆட்சித் தலைவர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஆட்சிப் பொறுப்பை மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களிடம் இராணுவம் ஒப்படைக்க வேண்டும். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க வேண்டும். மியான்மர் மக்களின் கோரிக்கை இதுவாகவே உள்ளது. மியான்மரில் இடம்பெறும் இராணுவ அடக்குமுறைகளை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும் பைடன் தெரிவித்தார். தேவைப்பட்டால் இராணுவ ஆட்சிக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை எடுப்படும் எனவும் அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மக்களின் ஜனநாயக உரிமை. இந்நிலையில் ஜனநாயக வழியில் போராடும் மக்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள டுடியாது எனவும் ஜே பைடன் தெரிவித்தார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பில் சில மியான்மர் இராணுவத் தலைவர்களுக்கு ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்நிலையில், நாங்கள் வலுவான ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் விதிக்கப் போகிறோம். மியான்மர் அரசாங்கத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை நாங்கள் முடக்குகிறோம். அதே நேரத்தில் சுகாதாரப் பாதுகாப்பு, சிவில் சமூக நடவடிக்கைகள் மற்றும் மியான்மர் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் பிற திட்டங்களுக்கு எங்களுடைய ஆதரவு தொடரும் எனவும் பைடன் தெரிவித்தார்.

பைடன் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதிவியேற்ற பின்னர் ஒரு நாட்டின் மீது தடைகளை விதித்த முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE