Wednesday 17th of April 2024 10:52:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளி. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டமையால் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!

கிளி. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டமையால் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!


யுத்தத்தினால் கிளிநொச்சி மாவட்டம் பாதிக்கப்பட்டமையால் பிறப்பு சான்றிதழ்களை பதிவு செய்வதில் தாமதங்கள் ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களிற்கு வழங்குவதற்கான நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. மனித உரிமைகளிற்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அனுசரணையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களில் பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களிற்கான சான்றிதழ்களை வழங்கி வைப்பதற்கான நடமாடும் சேவை இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் பிரதி பதிவாளர்நாயகம், கிராமசேவையாளர்கள், பதிவாளர் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 150 மேற்பட்ட பயனாளிகள் குறித்த நடமாடும் சேவை ஊடாக பயன்பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதி உரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிறப்பு சான்றிதழ் என்பது எமது பிறப்பினை உறுதிப்படுத்தும் ஓர் விடயமாகும். அதனை பெற்றுக்கொள்வதில் பெற்றோர் அக்கறையின்றி செயற்படுகின்றனர். அவர்களிற்கான போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையே இதுவாகும்.

வைத்தியசாலையில் பிறப்பு பதிவு செய்யப்படுகின்ற போதிலும் அதன் பிரதியை பதிவாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் பலர் அக்கறை கொள்வதில்லை. வைத்தியசாலையில் வழங்கப்படும் சான்றிதழை பயன்படுத்தி பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துவிட்டு தாம் பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொண்டதாக கருதுகின்றனர்.

உண்மையில் குறித்த சான்றிதழை பிரதேச செயலகங்களில் உள்ள பதிவாளர் நாயகத்தின் அலுவலகங்கள் ஊடாக பதிவு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவ்வாறு செயற்படாமையால் பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட செயலகங்களில் இடம்பெறும் கூட்டங்களில் இவ்வாறான நிலை தொடர்பில் எனது கவனத்திற்கு உத்தியோகத்தர்களால் கொண்டு வரப்படுகி்றது. இந்த விடயத்தில் பெற்றோர் அவதானமாக செயற்படாதவிடத்து பிள்ளைகள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளிற்கு பிறப்பு சான்றிதழானது இன்றியமையாத ஒன்றாகும். கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதாலும் இவ்வாறு பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. பதிவுகள் இடம்பெற்றிருந்தாலும் அவை தொலைந்துள்ளமையால் இவ்வாறான நிலை காணப்படுகின்றது. அதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.

இன்றைய தினம் 150 பேருக்கு மேல் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்யை நடமாடும் சேவை ஊடாக முழுமையாக வழங்க முடியாது. ஆனால் ஏனையோருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக அனுசரணை வழங்கிய மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் குறிப்பிடுகையில்,

பிறப்பு சான்றிதழ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இன்றைய தினம் 150 பேருக்கு மேல் எம்மாள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்றைய நடமாடும் சேவை ஊடாக அனைவருக்கும் வழங்க முடியாது. ஆனாலும் 90 பேர் வரை இன்று வழங்ககூடிய நிலை காணப்படும் எனவும், ஏனையோருக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், பதிவு செய்யப்பட்டோருக்கான பிறப்பு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE