Monday 17th of May 2021 01:12:46 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 42 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 42 (வரலாற்றுத் தொடர்)


இலங்கையின் இராணுவப் புரட்சியும் ஏகாதிபத்தியங்களின் தோல்வியும்! - நா.யோகேந்திரநாதன்!

"போராடுவது தோல்வியடைவது, மீண்டும் போராடுவது மீண்டும் தோல்வியடைவது; மீண்டும் மீண்டும் போராடுவது, மீண்டும் மீண்டும் தோல்வியடைவது - இறுதி வெற்றிவரை இது மக்களின் நியதி", "போராடுவது தோல்வியடைவது, மீண்டும் போராடுவது மீண்டும் தோல்வியடைவது, மீண்டும் மீண்டும் போராடுவது மீண்டும் மீண்டும் தோல்வியடைவது – தங்கள் சவக்குழிவரை இது பிற்போக்காளர்களதும் ஒடுக்கு முறையாளர்களதும் நியதி".

இது 70 கோடி சீன மக்களை விடுதலையை நோக்கி வழிநடத்தி ஜப்பானிய ஆக்கிரமிப்பாளரிடமிருந்தும், அமெரிக்க அடிவருடி சியாங்கே சேக்கின் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்தும் விடுவித்து, சீனாவைச் சுதந்திர தேசமாக நிமிர வைத்த சீனத் தலைவர் மாஓசேதுங் அவர்களின் தத்துவார்த்தக் கோட்பாடாகும்.

இலங்கைக்கு பிரித்தானியர் சுதந்திரம் வழங்கியபோது தங்கள் ஏகாதிபத்திய நலன்களைத் தொடர்ந்து இலங்கையில் பாதுகாக்கக் கூடிய சிங்கள மேட்டுக்குடியினரின் அரசியல் அமைப்பான ஐக்கிய தேசியக் கட்சியிடமே ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அவர்கள் எவ்வித குறைபாடுகளுமின்றி அவர்களுக்குச் சார்பான மக்கள் விரோத ஆட்சியை நடத்தினர்.

ஆனால் 1956ல் பண்டாரநாயக்கா தலைமையிலான சிங்கள பௌத்த தேசிய எழுச்சி காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது. அதன் காரணமாக பிரித்தானிய, அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை தோன்றியது. அது மட்டுமின்றி பிரித்தானியப் படைத்தளங்களை நாட்டை விட்டு வெளியேற்றியமை, அமெரிக்க எண்ணெய் விநியோக நிறுவனங்களைத் தேசிய மயமாக்கியமை, துறைமுகங்கள், வங்கிகள் போன்றவற்றை நாட்டுடமையாக்கியமை போன்ற தேசிய நலன் சார்ந்த விடயங்கள் பண்டாரநாயக்காவின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்ற தேவையை அவர்களுக்கு உருவாக்கியது.

கொங்கோவில் தேர்தல் மூலம் வெற்றி பெற்று பிரதமரான லுமம்பா கொல்லப்பட்டு இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டதைப் போன்றும், சிலியில் அசெண்டேயைக் கொன்று அவரின் ஆட்சியைக் கவிழ்த்து நாட்டை இராணுவம் கைப்பற்றியது போன்றும் தனக்கும் நேரலாம் என்பதை பண்டாரநாயக்க உணர்ந்த கொண்டமையால் முன்னெச்சரிக்கையுடன் சில ஏற்பாடுகளைச் செய்திருந்தார். குறிப்பாக இராணுவத்தின் கட்டளைப் பகுதிகளில் முடிந்தளவு சிங்கள பௌத்தர்கள் பதவி வகிக்கும் வகையில் சில மாற்றங்களைப் படிப்படியாக உருவாக்கினார். தலைவர்கள் மட்டத்தில் அவற்றை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை.

எனினும் கடற்படைத் தளபதியும் விமானப்படைத் தளபதியும் அவரின் குடும்ப நண்பர்களாகவே விளங்கினர். எனினும் பிரித்தானியர் காலத்தில் படைகளில் பணியாற்றியவர்களே படைகளில் இரண்டாவது மூன்றாவது கட்டளைப் பீடங்களில் பதவி வகித்தமையால் அவர் படைகள் விடயத்தில் மிகவும் விழிப்புடனேயே செயற்பட்டார்.

ஏற்கனவே பண்டாரநாயக்க அதிகாரத்தில் இருந்தபோது இரு தடவைகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று 1958 இனக் கலவரம் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தினால் பண்டாரநாயக்க உடனடியாகவே அவசர கால நிலைமையைப் பிரகடனம் செய்வார் எனவும் அச்சந்தர்ப்பத்தைப் பாவித்து இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுமென எதிர்பார்த்தனர். ஆனால் பண்டாரநாயக்க உடனடியாக அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யாது தனக்கு சார்பான அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தி கேந்திர நிலையங்களின் பாதுகாப்பு பற்றி உரிய தயாரிப்புகளை மேற்கொண்ட பின்பு மூன்று நாட்களின் பின்பே இராணுவத்தை வீதிகளில் இறக்கினார். எனவே முதலாவது எதிர்பார்ப்பு தோல்வியடைந்தது.

இரண்டாவது பண்டாரநாயக்கவைக் கொலை செய்ததன் மூலம் ஆட்சியை வீழ்த்த முடியுமென எதிர்பார்க்கப்பட்டது. பல கட்சிக் கூட்டணியான மக்கள் ஐக்கிய முன்னணியில் அடுத்த பிரதமர் யார் என்பது தொடர்பாகக் குழப்பங்கள் ஏற்பட்டு ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லாத மூத்த தலைவரான டபிள்யூ. தஹநாயக்க பிரதமராக்கப்பட்டதால் அந்த நோக்கமும் நிறைவேறவில்லை.

1961ல் திருமதி ஸ்ரீமாவோ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற தமிழர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்று அது பெருமளவில் தமிழ் மக்களிடையே பரவி தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் விரிவடைந்தபோது அரசியலில் அனுபவமற்ற பிரதமர் ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டது. அவரும் இரண்டு மாதங்கள் வரை அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவில்லை. அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தியதும் தனது நெருங்கிய உறவினரான கேர்ணல் உடுகமவை வடபகுதிக்கு கட்டளைத் தளபதியாக அனுப்பினார். அது மட்டுமின்றி வடக்கின் பாதுகாப்புக்குத் தனது குடும்ப நண்பரான ராஜன் கதிர்காமரைத் தளபதியாகக் கொண்ட கடற்படையினரை அனுப்பி வைத்தார். அதன் மூலம் அவர் பாதுகாப்பு நிலைமையைத் தனது கைக்குள் வைத்திருந்தமையால் பிற்போக்காளர்களின் நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை.

ஏகாதிபத்திய அடிவருடிகளின் முயற்சிகள் மூன்று முறை தோல்வியடைந்த போதும் அவர்கள் "தோல்வியடையத் தோல்வியடையத் தங்கள் சவக்குழி வரைப் போராடுவார்கள்" என்ற கோட்பாட்டுக்கமைய நான்காவது முயற்சியையும் மேற்கொண்டனர். அதுதான் 1962ன் இராணுவச் சதிப்புரட்சி.

1961ம் ஆண்டில் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டதுடன் சிங்கள மாணவர்களுக்குச் சிங்களமும் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் மொழியும் போதனா மொழிகளாக்கப்பட்டன. ஆங்கிலம் போதனா மொழியாக இருந்தபோது தமிழரிலும் சிங்களவரிலும் வசதிபடைத்த மேட்டுக்குடியினரே பல்கலைக்கழகம் போகக்கூடிய நிலை நிலவியது. சுதேச மொழிகள் போதனா மொழியாக்கப்பட்டபின் சாதாரண வறிய கிராமப்புற மாணவர்களும் பல்கலைக்கழகம் புகவும் உயர் கல்விகளைத் தொடரவும் வாய்ப்பு ஏற்பட்டது. எனவே தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சியும், வடக்கில் தமிழரசுக் கட்சியும் பாடசாலைகள் தேசிய மயத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தின. கிறிஸ்தவ மத நிறுவனங்களால் நடத்தப்பட்ட பிரபல பாடசாலைகளும் தேசிய மயமாக்கப்பட்ட நிலையில் கிறிஸ்தவ மக்களிடம் அரசாங்கத்திற்கு எதிரான வெறுப்புணர்வு ஊட்டப்பட்டது. அப்போது இராணுவத்தில் உயர் பதவிகளில் 60 வீதம் கிறிஸ்தவர்களும் 20 வீதம் தமிழரும் 20 வீதம் பறங்கியரும் பணியாற்றினர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சிங்கள பௌத்தர்களுக்கும் பதவிகளை வழங்கி உயர் மட்டத்துக்குக் கொண்டு வந்தாலும் இந்த விகிதாசாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே சதியின் மூலகர்த்தாக்களால் இராணுவத்திலுள்ள கிறிஸ்தவ அதிகாரிகளைத் தங்கள் வலையில் விழுத்த முடிந்தது.

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க குடும்பத்துடன் கதிர்காமம் செல்லும்போது இடைமறித்து அவரைக் கைது செய்து அவரிடம் தான் அரசாங்கத்தைக் கலைத்து விட்டதாகக் கடிதமொன்றில் பலவந்தமாக கையெழுத்திடவைத்து அதை மகாதேசாதிபதி ஒலிவர் குணதிலகவிடம் கொடுத்து ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதாக நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் அறிவிப்பதே சதியின் முதற்கட்டமாகத் திட்டமிடப்பட்டது.

பிரதான திட்டம் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க உட்பட அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர், நாடாளுமன்றச் செயலாளர், இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஜோன் அட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டு, காலிமுகத்திடலில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் தடுத்து வைப்பது எனத் திட்டமிடப்பட்டது.

இத்திட்டம் மேற்கொள்ளப்படவிருந்த திகதிக்குச் சில நாட்களின் முன்பு உயர் பொலிஸ் அதிகாரியான ஸ்டான்லி சேனநாயக்க தன் மனைவியிடம் தனக்கு வெகு விரைவில் அதி உயர் பதவி கிடைக்கவிருப்பதாகக் கூறியுள்ளார். அவரின் மனைவியோ அதைத் தன் நண்பியான குணரத்தினவின் மகளுக்குக் கூற அது உடனடியாகவே பிரதமரிடம் போய்ச் சேர்ந்து விட்டது.

உடனடியாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபரை அழைத்த பிரதமர் துரித நடவடிக்கையில் இறங்கும்படி பணித்தார்.

அவர் சில அதிகாரிகளுடன் நட்புடன் உறவாடித் தகவல்களைச் சேகரித்து உடனேயே குற்றப் புலனாய்வுத் தலைமை அதிகாரி ஜோன் அட்டிகலவுக்கு அறிவித்தார். இருவரும் தாமதமின்றியே நிலைமைகளை ஸ்ரீமாவுக்கு விளக்கினர்.

அப்போது திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்குச் சில மணி நேரங்களே இருந்தன. உடனே அரசாங்கத்துக்கு விசுவாசமான பொலிஸ், இராணுவ அதிகாரிகள் பிரதமரின் இல்லத்துக்கு அழைக்கப்படுகின்றனர். நடவடிக்கைகள் துரிதமாக முடுக்கி விடப்படுகின்றன.

உடனடியாக பம்பலப்பிட்டி ஆயுதக் களஞ்சியம் சீல் வைக்கப்படுகிறது. எவரும் ஆயுதங்களை வெளியே கொண்டு செல்லக்கூடாதெனக் கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபரின் ஆணையை விட வேறு எந்தக் கட்டளைகளையும் ஏற்கக் கூடாதென சகல தரப்பினர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது. அதையடுத்து இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விஜயக்கோன், கடற்படைத் தளபதி றியர் அட்மிறல் ராஜன் கதிர்காமர், விமானப் படைத் தளபதி எயர்மார்ஷல் பாக்கர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அலரி மாளிகைக்கு அழைக்கப்படுகின்றனர்.

பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தனது ரொஸ்மிட் இல்லத்திலிருந்து யுத்த டாங்கிகளின் பாதுகாப்போடு அலரி மாளிகைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அலரி மாளிகையைச் சுற்றி யுத்த டாங்கிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றன. உடனடியாக நவ. 27ல் வானொலிச் சேவை நிறுத்தப்பட்டுக் கொழும்பு நகரெங்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கின்றனர்.

பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஜோன் ஆட்டிகலவின் விசாரணைகளின் அடிப்படையில் பல பெரும் புள்ளிகள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களில் பொலிஸ் மா அதிபர் சீ.சீ.தஸநாயக்க, பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொறுப்பதிகாரி ஜோன் புள்ளே, கேணல் எஸ்.பி.சேரம், கேணல் மொரிஸ் டி மெல் முக்கியமானவர்களாகும்.

கடற்படையின் உயர் அதிகாரியான ரொய்ஸ் டி மெல் தலைமறைவாகி விடுகிறார். அவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்திலேயே மறைந்திருந்தார் என்பது தெரிய வந்தது. பின்பு அவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அனுசரணையுடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். விசாரணைகள் மூலம் 31 பேர் சந்தேக நபர்களாகக் காணப்படுகின்றனர். முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பவற்றைச் சேர்ந்த உயர் மட்ட அதிகாரிகளுடன் ஒரு தேயிலைத் தோட்ட உரிமையாளர் உட்பட இரு சிவிலியன்களும் அடங்குவர். கைது செய்யப்படுபவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டும் பின்பு வெலிக்கடைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். அவர்களில் போலியர் என்ற கப்டன் தர இராணுவ அதிகாரி கைது செய்யப்படு முன்பே தற்கொலை செய்து விடுகிறார்.

1962ம் ஆண்டின் விசேட சட்டம் என்ற பேரில் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு ட்ரயல் அற் பார் என்ற யூரிகள் இல்லாத நீதிமன்றம் அமைக்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எதிரிகள் சார்பில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கடுமையாக வாதாடினார். எனினும் இறுதியில் 29 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு எல்லோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜோன் புள்ளே, ஏ.எஸ்.பி. ஆறுமுகம் ஆகியோர் அரச தரப்புச் சாட்சிகளாக மாறி விடுவிக்கப்படுகின்றனர்.

பின்பு இவ்வழக்கு லண்டன் பிறிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்ட பின் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட்டதால் தீர்ப்பு செல்லுபடியாகாதென அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.

பொரளையிலுள்ள டட்லி சேனநாயக்கவின் கித்துல் வத்தயில் உள்ள ஒரு வீட்டின் களஞ்சிய அறையிலேயே சதிகாரர்கள் கூடி திட்டங்களைத் தீட்டுவதாகவும் திட்டத்தை நிறைவேற்றவிருந்த நாளுக்கு முதல் நாள் சேர்.ஜோன் கொத்தலாவலயின் வீட்டில் வைத்தே இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சில வருடங்களின் பின்பு தகவல்கள் கசிந்தன.

ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் இது பற்றி நன்கு அறிந்திருந்தாரென எம்.பி.சில்வா என்பவர் எழுதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் இச்சதிப்புரட்சியின் பின்னணியில். ஐக்கிய தேசியக் கட்சியும், ஏகாதிபத்திய சக்திகளும் இருந்தன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் நீதிமன்றத்தில் மட்டுமின்றி வேறு விதங்களிலும் அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டமை அவரும் இச்சதியை விரும்பியிருந்தார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

எவ்வாறிருப்பினும் இராணுவ சதிப்புரட்சி என்பது ஒரு தேசத்துரோக நடவடிக்கை என்பதுடன் இங்கு ஏகாதிபத்திய மற்றும் மேட்டுக்குடியினரின் நலன்களைப் பாதுகாக்க இலங்கையின் தேசிய சக்திகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படட மோசமான நடவடிக்கையாகும். இச்சதிப்புரட்சிக்கு தமிழர் தரப்பு ஆதரவளித்தமை இனக்குரோதத்தை மேலும் கூர்மைப்படுத்தி இனமோதல்களுக்குச் சாதகமான நிலைமையையே ஏற்படுத்தும்.

அதேவேளையில் ஸ்ரீமாவோ ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு சாதகமான விடயங்களைக் கூடத் தமிழரசுக் கட்சி எதிர்த்தமையும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE