Monday 17th of May 2021 02:00:21 PM GMT

LANGUAGE - TAMIL
.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரெழுச்சியின் அடுத்த காலடி! - நா.யோகேந்திரநாதன்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரெழுச்சியின் அடுத்த காலடி! - நா.யோகேந்திரநாதன்!


தமிழ் மக்களுக்கு இலங்கையின் ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் தொடரப்படும் இன அழிப்பு நோக்கம் கொண்ட ஒடுக்குமுறைகளையும், கண்டித்து பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்.ட "பொத்துவில் முதல் பொலிகண்டி" வரையிலான எழுச்சிப் பேரணியில் பெரும் திரளான தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டதுடன் அது எமது மக்களின் உரிமைக்கான ஆவேசமான போர்க் குரலாகவும் விளங்கியது.

இது அரசியல் சாராத சிவில் அமைப்புகளாலும் மதத்தலைவர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழ், சிங்கள அரசியல் பரப்பிலும் சர்வதேச மட்டத்திலும் ஆரோக்கியமான பலாபலன்களை விளைவித்துள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.

இப்பேரணி பொத்துவிலில் தொடங்கிய போதும் முன்னேறி வரும் போதும் பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் நீதி மன்றத் தடைகளைக் காட்டி தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அத்தடைகளைப் புறந்தள்ளிப் பேரணி எழுச்சியுடன் முன்னேறியது. அது மட்டுமின்றி ஏற்பாட்டாளர்கள் இப்பேரணியில் 50 பேரே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் கலந்து கொண்டோர் தொகை நூறு, ஆயிரம் என விரிவடைந்து பல்லாயிரம் என்ற கட்டத்தை எட்டியது. இப்பேரணி யாழ். நகருக்குள் புகுந்து கொண்ட போது ஏராளமான வாகனங்களும் ஏறக்குறைய இரண்டாயிரம் மோட்டார் சைக்கிள்களும் கலந்து கொண்டிருந்தன.

நீண்ட காலத்தின் பின் வாகனங்களிலும் கலந்து கொண்டவர்களின் கைகளிலும் பறந்து கொண்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகள் விடுதலை உணர்வையும் எமது உரிமை வேட்கையையும் வெளிப்படுத்தி உற்சாகமூட்டியது. உரத்து ஒலித்த கோஷங்கள் மேலெழுந்து காற்றில் கலந்து எமது உரிமைக் குரலை உலகெங்கும் கொண்டு சென்றது.

ஒட்டுமொத்தத்தில் இப்பேரணி சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் ஒரு செய்தியை உரத்துக் கூறியுள்ளது. அதாவது எத்தகைய கொடிய ஒடுக்குமறைகளின் முன்பும் எவ்வளவு பாரிய அச்சுறுத்தல்கள் மத்தியிலும் எமது உரிமைக் குரல் அடங்கிப் போய்விடாது என்பது தான் அது. இன்னும் சொல்லப்போனால் ஆயதப் போராட்டம் மௌனிக்க வைக்கப்பட்டாலும் அதை முன்னெடுத்துச் சென்ற உணர்வு இன்னும் மங்காமல் எமது மக்களிடம் ஒளி விட்டுக்கொண்டிருக்கிறது.

அதேவேளையில் இப்பேரணி தமிழ் பேசம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள சில சாதனைகள் முக்கியமானவையாகும்.

இப்பேரணி எந்த அரசியல் கட்சியினதோ கட்சிகளினதோ மேலாதிக்கம் இன்றி முற்றிலும் சிவில் அமைப்புகளாலும் மத குருமாராலுமே ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அரசியல்வதிகள் இதில் கலந்து கொண்டிருந்தபோதும் அவர்களும் ஏனையோரைப் போலவே கலந்து கொள்ள வேண்டியிருந்தது. தாங்களே இப்பேரணின் நாயகர்களாகக் காட்டி இதைத் தங்கள் தேர்தல் நோக்கங்களுக்குப் பாவிக்கும் வகையில் இது அமைந்திருக்கவில்லை.

ஒருவரை ஒருவர் கடித்துக்குதறிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத் தலைமைகள் ஒன்றாக இப்பேரணியில் கலந்து கொண்டமை அடுத்த சாதனையாகும்.

அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலன்களுக்காகத் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே வளர்த்து வந்த கசப்புணர்வு தூக்கித் தூரவீசப்பட்டு, ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற வகையில் முஸ்லிம் மக்களும் உணர்வு பூர்வமாகப் பங்கு கொண்டனர். இது ஒரு அரிய வரவேற்கதக்க சாதனையாகும்.

வடக்குக் கிழக்கு அரசியல் தலைமைகள் மலையக மக்கள் மீது அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச் சாட்டு நீண்ட காலமாகவே உண்டு. ஆனால் இப்பேரணியில் மலையக மக்களின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை உரத்து ஒலித்தது.

எப்படியிருப்பினும் பொத்துவில் முதல் பொலிகண்டிவரையிலான இப்பேரணி தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் என ஒடுக்கப்படும் மக்களை ஒன்றிணைப்பதிலும் ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்க வைப்பதிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இப்பேரணியும் இப்பேரணியில் மக்கள் காட்டிய உரிமை வேட்கையின் ஆவேசமும் எவ்வளவு தான் வலிமை பெற்றிருந்த போதிலும்கூட இது எமது உரிமைப் போராட்டத்தின் உச்ச கட்டமல்ல. இது ஒரு ஆரோக்கியமான சரியான திசையை நோக்கிப் பயணிக்கும் ஒரு ஆரம்பமே. அதேவேளையில் இது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஆட்சியாளர்களால் எம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் தேடுவதுடன் மட்டுப்படுத்தப்படுவதுமல்ல.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் இத்தகைய பேரெழுச்சிகள் ஏற்கனவே இடம்பெற்றன. மக்களும் அர்ப்பணிப்புடன் பங்கு கொண்டனர். அவற்றால் கிட்டிய நன்மை தீமைகளைப் பரிசீலனை செய்து அந்த அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது பொருத்தமான நடவடிக்கையாக அமையும் என்பது நிச்சயம்.

1961ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்ட அமுலாக்கலை எதிர்த்தும் நீதிமன்ற மசோதாவை எதிர்த்தும் அரச நிர்வாக சேவையை முடக்கும் வகையில் யாழ்.கச்சேரிக்கு முன்பாகச் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம் பெற்றது. அது வடக்குக் கிழக்கெங்கும் பரந்து தமிழ் மக்களின் ஒரு பெரும் பேரெழுச்சியாக விரிவடைந்தது. வடக்குக் கிழக்கில் அரச நிர்வாகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் அரசாங்கம் திக்குமுக்காடியது. இரு மாதங்கள் கடந்த நி;லையில் அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவ வன்முறைகள் மூலம் சத்தியாக்கிரகப் போராட்டம் முறியடிக்கப்பட்டு, தமிழரசுக் கட்சியின் தலைமைவர்களும் பல தொண்டர்களும் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டனர். போராட்டத்தை இப்படியான ஒரு நிலை ஏற்படும்போது அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்துவது என்பது பற்றிய திட்டமோ முன்னேற்பாடோ தமிழரசுத் தலைமையிடம் இருக்கவில்லை. எனவே அத்துடன் அப்போராட்டம் முடிவடைந்து விட்டது.

ஆனால் அப்போராட்டத்தால் கிடைத்த பலன் அடுத்த 1965 தேர்தலில் வடக்குக் கிழக்கில் பெரும் வெற்றி பெற்ற தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டது. தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை.

1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1977ல் தமிழீழக் கோரிக்கைக்கு ஆணை கேட்டுப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவரானார். வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் மக்களிடையே தோன்றிய பேரெழுச்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியையே பலனாகப் பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்ட நிலையில் அதை இளைஞர்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர்.

இந்த இரு சந்தர்ப்பங்களிலும் மக்கள் எந்த நோக்கத்துக்காக எழுச்சி பெற்றதோ அவை கைவிடப்பட்டு அந்த எழுச்சியின் பலன்கள் நாடாளுமன்ற அரசியலில் பதவிகளைப் பெறுவது என்ற எல்லைக்குள் முடங்கிவிட்டது.

மக்களை எழுச்சி பெறவைத்த இலட்சியங்கள் நாடாளுமன்றத் தலைமைகளால் காற்றில் பறக்க விடப்பட்டன.

ஆனால் 1987ல் தியாகி திலீபனால் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு நல்லூர் வீதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. திலீபனின் உண்ணா நோன்புப் போராட்டம் வடக்குக் கிழக்கெங்கும் மக்கள் மத்தியில் பேரெழுச்சியாக வெடித்தது. பல்லாயிரக் கணக்கான மக்கள் நல்லூர் வீதியில் அணி திரண்டு திலீபனுடன் பங்கு கொண்டனர்.

இந்திய அரசு அசைந்து கொடுக்காத நிலையில் 12ம் நாள் திலீபனின் உயிர் பிரிந்தது. திலீபனின் வீரச்சாவின் சோகம் பெரும் கோபாவேசமாக எமது மக்கள் மத்தியில் வெடித்தது.

கடலில் கைது செய்யப்பட்ட தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்படப் 12 வேங்கைகள் இலங்கை - இந்தியக் கூட்டுச் சதியால் வீரச்சாவடைந்தனர். அவர்களின் இறுதி அஞ்சலியில் பருத்தித்துறையிலிருந்து தீருவில் நோக்கிப் புறப்பட்ட பேரணியில் பல்லாயிரக் கணக்கானோர் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

இந்த இரு சந்தர்ப்பங்களிலும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பேரெழுச்சி இந்திய - புலிகள் யுத்தமாக வெடித்தது. பேராபத்தின் மத்தியிலும் புலிகளுக்கு மக்கள் அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பை வழங்கிப் புலிகளின் வெற்றியின் உந்து சக்தியாக விளங்கினர்.

இப்பேரெழுச்சியின் பலனாக இந்திய இராணுவம் அவமானத்துடன் வெளியேற வேண்டிய நிலை எழுந்தது. விடுதலைப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு அமைக்கப்பட்டு ஒரு மாதிரித் தமிழீழ அமைப்பு தமிழ் மக்களின் முன்வைக்கப்பட்டது.

1961லும் 1977லும் ஏற்பட்ட மக்கள் எழுச்சி உருவானமைக்கான நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. காரணம் அக்காலப் பகுதியில் மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கிய கட்சிகள் அதைத் தொடர்ந்து முன்னெடுக்கும் உறுதியோ இலட்சியப் பற்றோ இல்லாதவர்களாகவே விளங்கினர் 1987ல் உருவான மக்கள் எழுச்சி தொடர்ந்து இலட்சிய உறுதியுடன் புலிகளால் முன்னெடுக்கப்பட்டமையால் விடுதலைப் பிரதேசங்கள் உருவாகுமளவுக்கு அற்புதமான பலாபலன்கள் கிட்டின.

எனவே நாம் கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அவற்றிலிருந்து பாடங்களைப் பெற்றுக்கொண்டு தளராத இலட்சிய வேட்கையுடனும் கொள்கைப் பற்றுடனும் முன் செல்லவேண்டும். அதற்கு ஒரு உறுதியான நிலை தடுமாறாத தலைமை வேண்டும்.

அவ்வகையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட்மை நல்லதொரு ஆரம்பமாகும். அதாவது பரந்துபட்ட மக்கள் சக்தியின் கூர் முனையாகவும் ஒரு திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டதுமான உறுதியுமான கொள்கைப் பற்றுள்ள நிறுவனம் அவசியம். அதேவேளையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட தலைமை உருவாகும்போது நாம் பல விடயங்களில் எச்சரிக்கையாயிருக்கவேண்டும்.

நாம் ஒரு சிறிதளவு விழிப்புணர்வைத் தளர்த்தினாலும் எமது நோக்கங்கள் திசை திருப்பப்படவும் சீரழிக்கப்படவுமான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டி வந்துவிடும்.

குறிப்பாக அரச புலனாய்வுப் பிரிவினரின் முகவர்கள் அந்நிய உளவு நிறுவனங்களின் கையாட்கள் எமது நிறுவனத்துக்குள் ஊடுருவி எமது நோக்கங்களை குழப்பவும் திசைதிருப்பவும் கூடும். இன்னும் சில சக்திகள் எமது போராட்டத்தை தேர்தல் நடவடிக்கைகளை நோக்கி நகர்த்தவும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் மட்டுப்படுத்தவும் முயலலாம்.

எனவே திட்டவட்டமான கொள்கைள், அவற்றை நிறைவேற்றுவதில் எவ்வித தளர்வுமற்ற உறுதிப்பாடு. உரிய நேரத்தில் உரிய வகையில் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து வழி தவறி விடாத தந்திரோபாயம் என்பன அமையப்பெற்ற தலைமைக்குழு உருவாக் கப்படவேண்டும். இக்குழு இலட்சிய உறுதி, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பவற்றைக் கடுமையாகக் கடைப்பிடிக்கவேண்டும்.

எனவே பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை கிளர்ந்தெழுந்த மக்கள் பேரெழுச்சியை இறுதி வெற்றிவரை முன்னெடுப்போம் என்ற சங்கற்பத்துடன் முன் செல்வதே நாம் உரிமை பெற்ற மக்களாக வாழ எம்முன் உள்ள ஒரே ஒரு பாதையாகும்.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்.

16.02.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE