Thursday 28th of March 2024 07:17:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபையில் ஆர்ப்பாட்டம்!

முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபையில் ஆர்ப்பாட்டம்!


மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது பேரணியாக காந்திபூங்கா வரையில் சென்று மீண்டும் மட்டக்களப்பு மாநகரசபை வரையில் வருகைதந்தது.மட்டக்களப்பு மாநகரசபையின் வாயில் கதவுகளை மூடியும் குப்பையள்ளும் வாகனங்களை வீதியில் நிறுத்தியும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள்,உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகரசபையின் முதல்வரே எமது தலைவர்,உங்கள் வீட்டு வேலைகளை செய்வதற்கு எங்களை பயன்படுத்த வேண்டாம்,அரசாங்கத்தில் கடமைசெய்யும் உறுப்பினரே உங்களது கடமையினை துஸ்பிரயோகம் செய்யாதே, ஊழியர்களை கேவலமாக நினைக்காதீர்கள்,ஊழியர்களை அதிகாரம் செய்யும் உரிமை உங்களுக்கு கிடையாது போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் மாநகர முதல்வருக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.

மாநகரசபையின் பிரதி முதல்வர் மாநகரசபை ஊழியர்களை கீழ்தரமான ஊழியர்கள் என்று கூறி தங்களை அவமானப்படுத்தியுள்ளதுடன் சில உறுப்பினர்கள் மாநகர ஆணையாளரை மோசமான முறையில் விமர்சித்துவருவதாகவும் அவர்கள் மாநகர ஆணையாளரிடமும் மாநகர ஊழியர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையானது ஆணையாளர் வருகைதந்த பிறகு சிறந்த முறையில் செயற்படுவதாகவும் அவற்றினை குழப்பும் வகையில் மாநகரசபையின் முதல்வர் உட்பட உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் இங்கு ஊழியர்களினால் தெரிவிக்கப்பட்டது.

தாங்கள் பல வருடங்களாக தற்காலிக ஊழியர்களாக கடையாற்றிவரும் நிலையில் தங்களை நிரந்தர ஊழியாகளாக நியமனம் செய்வதற்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் சில மாநகரசபை உறுப்பினர்கள் தங்களை இடைநிறுத்தப்போவதாக அச்சுறுத்துவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரனிடம் வழங்கப்பட்டது.

மாநகர ஆணையாளரிடமும் மாநகர ஊழியர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் எனவும் இதுவரையில் தங்களது போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தபோதிலும் மக்களின் சேவைக்கு இடையூறு செய்யாமல்போராட்டத்தினை முடித்துக்கொள்ளுமாறு மாநகர ஆணையாளர் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக போராட்டம் கைவிடப்பட்டு மாநகரசபை செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE