Monday 17th of May 2021 01:51:48 PM GMT

LANGUAGE - TAMIL
-
வட இலங்கையில் தீவுகள் மீதான சீனாவின் செல்வாக்கு இந்தியாவின் இராஜதந்திரத்திற்கு மீண்டுமொரு தோல்வியா?

வட இலங்கையில் தீவுகள் மீதான சீனாவின் செல்வாக்கு இந்தியாவின் இராஜதந்திரத்திற்கு மீண்டுமொரு தோல்வியா?


இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பிராந்திய ரீதியில் SAGAR (Security and growth for all in the Region) எனும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் முன்வைத்து செயல்பட்டது. அதில் தென்னாசி நாடுகளுடனான உறவு இந்தியாவின் பாதுகாப்புப் பொறுத்து முதலிடம் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியது. ஆனால் தென்னாசியப் பிராந்திய நாடுகள் சீனாவுடனான நட்புறவைப் பலப்படுத்தியதுடன் இந்தியாவின் சகார் திட்டத்திற்கு முன்னும் பின்னும் சீன நட்பினை பலப்படுத்திக் கொண்டுள்ளதை அவதானிக்கும் போது இந்தியாவின் பிராந்திய ரீதியான இராஜதந்திரம் தொடர் தோல்வியாகவே பதிவாகிவருகிறது. இந்தியா பிராந்திய நாடுகளை கையாளுவதென்பது சீனாவையும் கையாளுவதாகவே தெரிகிறது. இதில் இலங்கையில் இந்தியாவுக்கு ஏற்பட்டுவரும் நெருக்கடியானது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரே வாய்ப்பாக இருந்த தென்பகுதியும் சீனாவினது அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்தியா சீனாவின் உபாயங்களால் முழுமையாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் இந்தியாவின் பிராந்திய ரீதியான இராஜதந்திரத் தோல்வியை இலங்கையுடன் தொடர்புபடுத்தி தேடுவதாக உள்ளது.

அதனடிப்படையில் அண்மைக்காலம் இரண்டு பிரதான விடயங்கள் இலங்கையில் இந்தியாவின் நலனுக்கு பாதிப்பானதாக நிகழ்ந்துள்ளன. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகமான விடயங்களில் இந்திய அரசியல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறை காணப்பட்டது. அப்போதெல்லாம் இந்தியா இலங்கை அரசாங்கங்களுடன் ஒத்துழைப்பதும் அதன் நலன்களை பாதுகாப்பதுமாகவே செயல்பட்டதே அன்றி இலங்கையின் நலன்களுக்கு விரோதமாக செயல்படவில்லை என்றே கூறலாம். இலங்கைத் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் அடக்குமுறைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் பேதெல்லாம் இந்தியா மௌனம் சாதித்தது அல்லது இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச பொறிமுறைகளுக்கு முன் பாதுகாக்தே வந்துள்ளது. அதனையெல்லாம் இராஜதந்திர செய்முறைக்குள் முன்னிறுத்திக் கொண்டு இலங்கை அரசாங்கமும் ஆட்சியாளர்களும் இந்தியாவையும் உலகத்தினையும் கையாளும் திறனை வளர்த்துக் கொண்டனர். இதனை எல்லாம் தமக்கு சாதகமென கருதிய இந்தியா இலங்கையை திருப்திப்படுத்தும் செய்முறையில் ஈடுபட்டுவந்தது. அதன் விளைவுகளைத் தற்போது எதிர்கொண்டுவருகிறதை அவதானிக்க முடிகிறது.

ஒன்று கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இலங்கையின் நடவடிக்கை இந்தியாவின் இராஜதந்திரத்திற்கு ஏற்பட்ட சவாலாகவே தெரிகிறது. கொவிட்-19 க்குரிய தடுப்பு மருந்தினை வழங்கிய பின்பும் கிழக்கு முனையம்த்திற்கான உடன்படிக்கையை இலங்கை இரத்து செய்துள்ளமை கவனிக்க வேண்டிய விடயமாகும். அவ்வாறே இலங்கை மத்திய வங்கி இந்தியா வழங்கிய சலுகைக்கடனை மீளவழங்கியமை அதே நேரம் சீனாவிடமிருந்து மேலும் அதிக கடனைப் பெற்றுக் கொண்டமை அனைத்தும் இந்தியாவின் இராஜதந்திரத் தோல்வியாகவே மதிப்பிடப்படுகிறது.

இரண்டு இந்தியாவின் எல்லையிலிருந்து 45 மைல் தூரத்தில் அமைந்துள்ள இலங்கையின் வடபகுதியிலுள்ள தீவுகளான நெடுந்தீவு நயினாதீவு மற்றும் அனலைதீவு என்பவற்றை சீனாவின் காற்று மற்று சூரிய மின் உற்பத்தி மேற்கோள்ளும் சினோசர்-இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை முக்கிய அரசியல் பதிவாக உள்ளது.காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தினை தயாரிக்கும் திட்டத்தினை 87.60 கோடி செலவீனத்தில் மேற்கொள்ள சீன நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் ஒப்பமிட்டிருப்பதுடன் கடந்த 17.01.2021 இல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகிறது. இத்தகைய கலப்பு மின் திட்டமானது இப்பிரதேச அபிவிருத்தியை இலக்கு வைத்துள்ளதாகவும் அதனூடாக உல்லாசப்பயணத் துறையை வளர்க்க தி-ட்டமிடுவதாகவும் தெரியவருகிறது.

மேற்குறித்த இரண்டுவிடயங்களிலும் இந்தியத் தரப்பு இலங்கை அரசாங்கத்திற்கு தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளமை தெரியவருகிறது. குறிப்பாக கிழக்கு முனையத்தினை மூன்று நாடுகளும் மேற்கொண்ட உடன்படிக்கையினை உறுதி செய்யுமாறு கோரியுள்ளது. அவ்வாறே வடபகுதியில் அமைந்துள்ள தீவுகளை சீனக் கம்பனிக்கு வழங்கியமை இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புபட்டதென்றும் புதுடில்லி தெரிவித்துள்ளது. அது மட்டுமன்றி இத்தகைய திட்டம் ஒன்றுக்கான ஒத்துழைப்பைக் கோரியிருந்தால் இந்தியா முழுமையாக ஆதரித்திருக்கும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது. அதனைக் கடந்து இந்தியா எதனையும் மேற்கெபாண்டதாக தெரியவில்லை. ஆனால் அண்மையில் வடக்கு கிழக்கு தளுவிய நடைபயணப் போராட்டம் இந்தியாவின் அனுசரணையுடன் நிகழ்ந்ததாகவும் முள்ளிவாய்க்கால் தூபியின் மீள் உருவாக்கத்திற்கான நகர்வுகளில் இந்தியா இருப்பதாகவும் ஊகங்கள் நிலவுகிறது. அதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்றே தெரிகிறது. ஆனாலும் அவற்றுக்கான வாய்ப்புக்கள் இல்லாமலில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி இராஜசபாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றும் போது தமிழர்களது கோரிக்கைகளை நிறைவுசெய்வதே இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைக்கு சாதகமானது எனத் தெரிவித்திருந்தார். இவற்றைக் கடந்து இந்தியா இலங்கை விடயத்தில் பாரிய நகர்வுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை சீன நெருக்கம் தனது நலனுக்கு ஆபத்தானது என கருதுகிறது. அதனை தகர்ப்பதற்கான முனைப்புகளை ஏற்படுத்த முனைகிறது. அதன் பிரகாரமே வடமாகாணத்தில் சீனாவுக்கு வழங்கிய தீவுகளை இந்தியா தனது நலனுக்கு ஆபத்தானது எனக் கருதுகிறது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு கிழக்கு மற்றும் மேற்குப் பகுதி அனைத்துமே இந்தியாவுக்கு ஆபத்தான பகுதிகளாகும். பிரிட்டிஷ் -இந்தியாவின் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தையும் சுதந்திர இந்தியா பறிகொடுத்துள்ளது. மிஞ்சியிருந்த தென்பகுதியையும் தற்போது முழுமையாக இந்தியா இழந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கான எல்லையாகக் காணப்படும் இலங்கை இந்தியாவுக்கு எதிரான சக்திகளிடம் சென்றுவிடும் என்பதற்காகவே உருவானதே இலங்கை-இந்திய உடன்படிக்கை. அப்போது அமெரிக்காவிடம் சென்றுவிடும் என்ற அச்சம் இந்திய ஆளும் வர்க்கத்திடம் காணப்பட்டது. ஆனால் தற்போது அதற்கான சூழல் ஒன்றுக்கான வாய்ப்பு தென்படுவதாகவோ அல்லது இலங்கை-இந்திய உடன்படிக்கையை மீள உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்போ தென்படுவதாக தெரியவில்லை. மாறாக கண்டனமும் எச்சரிக்கையும் மட்டுமே இந்தியத் தரப்பு தனது இராஜதந்திர நகர்வாகக் கருதுகிறது. அல்லது இலங்கைத் தமிழரை மீளவும் அகிம்சை வழியாக பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கி நகர்த்துவதாக தெரிகிறது.இவை அனைத்துமே தோல்விகரமான அணுகுமுறைகளாகவே அமைந்துள்ளன. அமெரிக்கா திருகோணமலையைத் தான் அப்போது இலக்கு வைத்திருந்தது. சீனா இந்தியாவுக்கு அருகிலுள்ள தீவுகளை இலக்கு வைத்துள்ளது. ஏறக்குறைய இந்தியாவின் வாசலை சீனா எட்டிவிட்டது எனலாம்.

இதன் மூலம் முழுமையான தென்னாசியப் பிராந்தியம் சீனாவின் கைகளுக்குள் சிக்கியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானின் துறைமுகமான குவாடரையும் அதன் வழியாக கொரகராம் நெடுஞ்சாலையையும் இணைத்துள்ள சீனா அண்மையில் லடாக் பகுதியையும் தனது செல்வாக்குக்குள் கொண்டுவந்துள்ளது. இது பாகிஸ்தான் இந்திய எல்லையூடாக நகர்ந்து சீனாவின் எல்லைக்குள் நுழைகிறது. அவ்வாறே கடல்வழியாக மாலைதீவையும் இலங்கையையும் வங்களாதேஷ் துறைமுகமான சிட்டங்கொங்கையும் மியான்மாரின் தீவுகளான சிற்வே உள்ளடங்கலாக சடல்கி கோக்கோஸ் போன்ற தீவுகளையும் மலாக்கா நீரிணைவரையும் நகர்கிறது. அதனை விட நேபாளம் மற்றும் பூட்டானுடன் எல்லையை அடிப்படையாகக் கொண்டும் பொருளாதார ஒத்துழைப்பினை மையமாகக் கொண்டும் நெருக்கமான உறவினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துடன் ஆரம்பமான சீன இலங்கை நெருக்கம் தற்போது கொழும்புத் துறைமுகத்தினையும் வடக்கு பகுதியிலுள்ள அனலைதீவு நெடுந்தீவ மற்றும் நயினாதீவு வரையும் விரிவடைந்துள்ளது. அதனைவிட சீனா நுரைச்சோலை அனல்மின் நிலையம் உட்பட பல பொருளாதார வலயங்களையும் கலாசார மற்றும் மருத்துவ நிலையங்களையும் அமைத்து இலங்கையின் அபிவிருத்திக்கு பங்காற்றுகிறது குறிப்பிடத்தக்கதாகும்.இவை அனைத்தும் தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு மாற்றீடான ஒரு நட்பு நாடாக சீனா மாறியிருப்பதைக் காட்டுகிறது. அதனால் சீனாவின் அணுகுமுறைகள் இந்தியாவுக்கு எதிரானதாகவும் அதன் நலன்களை முற்றாகவே சிதைப்பதாகவும் அமைந்துள்ளது.

ஏறக்குறைய இந்தியாவை சுற்றிவளைத்துள்ள சீனாவின் நகர்வு பொருளாதார ரீதியிலும் மென் அதிகாரத் தளத்திலுமே காணப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் பலம் படிப்படியாக மட்டுப்படுத்தப்படுவதையும் அதன் செல்வாக்குக்குள் தென்னாசியா இல்லாது போவதனையும் காணமுடிகிறது. இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியே தென்னாசியா என்ற நிலையில் சீனா இந்துசமுத்திரத்தை முழுமையாக தனது செல்வாக்குப் பிராந்தியமாக மாற்றி வருகிறது. இந்தோ-பசுபிக் உபாயம் கூட அத்தகைய சீனாவின் ஆதிக்கத்தினை எதிர்கொண்டு வெற்றி கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளது. இந்தோ-பசுபிக் உபாயத்தின் இரு பிரதான நாடுகளான இந்தியாவையும் ஜப்பானையும் இலங்கை கிழக்கு முனையத்தில் நிராகரித்துள்ளது. 2019 இல் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை தன்னிச்சையாக முறித்துக்கொண்டமை ஏறக்குறைய இந்தோ-பசுபிக் உபாயத்தின் தோல்வியாகவே தெரிகிறது.

எனவே இந்தியா கடந்த காலப்பகுதியில் இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளில் மேற்கொண்டு வந்த இராஜதந்திர அணுகுமுறைகள் அனைத்துமே தோல்வியை நோக்கியுள்ளது. தென்னாசியா நாடுகள் அனைத்துமே இந்தியாவின் நெருக்கமான நட்புறலிருந்து விலகியுள்ளன. அதிலும் இலங்கை முழுமையாக விலகியுள்ளமை இந்தியாவின் இருப்பை பெரியளவில் பாதிப்பதாகவே தெரிகிறது. இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் அரசியல் தலைமையிலுள்ளவர்கள் புலனாய்வுத் துறையினருக்கு ஆலோசனை வழங்குபவர்கள் மற்றும் புலமையாளர்கள் என்பவர்கள் இதனைக் கண்டுகொள்வார்களா என்பது பிரதான கேள்வியாகும். அவர்கள் அனைவரும் தென்னாசிய நாடுகளில் சீனாவுக்கு போட்டியாகச் செயல்படுகின்றார்களே அன்றி சரியானதை மேற்கொள்ள தயாராவதாக தெரியவில்லை. இதன் விளைவே தென் இலங்கை மட்டுமல்ல தற்போது வட இலங்கையிலும் சீனாவின் செல்வாக்கு வலையத்திற்குள் அகப்பட ஆரம்பித்துள்ளது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE