கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஆரம்பித்த "கொரோனா" தொற்று உலக நாடுகளெங்கும் பரவிப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. பலவிதமான சிகிச்சை முறைகள் தடுப்பூசிகள் ஏற்றல் எனப் பலவித மருத்துவ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் அதேவேளையில் தனிமைப்படுத்தல்கள், சில பகுதிகளை முடக்குதல், பயணத்தடைகள் போன்ற மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் நாளாந்தம் புதிதாகத் தொற்றுக்கு ஆட்படுபவர்கள், மரணமடைவோர் ஆகியோரின் பட்டியல் கோடிகள், இலட்சங்களால் உலகளவில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உட்பட வல்லரசுகள் கூட நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவதுடன் பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையும் எழுந்துள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை கொரோனாவின் முதலாவது அலை திறமையான முறையில் கட்டுப்படுத்தப்பட்டதென்பதை மறுத்துவிட முடியாது. இந்த நோய்த் தாக்கம் காணப்பட்ட ஆரம்ப கட்டத்திலேயே ஊரடங்குச் சட்டம், தனிமைப்படுத்தல், பிரதேசங்களை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் தேவைக்கேற்ற வகையில் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோன்று இலங்கை மக்களும் முகக் கவசமணிதல், கைகளைக் கழுவுதல் போன்ற பாதுகாப்புகளையும் பொறுப்புடன் கடைப்பிடித்தனர். அத்துடன் உள் ஊர் போக்குவரத்துகள் முதற்கொண்டு வெளிநாட்டுப் பயணங்கள் வரைக் கட்டுப்படுத்தப்பட்டன.
அவ்வகையில் அரசாங்கம் எடுத்த இறுக்கமான நடவடிக்கைகள் காரணமாகவும் சுகாதாரப் பிரிவினரின் அர்ப்பணிப்பான சேவை காரணமாகவும் மக்களின் பொறுப்பான நடத்தைகள் காரணமாகவும் கொரோனாவின் முதலாவது அலை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
ஆனால் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஆரம்பித்த கொரோனா இரண்டாவது அலை மிக வேமாகப் பரவியது. அது பெலியகொடை வர்த்தக மத்திய நிலையத்துக்கும் பரவி இரு கொத்தணிகளாகப் பரிணமித்தது. இரு கொத்தணிகளிலிருந்தும் மட்டக்களப்பு, மலையகம் எனப் பல பகுதிகளிலும் தொற்று நோயாளர்களை உருவாக்கியது. கொழும்பு உட்படப் பல பகுதிகள் பகுதி பகுதியாகத் தனிமைப்படுத்தல், விடுவிக்கப்படுதல் எனப் பல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
நாளாந்தம் தொற்றுக்குள்ளானவர்கள், மரணிப்போர் தொகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசாங்கமும், சுகாதாரப் பிரிவினரும் எவ்வளவுதான் சொன்னாலும் நாட்டு நிலைமை அச்சமூட்டும் வகையிலேயே உள்ளது.
இந்தக் கொரோனா இரண்டாவது அலை வடபகுதியையும் விட்டு வைக்கவில்லை. ஆரம்பத்தில் பெலியகொட மீன்சந்தையுடன் தொடர்பு கொண்ட சிலருக்கு நோய்த் தொற்றுக் காணப்பட்ட போதிலும் அது உரிய நேரத்தில் இனம் காணப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தொற்று அடுத்த கட்டத்துக்கு நகர முடியவில்லை.
ஆனால் தென் பகுதி வர்த்தகர்கள் சிலரின் தொடர்பு காரணமாக மருதனார்மடத்தில் ஒரு கொத்தணி உருவாகியது. ஆனால் வடபகுதி சுகாதாரப் பிரிவினரும் மருத்துவர்களும் மேற்கொண்ட துரிதமான அர்ப்பணிப்புடனான சேவை காரணமாக நோய்த்தொற்று ஒரு குறிப்பிட்ட அளவுடன் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
அதன் பிறகும் தென் பகுதியுடன் தொடர்பு கொண்ட சிலர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு. சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால் அவர்களால் ஆபத்தான நிலை உருவாக வாய்ப்பிருக்கவில்லை.
ஒப்பீட்டளவில் மேல்மாகாணம், மலையகம் போன்ற பகுதிகளுடன் நோக்கும்போது வட பகுதியில் கொரோனா நோயின் பாதிப்பு மிகக் குறைவாகவே அமைந்திருந்தது.
ஆனால் அண்மையில் வெளியாகும் சில செய்திகள் வடக்கிலும் மேலும் ஒரு கொரோனா கொத்தணி உருவாகி விடுமோ என்ற என்றதொரு அச்சத்தை எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள இரு ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சில பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விடுமுறைக்கு தென் பகுதிக்குச் சென்று வந்த இரு பெண்களுக்கே நோய் அறிகுறி காணப்பட்டதாகவும் அவர்களுடன் தொர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. எப்படியிருந்தபோதிலும் 4 பெண்களும் 1 ஆணும் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. ஏனைய தொழிலாளர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் இது ஒரு கொத்தணியாக உருவாகி முழு மாவட்டத்திற்குமே பரவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஓவ்வொரு ஆடைத் தொழிற்சாலையிலும் தலா ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஏறக்குறைய இரண்டாயிரம் பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்து முடிக்க பல வாரங்கள் செல்லலாம். ஆப்படியான நிலையில் ஏற்கனவே தொற்றுக்குள்ளாகி இதுவரை இனம் காணப்படாதவர்களிலிருந்து மற்றவர்களுக்குத் நோய் தொற்றும் வாய்ப்பு உண்டு. அது மட்டுமின்றி கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்தும் வந்து ஏராளமான பெண்கள் பணியாற்றுகின்றனர். எனவே அவர்கள் மூலம் அவர்களின் குடும்பங்களுக்கும் பரவி பாதிப்பு பெருமளவில் கிராமங்களுக்கும் பரவக்கூடும்.
அதேவேளையில் கொழும்பிலிருந்து வந்த மேலதிகாரி ஒருவர் எல்;லோரும் கட்டாயமாக பணிக்குச் சமூகமளிக்க வேண்டுமெனவும் அப்படி வரத்தவறியோர் வேலையிலிருந்து நீக்கப்படுவரெனவும், அவர்களின் இடத்துக்கு தென்னிலங்கையிலிருந்து பணியாளர்களைக் கொண்டு வரப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.
தமது குடும்ப வறுமை காரணமாகவே வேலையில் இணைந்த பெண்கள் வேலை பறி போய்விடும் என்ற அச்சத்தில் உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் பணிக்கு வந்து போகின்றனர்.
சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை நிறுத்தம் செய்யும் உரிமையோ தமது உரிமைக் கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டம் நடத்துவதோ சட்டவிரோதமானதென்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு விடுமுறை வழங்கி நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தொழிற்சாலை உரிமையாளர்கள் தயாரில்லை. அப்படியான சந்தர்ப்பத்தில் உற்பத்தி வீழ்ச்சியடைந்து விடுமென்பதால் அவர்கள் தொழிலாளர்களின் நலன்கள் பற்றிக் கவலைப்படத் தயாரில்லை.
ஒரு புதிய கொத்தணி உருவாகி எமது மக்களைப் பாதிப்பது பற்றியும் அவர்களுக்கு எவ்வித கவலையும் கிடையாது.
கொரோனாத் தொற்று சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஆரம்பித்ததாகவும் அங்கிருந்தே ஏனைய நாடுகளுக்கும் பரவியதாகவும் கூறப்பட்டபோதிலும் அங்கு அது சில மாதங்களிலேயே கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. எனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் மிகக் குறைவாகவே இடம்பெற்றன. ஆனால் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் தொற்றாளர்கள் கோடியைக் கடந்த நிலையில் உயிரிழப்புகள் இலட்சங்களால் கணக்கிடப்படுகின்றன.
சீனாவில் வேமாகக் கொரோனா பரவ ஆரம்பித்த போதே வூஹான் மாகாணத்தின் தலைநகரம் முற்றாக முடக்கப்பட்டது. பாடசாலைகள், தொழில் நிலையங்கள், மருத்துவமனைகளாக்கப்பட்டன. மருத்துவர்கள், தாதியர்கள், தொண்டர்கள், இராணுவத்தினர் மருத்துவப் பணிகளில் முழுமையாக இறங்கினர். இராணுவ வைத்தியர்கள் சிகிச்சைக்காகன மருத்துவ பரிசோதனைகளைத் தங்களிலேயே மேற்கொண்டனர். இதில் சில இராணுவ மருத்துவர்கள் உயிரிழந்துமுள்ளனர். அதனால் சிகிச்சைக்கான வழிமுறைகள், மருந்துகள் சில நாட்களிலேயே உருவாக்கப்பட்டன. மக்களும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றினர். இப்படியான முடக்கல்களினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமென அவர்கள் தயங்கவில்லை. அதன் காரணமாக வெகு விரைவில் கொரோனா விரட்டியடிக்கப்பட்டது.
சீனா எப்போதுமே உற்பத்தியின் மூலாதாரமாக மனித சக்தியையும் இயந்திர சக்தி மனிதரின் துணையாதாரமாகவுமே பார்க்கின்றது. அதனால் மனிதர்களைப் பாதுகாப்பதை அவர்கள் முதன்மைப்படுத்தினர்.
ஆனால் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் மனிதர்கள் இயந்திரங்களின் உதிரிப் பாகங்களாகவே பார்க்கப்படுகின்றனர். உற்பத்திகள் முடக்கப்பட்டால் பொருளாதாரமே பாதிக்கப்பட்டு விடும். அதன் காரணமாக தொழிலதிபர்களின் இலாபம் குறைவடையும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அந்நாட்டு அரசாங்கங்களும் அவர்களின் நலன்கள் சார்ந்தே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அவர்கள் மனித உயிர்களை விட உற்பத்திக்கே முதன்மையளித்தனர்.
கிளிநொச்சியில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலைகளும் அவற்றைப் போன்ற பல்தேசிய நிறுவனங்களாலேயே நடத்தப்படுவதால் அவர்கள் உற்பத்திக்கே முன்னுரிமை வழங்குவார்கள்.
கொரோனாவின் இரண்டாவது அலை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஆரம்பமானது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அங்கிருந்தே நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது.
இலங்கையின் பிரதான ஏற்றுமதி வருமானம் தைக்கப்பட்ட ஆடைகள் என்பதால் ஆடைத் தொழிற்சாலைகள் மீது அரசாங்கம் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதில்லை. இது தங்கு நிலைப் பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத சாபம்.
எனவே இங்குதான் எமது மக்களின் பொறுப்பு பல மடங்காகின்றது நாம் ஒவ்வொருவரும் எமது பாதுபாப்பில்; அதிகூடிய அக்கறை செலுத்தவேண்டும். சுகாதார ஆலோசனைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும்.
இன்னுமொரு கொரோனா கொத்தணி வடக்கில் உருவாவதைத் தடுக்கும் பொறுப்பு எமது கையிலேயே உள்ளது என்பது உணரப்படவேண்டும். அதற்கேற்ற வகையில் நாம் தனியாகவும் கூட்டாகவும் நாமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்.
23.02.2021
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி