Friday 29th of March 2024 06:04:22 AM GMT

LANGUAGE - TAMIL
-
பாஜகவின் அகண்ட பாரதக் கொள்கைக்குள் இலங்கையுமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

பாஜகவின் அகண்ட பாரதக் கொள்கைக்குள் இலங்கையுமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


இலங்கை -இந்திய முறுகல் வலுவடைகின்றதைக் காணக்கூடிய ஒரு காலப்பகுதிக்குள் பிராந்திய அரசியல் விளங்குகிறது. ஆரம்பத்தில் கொழும்பின் கிழக்கு முனையம் பின்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைந்துள்ள தீவுகள் என காணப்பட்ட முறுகல் நிலையானது தற்போது இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான அமிர்த்ஷாவின் அறிவிப்பு அதிகரித்துள்ளது. இதன் பிரதான நோக்கம் எதுவாக அமையும் என்பதிலேயே அதிக குழப்பம் நிலவுகிறது. இக்கட்டுரையும் அமிர்த்ஷான் கருத்து வெளிப்படுத்தும் இந்திய நிலைப்பாடு எதுவாக அமையும் என்பதை தேடுவதாக அமையவுள்ளது.

முதலில் அமிர்த்ஷா குறிப்பிட்டதாக திரிபுரா மாநில முதலமைச்சர் தெமரிவித்த விடயத்தை நோக்குவோம். இலங்கையிலும் நேபாளத்திலும் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கும் திட்டம் இந்திய உள்துறை அமைச்சர் அமிர்த்ஷாவுக்கு உள்ளது என திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.கடந்த 13.02.2021 அன்று இந்திய உள்துறை அமைச்சர் திரிபுரா விஜயம் செய்த போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கையிலும் நேபாளத்திலும் பாரதீய ஜனதா கட்சி அரசமைக்கும் எண்ணமுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையிலும் நேபாளத்திலும் தமது கட்சியை விஸ்தரிக்க வேண்டும். அங்கு ஆட்சி அமைக்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனைக் கண்டித்துள்ள திரிபுரா எதிர் கட்சி வெளிநாடு ஒன்றின் உள்விவகாரங்களில் தலையிடுதற்கு சமம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அமிர்த்ஷா ஏன் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்ற கேள்வி அனைத்து தரப்பிடமும் எழுந்துள்ளது. காரணம் அமிர்த்ஷா பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினர். அடுத்த பிரதமர் என வர்ணிக்கப்படுபவர். இந்தியாவில் பராதீய ஜனதாக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு மூலகாரணமானவர்களில் அமிர்த்ஷாவும் ஒருவராவார். அது மட்டுமன்றி காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை குறைப்பதிலும் அம் மாநிலம் யூனியன் பிரதேசமாக துண்டாடப்படுவதற்கும் பிராதான காரணமானவர் எனவும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு. எதுவாயினும் அவரது தீர்மானங்கள் இந்திய மத்தியரசின் தீர்மானங்களாகவே அமைவதுடன் அவரது அமைச்சும் பிரதானமானது என்ற வகையில் அவரது கருத்துப் பற்றி இலகுவானதாக அளவிட்டுவிட்டு செல்ல முடியாது. அவரது அறிவிப்பானது ஏதோ ஒரு முக்கியத்துவமான செய்தியை வெளிப்படுத்துகிறது. அதிலும் நேபாளம் மற்றும் இலங்கை சார்ந்து மட்டுமே அத்தகைய தீர்மானம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை விளங்கிக் கொள்வதன் மூலமே அமிர்த்ஷாவின் உண்மை நோக்கத்தை உணரமுடியும்.

ஒன்று நேபாளமும் இலங்கையும் சீனாவின் அதீதமான செல்வாக்கு பிராந்தியமாக மாறிவருகின்றன. இரண்டுமே இந்தியாவின் நெருக்கமான நட்பு நாடுகளாக இருந்ததுடன் இந்தியாவின் பாதுகாப்பு அரண்களாக பிரிட்டிஸ் இந்தியாவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய போக்கும் ஓரளவு அண்மைக்காலம் வரை நிலவியது.ஆனால் கொவிட்-19 பின்பு சீனாவின் செல்வாக்கு நாடுகளாக விளங்குகின்றன. இலங்கையின் அண்மைக்காலப் போக்கு முழுமையாக சீனாவை மையப்படுத்தியதாக விளங்குகிறது. குறிப்பாக கெபாழும்பு கிழக்கு முனையத்தையும் யாழ்ப்பாண குடாநாட்டின் தீவுகளையும் சீனாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளமை இந்தியாவை முற்றாக விரட்டுவதாகவே தெரிகிறது. இலங்கையிலிருந்து இந்தியாவை அகற்றுவதற்காக சீனாவை முதன்மைப்படுத்து தெளிவாக தெரிகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு சீனா தனது இருப்பினை இலங்கையில் நிரந்தரமானதாக மாற்றிவிடும் என இந்தியா அச்சமடைகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும் எனவும் இந்திய ஆளும் தரப்பு கருதுகிறது.

இரண்டு சீனாவிடம் 1500 மில்லியன் கடனை வாங்கிய இலங்கை இந்தியாவுக்கான சலுகைக் கடனான 400 மில்லியனை செலுத்தியுள்ளதன் மூலம் இந்தியாவை முற்றாக விரட்டும் செயலை மேற்கொண்டுள்ளமை தெரிகிறது. இத்தகைய செய்முறை இந்தியா மீதான இலங்கை ஆட்சியின் நோக்கம் எதுவென்பதை உணர்த்துகிறது. சீன பொருளாதாரத்திலும் அரசியலிலும் இலங்கை தங்கியிருக்கின்றது என்பதை வெளிப்படையாக இலங்கை தெரிவித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

மூன்று நேபாளத்தில் வளர்ந்துள்ள மாவோஸ்ட்டுகளது ஆதிக்கம் மீளவும் வலுப்படாது தடுப்பது இந்தியாவுக்கு அவசியமானது. அதாவது சீனாவின் ஆதரவுடன் அல்லது எண்ணத்தால் தூண்டப்பட்ட மாவோஸ்ட்டுகள் அமைப்பானது அண்மைக்காலத்தில் அதிக நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அது மட்டுமன்றி இந்திய ஆதரவு பெற்ற நேபாள காங்கிரஸ் வலுவான நிலையை நோக்கி நகர்கிறது. அதனை தக்க வைக்க வேண்டுமாயின் நேபாளம் மீதான இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறே இலங்கையிலும் இந்திய ஆதரவு பெற்ற அரசியல் கட்சியொன்றினை அமைக்கவும் அதன் தேர்தல் வெற்றியில் இலங்கையை பிற நாடுகளிடம் அதாவது சீனாவிடம் விளாது பாதுகாக்க முடியும் எனவும் அமிர்த்ஷா கருதியிருக்க வாயட்ப்புள்ளது. அத்துடன் இந்தியாவை சூழவுள்ள தென்னாசிய நாடுகள் அனைத்திலும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவு பெற்ற கட்சிகளே வளர்ந்து;ளளன. எவையும் பாரதீய ஜனதா ஆதரவுக் கட்சிகளாக இல்லை என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கலாம்.

நான்கு நேபாளத்தைக் காட்டிலும் இலங்கையின் அணுகுமுறைகளே இந்தியாவுக்கு அதிக ஆபத்தானதாக உள்ளது. இலங்கையை கையாளுவதே இந்தியாவுக்கு அதிக உழைச்சலாக மாறியுள்ளது. அதனால் இலங்கையின் மீதான அணுகுமுறைகளில் கடந்த காலத்தில் மேற்கொண்டிருந்த அனைத்து நகர்வுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குள் இந்திய மத்தியரசு தள்ளப்பட்டுள்ளது என்பதை அமிர்த்ஷாவின் அறிப்பு உணர்த்துவதாக அமைந்திருக்க வாய்ப்புள்ளது.

ஐந்து இலங்கையின் போக்கில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியானது 1971 இல் 1984 இல் 1987 இல் ஏற்பட்டுள்ளதின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது.1984 இல் இந்திரா காந்தி ஆட்சியில் இருக்கும் போது இலங்கை தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியை இராணுவரீதியில் கையாள திட்டமிட்டதாகவும் அது தொடர்பில் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான அமிர்தலிங்கத்திடம் பல தடவை இந்திரா காந்தி தெரிவித்ததாகவும் அதனை அமிர்தலிங்கம் ஏ.ஜே. வில்சனிடம் தெரிவித்ததாகவும் அவர் தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். அக்காலப் பகுதியிலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது கவனத்திற்குரியதாகும். அன்றைய பூகோள அரசியலோ புவிசார் அரசியலோ தற்போது இல்லாத சூழல் ஒன்று நிலவுகின்ற அதே வேளை இலங்கை அரசு முற்றாகவே இலங்கையிலிருந்து இந்தியாவை வெளியேற்றும் உத்தியைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தற்போது திருகொணமலையில் இந்தியாவின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டிருந்த எண்ணெய்குதங்களையும் அதன் அபிவிருத்தியையும் இலங்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அனைத்து நகர்வுகளையும் மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவுக்கான இலங்கை தூதரகத்துடன் ஆரம்பித:துள்ளதாகவும் அதன் பிரகாரம் இநதியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் மின் சக்தி அமைச்சர் கம்பலபில தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு நிலவும் சந்தர்ப்பத்தில் இந்தியா முற்றாக வெளியேற்றப்படுவது சாதரணமான விளைவுகளை ஏற்படுத்தாது என்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்தியுள்ளது.

எனவே இலங்கை -இந்திய அரசியல் உறவு அதிக நெருக்கடியை நோக்கி நகர்கிறத. அதன் விளைவுகள் ஆபத்தான சூழலை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகத்தை பல தரப்பிலிருந்தும் எழுப்பப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்திய-சீன மோதலின் களமாக மாறிவருவது பிராந்திய அடிப்படையில் மட்டுமல்ல இலங்கை அரசியல் சூழலுக்கும் ஆரோக்கியமானது அல்ல என்ற பதிவு பலமானதாக மாறிவருகிறது. இந்தியாவின் நோக்கு நிலையில் இலங்கை தந்திரோபாய நிலம் என்பதை இலங்கையின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளரான செல்ரன் கொடிகாரா பல நூல்களில் பதிவு செய்துள்ளார். அவரது எண்ணத்தின் அடிப்படையில் இலங்கை இதுவரையான காலப்பகுதிகளில் இந்தியா சார்ந்து வெளியுறவுக் கொள்கையை இலங்கை பின்பற்றியது. சில காலப்பகுதிகளில் இந்தியாவை நிராகரித்த போதெல்லாம் அதிக நெருக்கடியை இலங்கைத் தீவு எதிர் கொண்டது. அத்தகைய சூழலுக்குள்ளேயே இலங்கை தற்போது நகர்வதாக சந்தேகம் நிலவுகிறது பாரதீய ஜனதாக் கட்சியினது அகண்ட பாரதம் என்ற குறிக்கோளின் வெளிப்பாடும் இலங்கையின் தற்போதைய நகர்வும் அமிர்ஷாவின் அறிவிப்பினால் அதீதமான நிலையை அடைந்துள்ளது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE