Wednesday 24th of April 2024 11:55:07 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 44 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 44 (வரலாற்றுத் தொடர்)


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விரோத நடவடிக்கைகளும்! - நா.யோகேந்திரநாதன்!

"தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக இடது கையைத் தூக்குகின்ற அதே நேரத்தில் மக்கள் தமது நியாயபூர்வமான உரிமைகளுக்காக எழுச்சி பெறும்போது மக்களுக்கெதிராக வலது கையைத் தூக்குகிறது. அதனால் மக்களின் நியாயபூர்வமான எழுச்சிகளை ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகள் தமது நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் ஏற்பட்டு விடுவதுண்டு".

இது சோவியத் யூனியனில் கொடிய ஜார் ஆட்சியை வீழ்த்தி மக்களாட்சியை நிறுவியவரும், பாட்டாளி வர்க்கப் புரட்சி மூலம் உலகிலேயே முதல் முதலாக ஒரு சமவுடமை ஆட்சியை ஏற்படுத்தியவருமான மாமேதை "லெனின்" அவர்கள் தேசிய முதலாளித்துவம் பற்றி வெளியிட்ட கருத்துகளாகும். இலங்கையின் தேசிய முதலாளித்துவக் கட்சியாக எழுச்சி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரித்தானிய படைத்தளங்களை வெளியேற்றல், அந்நிய நிறுவனங்களைத் தேசிய மயமாக்கல், சுய ஆதாரப் பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்தல், தேசிய கலைகலாசார விடயங்களை முதன்மைப்படுத்தி ஊக்குவித்தல் போன்ற பல முற்போக்கான மக்கள் நலன் சார்ந்த விடயங்ளைத் தீவிரமாக முன்னெடுத்தது.

ஆனால் தமிழ் மக்களின் அஹிம்சைப் போராட்டத்தை இராணுவ வன்முறை மூலம் அடக்கியமை, தென்னிலங்கையில் தொழிலாளர்கள் போராட்டங்கள் மீது ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்தல், ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மலையக மக்களை நாடு கடத்த வழியமைத்தமை போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் ஒரு பிற்போக்கான பாத்திரத்தை எடுத்தது. அதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தொழிலாளர் வர்க்கத்தையோ சிறுபான்மை மக்களையோ தனக்கு ஆதரவான சக்திகளாக அணி திரட்ட முடியவில்லை.

1960ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்து தன்னைச் சதாகரித்துக் கொள்ளுமுன்பே தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பித்து விட்டது. போராட்டம் ஆரம்பித்து 2 மாதங்கள் கடந்த பின்பும் இரு தரப்பினருக்குமிடையே பேச்சுகள் இடம்பெற்றும் அது இடம்பெற்றபோதே இரு தரப்பாலும் அதைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இராணுவ வன்முறை மூலம் போராட்டம் முறியடிக்கப்பட்டது.

அதிலிருந்து அரசாங்கம் மீளுமுன்பே இராணுவச் சதிப் புரட்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் ஒடுக்கப்பட்டது.

இவ்வாறே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் இரண்டு கண்டங்களைத் தாண்டி நிமிர்ந்தெழ முயன்றபோது மூன்றாவது கண்டத்துக்கு முகம் கொடுக்க வேண்டிவந்தது.

ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமெரிக்க எண்ணெய் விநியோக நிலையங்களைத் தேசிய மயமாக்கியமை, பிரித்தானிய படைத்தளங்களை வெளியேற்றியமை, வங்கிகளைத் தேசிய மயமாக்கியமை போன்ற நடவடிக்கைகளால் பிரிட்டன், அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் இலங்கை மீது பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தின. முக்கியமாக அமெரிக்கா பி.எல் -480 உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்குக் கோதுமை மா வழங்கப்படுவதை நிறுத்தியது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற கடன் வழங்கும் நிறுவனங்கள் கடும் நிபந்தனைகளை விதித்ததன் மூலம் இலங்கை கடன்பெற முடியாத நிலையை உருவாக்கின.

இதன் காரணமாக நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி வந்தது. அப்போதைய நிதியமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க மக்கள் மீதே சுமைகளை ஏற்றினார். இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரித்தது. இந்நிலையில் அமைச்சரவையில் எழுந்த எதிர்ப்புக் காரணமாக அவர் நிதியமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டி வந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் 5 தடவைகள் நிதியமைச்சரை மாற்ற வேண்டிய அளவுக்கு இலங்கை மீது மேற்கு நாடுகளால் பொருளாதார நெருக்கடிகள் தொடுக்கப்பட்டன.

வாழ்க்கைச் செலவு உயர்வு காரணமாகத் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டங்களில் குதித்தன. இவற்றில் துறைமுகத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், வெள்ளவத்தை நெசவாலைத் தொழிலாளர்கள் ஆகியோரின் போராட்டங்கள் பல மாதங்கள் நீடித்தன.

இப்போராட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாத போதிலும் நீண்ட காலம் இழுபட்ட காரணத்தால் அவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. இவ்வாறே இ.போ.ச. ஊழியர்களின் வேலை நிறுத்தமும் 17 நாட்கள் தொடர்ந்த பின்பு வெற்றி தோல்வியின்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி, புரட்சிகர சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் தலைமையிலான சகல தொழிற் சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி அமைத்தன. அக்கமிட்டி 21 கோரிக்கைகளை முன்வைத்து நாடு பரந்த அளவில் வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவெடுத்தது. அது தொடர்பாகத் தீவிரப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்திக்க வேண்டிய மூன்றாவது பெரும் கண்டமாக உருவாக ஆரம்பித்தது.

இக்கூட்டுக் கமிட்டியில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அஸீஸ் தலைமையிலான ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மலையக மக்களின் தொழிற்சங்கங்களும் இணைந்து கொண்டன.

ஆரம்பத்தில் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி அமைக்கப்பட்டபோது அரசாங்கம் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. ஏற்கனவே துறைமுகத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், மோட்டார் தொழிற் சங்கத் தொழிலாளர்கள் ஆகிய தரப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டங்களின்போது அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த மறுத்துக் காலத்தை இழுத்தடித்தது. அதன் காரணமாக போராட்டம் நீர்த்துப்போக வைக்கப்பட்டு வெற்றி காணாமலே முடிவுக்குக் கொண்டுவர நிர்ப்பந்திக்கப்பட்டது. அந்த நிலைமையால் ஏற்பட்ட இறுமாப்புக் காரணமாக தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டியில் உருவாக்கத்தை அரச தரப்பினர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் 25.03.1964 அன்று கொழும்பு கோல்பேஸ் திடலில் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தியது. அதில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு உரிமைக் கோஷங்களை எழுப்பினர்.

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.ஏ.விக்ரமசிங்ஹ, சமசமாஜக் கட்சித் தலைவர் என்.எம்.பெரேரா, மக்கள் ஐக்கிய முன்னணித் தலைவர் பிலிப் குணவர்த்ன ஆகியோர் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்தபோது வீதியின் இரு மருங்கிலும் கூடி நின்ற மக்கள் கோஷங்களை எழுப்பி அவர்களை வாழ்த்தினர். பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் 21 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அக்கோரிக்கைகளுக்கு இணங்கா விடில் நாடு பரந்த அளவில் சகல தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதென்ற தீர்மானமும் பிரகடனம் செய்யப்பட்டது.

இதில் இரண்டு விடயங்கள் அரசாங்கத்தை அதிர்ச்சியடைய வைத்தன. ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தொழிற் சங்கங்களும் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தன. அடுத்தது மலையகத்தின் பெரிய தொழிற் சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸும் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸும் அதில் இணைந்திருந்தன. அப்போது இலங் கையின் பிரதான ஏற்றுமதி வருமானம் தேயிலையிலேயே தங்கியிருந்தது.

அதேநேரம் 12.08.1963 இலங்கை சமஜமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி என்பன இணைந்த இடது சாரி ஐக்கிய முன்னணியைத் தோற்றவித்திருந்தன. இந்த இடது சாரி ஐக்கிய முன்னணியின் அரசியல் தலைமையிலேயே தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டி 21 கோரிக்கைகளை முன்வைத்து பிரமாண்டமான கோல்பேஸ் பேரணியை நடத்தியது.

இந்த நிலையில் 21 கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படவுள்ள நாடு பரந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு முகம் கொடுப்பது இலகுவானதல்ல என்பதைச் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க உணர்ந்து கொள்கிறார். இப்பேரெழுச்சியைத் தந்திரோபாய முறையில் முறியடிக்கத் திட்டமிடுகிறார்.

எனவே இடதுசாரி ஐக்கிய முன்னணியின் உள்ள தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். ஆனால் ஒவ்வொரு கட்சியினரையும் தனித்தனியே சந்திக்கிறார்.

சமசமாஜக் கட்சியினருடன் இடம்பெற்ற பேச்சுகளில் என்.எம்.பெரேராவுக்கு நிதியமைச்சு வழங்கப்படுவதுடன் வேறு இரு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படுமெனப் பேரம் பேசப்படுகிறது. அவர்களும் அதை ஏற்றுக்கொள்கின்றனர். பிலிப் குணவர்த்தன தான் சி.பி.டி.சில்வா அமைச்சராக இருக்கும் வரை அமைச்சுப் பதவி ஏற்கப் போவதில்லையெனக் கூறிய போதும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கச் சம்மதிக்கிறார்.

எஸ்.ஏ.விக்கிரமசிங்க பீட்டர்கெனமன் குழுவினருக்கும், சண்முகதாஸன் குழுவினருக்குமிடையே ரஷ்ய, சீன கருத்து மோதல் காரணமாக முரண்பாடு கூர்மையடைந்திருந்த நிலையில் ஸ்ரீமாவோ இரு தரப்பில் எவரையுமே பேச்சுக்கு அழைக்கவில்லை.

இந்தநிலை 11.06.1964ல் சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொண்டதுடன் என்.எம்.பெரேரா நிதியமைச்சரானார். அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாவது கண்டத்திலிருந்தும் தப்பிக் கொண்டது.

ஆனால் அவை தற்காலிகமான தப்புதல்களே என்பதையும் தப்புதல்கள் படிப்படியாக ஒரு பெரும் ஆபத்துக்கான களத்தை அமைத்துக்கொண்டிருக்கின்றது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு தேசிய முதலாளித்துவக் கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களையும் தொழிலாளர் வர்க்கத்தையும் தன் நேசசக்திகளாகக் கையாண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் தன்னுடன் அணி திரட்டியிருக்கவேண்டும்.

தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டத்தைப் பொறுமையுடன் கையாண்டு, பேச்சுகள் மூலம் இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கவேண்டும். பண்டா – செல்வா உடன்படிக்கையின் அடிப்படையில் சில குறைந்த பட்சத் தீர்வுகளையாவது எட்டியிருக்க வேண்டும். மாறாக தமிழர்களின் சாத்வீகப் போராட்டத்தை இராணுவ வன்முறை மூலம் ஒடுக்கியமை தமிழர்களை எதிர் நிலைக்குத் தள்ளியதை மறுக்கமுடியாது.

இவ்வாறே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு குறைந்தபட்ச நியாயமான தீர்வுகளையாவது எட்டமுயலாமல் தொழிலாளர் சக்தியை பிளவுபடுத்தி தொழிலாளர் போராட்டத்தை அரசாங்கம் மழுங்கடித்தது. அதன் மூலம் தொழிலாளர்களின் எதிர்ப்பைச் சந்தித்ததுடன் தனக்குப் பலத்த ஆதரவை வழங்கக் கூடிய சக்திகளை இழந்தது.

மாமேதை லெனின் அவர்கள் கூறியது போன்று ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இடது கையைத் தூக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலது கையை மக்களுக்கு எதிராகத் தூக்கியது.

அதன் காரணமாக ஐ.தே.கட்சி ஆட்சியைக் கைப்பற்ற தமிழர்களின் ஆதரவையும் மலையகத் தொழிலாளர்களின் ஆதரவையும் பெறக்கூடிய வாய்ப்பை வழங்கிவிட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் காரணமாக மக்களின் நியாயபூர்வமான எழுச்சிகள் பிற்போக்கு சக்திகளின் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டமையே வரலாறாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE