Thursday 28th of March 2024 06:35:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஈழப் போராட்ட ஆதரவாளர் தா.பாண்டியன் காலமானார்!

ஈழப் போராட்ட ஆதரவாளர் தா.பாண்டியன் காலமானார்!


ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தா. பாண்டியன் நேற்றுக் காலமானார்.

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இந்திரா காந்தி காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்த பாண்டியன் ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் இடம்பெற்றபோது மொழிபெயர்ப்பாளராக பங்குகொண்டிருந்த நிலையில் படுகாயம் அடைந்திருந்தார்.

விடுதலைப்போராட்டம் தொடர்பிலான கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்த அவர்,

ஈழவிடுதலைப் போராட்டத்தின் பின்நாட்களில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளராக மாறியிருந்தார்.

போர் உக்கிரம் பெற்றிருந்த இறுதிக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்த தா.பாண்டியன் போராட்டம் சார்ந்த கருத்தியல் ரீதியிலான நடவடிக்கைகளில் ஆலோசகராகவும் விளங்கியிருப்பதாக தெரியவருகிறது.

தா.பாண்டியன் மறைவு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட்ட பிரமுகர்களும் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

தா.பாண்டியன் பற்றிய வரலாறு விகடன் பதிவு வாசகர்களுக்காக பகிர்கிறோம் -

நன்றி - விகடன்

தா.பா!

மதுரை மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து கல்லூரியில் பேராசிரியர், வழக்கறிஞர், தமிழறிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், களப்போராளி, நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல தளங்களில் செயல்பட்டவர் தா.பாண்டியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் 3 முறை பணியாற்றியவர்.

காரைக்குடியில் இன்டர்மீடியேட் சேர்ந்த காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்தார் தா.பாண்டியன். மாணவர் மன்றத்தில் இணைந்து தீவிரமாகக் களப்பணியாற்றியவர். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவால் அறிமுகப்படுத்தப்பட்ட தா.பாண்டியன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். அடிப்படையில் வழக்கறிஞரான தா.பாண்டியன், கட்சியின் முழு நேரப் பணியாளராக விரும்பி, வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டார். கட்சியின் மாநிலக் குழு, நிர்வாகக் குழு, செயற்குழு, மாநிலச் செயலாளர், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்தவர் தா.பாண்டியன். அதேபோல, ரயில்வே தொழிற்சங்கம், துறைமுகம் தொழிற்சங்கம் என ஏராளமான பொறுப்புகளையும் பல போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர்.

சமூகப் பணி!

தமிழ்நாடு, தமிழ்மொழி, ஈழத் தமிழர் வாழ்வுரிமை உள்ளிட்டவற்றுக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்தவர் தா.பா. தந்தை பெரியார்மீது மிகுந்த பற்று கொண்ட இவர், சமூகநீதி, சாதிய வன்கொடுமை எதிர்ப்பு ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுக்கத் தவறியதில்லை. `ஜனசக்தி' பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் கடைசிப் பக்கத்தில் `சவுக்கடி' என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது. சுமார் 15 நூல்களையும் எழுதியிருக்கிறார் தா.பா.

தேர்தல் வரலாறு!

சட்டமன்றத் தேர்தலில் ஆறு முறையும் நாடாளுமன்றத் தேர்தலில் 3 முறையும் போட்டியிட்டிருக்கிறார் தா.ப. 1983-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது, தோழர்கள் கல்யாணசுந்தரம், டாங்கே உள்ளிட்டோரோடு இணைந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார் பாண்டியன். 1983-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை அக்கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். 1989, 1991 நாடாளுமன்றத் தேர்தல்களில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்றார் தா.பா. இந்த இரண்டு தேர்தலிலும் காங்கிரஸோடு கூட்டணியிலிருந்தது ஐக்கிய கம்யூனிஸ்ட்.

மரணத்துக்கு அருகே சென்று திரும்பியவர்!

ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி ஆகியோரது உரைகளை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் தா.பா. 1991 நாடளுமன்றத் பிரசாரக்கூட்டத்தின்போது ராஜீவ்காந்தியின் உரையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் இவர்தான். 1991 மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி வெடிகுண்டு வைத்துக் கொல்லப்பட்டபோது, அவரது அருகில்தான் நின்று கொண்டிருந்தார் தா.பா. குண்டு வெடித்தபோது தா.ப-வும் தூக்கிவீசப்பட்டார். முதலில் அவரும் உயிரிழந்துவிட்டதாகவே செய்திகள் வந்தன. ஆனால், படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் தா.பா.

சொந்த வாழ்க்கை!

தன் தந்தையின் வாக்கைக் காப்பாற்றுவதற்காக, இரண்டு வயதில் தந்தையை இழந்த ஜாய்சி என்ற பெண்ணை மணம் முடித்தார் தா.பாண்டியன். தா.பா - ஜாய்சி தம்பதிக்கு டேவிட் ஜவஹர் என்ற மகனும் அருணா, பிரேமா என்ற மகள்களும் உள்ளனர். திருமணம் முடிந்த சில நாள்களிலேயே கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளரானதால் சென்னைக்குச் சென்றுவிட்டார் தா.பாண்டியன். சென்னையில் சட்டம் பயின்றார். அந்தச் சமயத்தில், காரைக்குடியிலிருந்து தன் மனைவி அனுப்பி வைக்கும் பணத்தில்தான் தினசரி செலவுகளை மேற்கொண்டார்.

2012-ம் ஆண்டில் அவரது மனைவி மறைந்த பிறகு, ``திருமணத்துக்குப் பிறகு அவளது சிறிய எதிர்பார்ப்பான பூவைக்கூட நான் வாங்கிக் கொடுத்ததில்லை. பட்டது போதும் என்று மறைந்துவிட்டாள். தற்போது அவளது படத்துக்குப் பூச்சூடி கடனை தீர்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று ஏக்கத்தோடு பேசியிருந்தார் தா.பா.

அழியாத அடையாளம்!

மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசும் மிகச் சில அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் தா.பா. எளிய அரசியல்வாதி, கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருப்பவர், லட்சியத்துக்காகப் பாடுபடுபவர், ஓய்வில்லாமல் உழைப்பவர், சாமானியர்களுக்காக குரல் கொடுப்பவர், களத்தில் இறங்கிப் போராடுபவர், எப்போதும் சிவப்பு துண்டோடு இருப்பவர்... இவைதான் தா.பாண்டியனின் அடையாளங்கள். இன்று அவர் உடலளவில் மறைந்துதிருந்தாலும், தமிழக அரசியலின் அழியாத அடையாளங்களுள் ஒன்றாக எப்போதும் நிலைத்திருப்பார் தோழர் தா.பா!


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE