Friday 23rd of April 2021 02:26:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரு தடவை போடப்படும் ஜோன்சன் & ஜோன்சன் கோவிட்19 தடுப்பூசிக்கு அமெரிக்கா அங்கீகாரம்!

ஒரு தடவை போடப்படும் ஜோன்சன் & ஜோன்சன் கோவிட்19 தடுப்பூசிக்கு அமெரிக்கா அங்கீகாரம்!


ஓரு தடவை மட்டுமே போடப்படும் ஜோன்சன் & ஜோன்சன் கோவிட்19 தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. உலகில் ஒரு தடவை மட்டுமே போடப்பட வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட முதல் கோவிட்19 தடுப்பூசியாக இது அமைந்துள்ளது. அமெரிக்கா உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது கோவிட்19 தடுப்பூசியாக இது அமைந்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜோன்சன் & ஜோன்சன் முன்னைய இரு தடுப்பூசிகளை விட விலை குறைந்தது. அத்துடன், சாதாரண குளிர்சாதன பெட்டியில் வைத்துப் பாதுகாக்க முடியும் என்பதால் இது பயன்பாட்டுக்கு இலகுவானதாகவும் உள்ளது.

இந்த தடுப்பூசி சோதனையில் கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர உடல் நலக் குறைவு ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்துவது தெரிய வந்துள்ளது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதியளிக்கும் முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. இந்நத் தடுப்பூசிக்கு தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் 10 கோடி தடுப்பூசிகளை அமெரிக்காவுக்கு வழங்க ஜோன்சன் & ஜோன்சன் உறுதியளித்துள்ளது.

அத்துடன் பிரிட்டனுக்கு 3 கோடி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 20 கோடி, கனடாவுக்கு 3.8 கோடி தடுப்பூசிகளை வழங்கவும் ஜோன்சன் & ஜோன்சன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் உலகப் பொதுத் தடுப்பூசித் திட்டத்துக்கு 50 கோடி தடுப்பூசிகளை வழங்கவும் ஜோன்சன் & ஜோன்சன் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியான செய்தி என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எனினும் கொரோனாவுக்கு எதிரான போராட்டதில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது எனவும் அவா் கூறியுள்ளார்.

தொடர்ந்து கைகளை கழுவுங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள், தொடர்ந்து முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் என அனைத்து அமெரிக்கர்களையும் நான் வலியுறுத்துகிறேன். கொரோனா வைரஸின் புதிய திரிபு பரவுவதால் நிலைமை மோசமாகலாம், அதனால் தற்போதைய முன்னேற்றம் தடைபட்டு பின்னடைவைக் காணலாம் எனவும் பைடன் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் 7.28 கோடி பேருக்கு இதுவரை பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் தினசரி சராசரியாக 13 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. பதவியேற்று முதல் 100 நாட்களுக்குள் 100 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்ற பைடனின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தடுப்பூசித் திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 2 கோடி 92 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE