Wednesday 21st of April 2021 04:55:12 AM GMT

LANGUAGE - TAMIL
.
சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட உரிமை மாவைக்கு மறுக்கப்படுகிறதா? - நா.யோகேந்திரநாதன்!

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட உரிமை மாவைக்கு மறுக்கப்படுகிறதா? - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள ஒரு விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் ஒன்றுகூடி அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து தமிழர் பேரவை என்ற பேரில் செயற்படுவது பற்றி ஆலோசனை இடம்பெற்றது.

கஜேந்திரகுமாரைத் தலைமையாகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைவரும் ஒரே சக்தியாகத் திரண்டெழுந்து ஒரு குடையின் கீழ் செயற்படவேண்டும் என்ற கருத்து சகல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டது.

சிவில் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக இடம்பெற்று இலங்கை ஆட்சியாளரை அதிர வைத்ததும், சர்வதேசத்துக்கு எமது உரிமைப் போராட்டத்தின் வலிமையை உணர்த்தியதுமான பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி ஏற்படுத்திய பேரெழுச்சியின் தொடர்ச்சியாகவே இம்முயற்சி எமது மக்களால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது.

ஆனால் இக்கூட்டம் இடம்பெற்ற அடுத்தடுத்த நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழர் பேரவை உருவாக்கம் தொடர்பான மாவை சேனாதிராஜாவின் முயற்சிகளை உடனடியாகக் கைவிடும்படி அறிவித்திருந்தார். அதற்கு இரு காரணங்கள் கூறப்பட்டது. ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காது இப்படி ஒரு அமைப்பை மாவை சேனாதிராஜா உருவாக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. இரண்டாவது இப்பேரவையில் இணையவுள்ளவர்கள் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியவர்களாதலால் அவர்களை இணைத்து ஒரு கூட்டணி அமைக்கமுடியாது என்பதுடன் அவர்கள் விரும்பினால் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதைப் பற்றி ஆட்சேபணை இல்லை.

முதலாவது விடயத்தைப் பொறுத்தவரையில் மாவை இவ்விடயம் தொடர்பாக பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடினாரோ இல்லையோ இம்முயற்சி தொடர்பாக சித்தார்த்தனோ செல்வம் அடைக்கலநாதனோ எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமின்றி யாழ்ப்பாணம் கூட்டத்தின் தொடர்ச்சியாக 26.02.2021 அன்று வவுனியாவில் இடம்பெற்ற அடுத்த கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பங்காளிக் கட்சிகளின் பெயரைப் பயன்படுத்தி சம்பந்தன் ஒரு ஐக்கியம் உருவாவதைச் சிதைக்க விரும்புகிறாரா என்ற கேள்வியை இந்த முதலாவது காரணம் எழுப்புகிறது.

மேலும் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பங்காளிக் கட்சிகளுக்கு உரிய கௌரவம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்பட்டனவா என்ற கேள்வியும் உண்டு. கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கம் என்ற தோற்றப்பாட்டில் சம்பந்தனும், சுமந்திரனும் தன்னிச்சையாக த.தே.கூட்டமைப்பை வழி நடத்திச் சென்றமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவுகளுக்கு வழி வகுத்தன என்பதை மறுக்கமுடியாது. குறிப்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன், க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் புறமொதுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுக் கூட்டமைப்பை விட்டு தாங்களாக வெளியேறும் வகையில் நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதும் மறந்து விடமுடியாது.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தித் தமிழ் மக்களின் ஐக்கியத்தைச் சீர்குலைக்கும்போது அலட்சியப்படுத்தப்பட்ட பங்காளிக் கட்சிகளில் கருத்துகள் தமிழ் மக்கள் ஒரு குடையில் அணி திரண்டு பலமான சக்தியாகும்போது மட்டும் அதற்கெதிராக பங்காளிக் கட்சிகள் இழுக்கப்படுவது ஏன்?

தமிழ் மக்களின்பேரால் அவர்கள் நடத்தும் சரணாகதி அரசியலுக்கு இப்புதிய அமைப்பால் ஆபத்து வந்து விடுமென அஞ்சுகின்றனரா?

ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கட்சிகள் மீண்டும் மீண்டும் கூடி கலந்துரையாடல்களை நடத்தினார்கள். அவற்றில் சுமந்திரன் அவர்கள் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான விடயங்களைத் தவிர்க்க முயன்றாரெனவும் அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையிலும் சில பகுதிகளைச் சேர்க்க முயன்றார் எனவும் கஜேந்திரகுமார் பகிரங்கமாக ஊடகங்களில் குற்றம் சாட்டியிருந்தார்.

அதனையடுத்து ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளோ குறைந்தபட்சம் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களோ இன்றி சுமந்திரன் தனியாகவே பிரிட்டிஷ், அமெரிக்கத் தூதுவர்கள் உட்பட வெளிநாட்டு ராஜதந்திரிகளையும் ராஜபக்ஷக்களையும் சந்தித்திருந்தார். இவை தனிப்பட்ட சந்திப்புகள் எனக் கூறப்பட்டன.

எனினும் இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டன், நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வெளியிட்டுள்ள தீர்மான முன்வரைவில் மனித உரிமை ஆணையாளரால் அவரது அறிக்கையில் வலியுறுத்தப்பட்ட சர்வதேசப் பொறிமுறை தொடர்பிலோ அதாவது போர்க் குற்றங்களுக்கான ஆவணங்கள், ஆதாரங்களைச் சர்வதேச மட்டத்தில் திரட்டுவது பற்றியோ, உறுப்பு நாடுகள் தங்கள் உள்நாட்டு நீதியமைப்புகள் மூலம் போர்க் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவது, பயணத்தடை விதிப்பது போன்ற விடயங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.

இப்பின்னடைவுக்கு சுமந்திரன் வெளிநாட்டுத் தூதுவர்களுடனும், ராஜதந்திரிகளுடனும் நடத்திய தனிப்பட்ட பேச்சுகளே காரணம் எனப் புலம் பெயர் நாடுகளிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் சுமந்திரன் முன்வைத்ததாக கஜேந்திரகுமாரால் கூறப்பட்ட விடயங்களும் புலம்பெயர் நாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளும் ஒரே தொனியில் அமைந்திருப்பதைக் கவனிக்கமுடியும்.

இப்படியான தனிப்பட்ட சந்திப்புகளை மேற்கொள்ளக்கூடிய உரிமை சுமந்திரனுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.

இரண்டாவதாக மாவை சேனாதிராஜாவின் மேல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்க முடியாதெனவும் அவர்கள் விரும்பினால் மீண்டும் கூட்டமைப்பில் வந்து இணையலாம் எனவும் குறிப்பிடப்பட்டது.

சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் ஆகியோர் தாமாகவே வெளியேறினார்கள் என்பதைவிட அவர்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதே உண்மை. சுரேஷ் அணியினர் திட்டமிட்டுத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். சில தமிழரசுக் கட்சியினர் அவர்களைத் துரோகியென வர்ணிக்கவும் தயங்கவில்லை. இறுதியில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் சிவசக்தி ஆனந்தனை உரையாற்ற அனுமதிக்காத நிலையிலேயே அவர்கள் கூட்டமைப்பை விட்டு வெளியேறினர். சி.வி.விக்னேஸ்வரனை மாகாண சபையை நடத்தவிடாமல் சுமந்திரன் அணியினர் தொடர்ந்து குழப்பங்களை விளைவித்ததுடன் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் கொண்டு வந்தனர். ஐங்கரநேசன் மேல் ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தினர். அந்த நிலையிலேயே அவர்கள் வெளியேறினர்.

அவர்கள் வெளியேறியதற்கான காரணங்கள் இப்போதும் தொடரும் நிலையில், அவர்களை வெளியேற்றத் திட்டமிட்ட வகையில் நயவஞ்சக நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் இன்றும் த.தே.கூட்டமைப்பில் ஆதிக்கம் வகிக்கும்போது அவர்கள் எப்படி மீண்டும் த.தே.கூட்டமைப்பில் இணையமுடியும்.

எனவே மாவை சேனாதிராஜாவுக்கு விடுக்கப்பட்ட கட்டளைகளும் அவற்றுக்கான காரணங்களும் அர்த்தமற்றவை என்பதுடன் அவை முன் வைக்கப்பட்டமைக்கான வேறு உள்நோக்கங்களும் இருக்கக் கூடுமென்றே தோன்றுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்படப் பலர் வெளியேற்றப்பட்டபோது மாவை சேனாதிராசா அதை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. ஆனால் 2020 தேர்தல் காலத்திலும் அதன் பின்பும் அதேபோன்ற நெருக்கடிகளும் அவமானப்படுத்தல்களும் மாவை சேனாதிராசா மீதே பிரயோகிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. அந்நடவடிக்கைகள் மாவை சேனாதிராசாவையும் விரக்தியுற்று தானாக வெளியேறவைக்க ஒரு நயவஞ்ச நடவடிக்கை என்ற சந்தேகம் எழாமலுமில்லை.

அந்த வகையில் தேசியத் தமிழர் பேரவையை ஆரம்பிக்கும் அவரின் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகிறது.

தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக எழுச்சி பெறுவதும் அதற்குள் திட்டமிட்டு ஊடுருவும் சக்திகளால் அவை திசை திருப்பப்பட்டு நீர்த்துப் போக வைக்கப்படுவதும் சரியான திசை மார்க்கத்தை முன்னெடுக்க முயல்பவர்கள் திட்டமிட்டு அவற்றிலிருந்து ஓரங்கட்டப்படுவதும் கடந்த காலங்களில் தொடரும் வரலாறாக உள்ளது. அதற்கு தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கம் என்ற பெயராலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தனித்துவத்தின் பேராலும் போலிக் காரணங்கள் முன்வைக்கப்பட்டு தமிழ் மக்கள் நம்பவைக்கப்பட்டனர் என்பது துயரங்கலந்த கடந்த காலமாகும்.

எனவே நாம் இத்தகைய தீய சக்திகள் பற்றி விழிப்புணர்வுடன் முன்செல்லத் தவறினால் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியின் மூலம் ஆரம்பமான பேரெழுச்சியும் நீர்த்துப் போய்விடும் என்பது உணரப்படவேண்டும். இன்று சர்வதேச வல்லாதிக்கப் போட்டி காரணமாக எமக்கு ஒரு சாதகமான சூழ் நிலை உருவாகியுள்ள நிலையில் நாம் எமது பிரச்சினைகளை உறுதியுடனும் விட்டுக்கொடுக்காத கொள்கைப் பிடிப்புடனும் முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாகும். இதை குழப்பவும் திசை திருப்பவும் முயல்பவர்கள் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்கத் தவறினோமென்றால் மீண்டும் ஒருமுறை கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்ட பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவோம்.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்

02.03.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: ம.ஆ.சுமந்திரன், மாவை சோ.சேனாதிராஜா, இரா சம்பந்தன், இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE