Friday 19th of April 2024 12:06:02 PM GMT

LANGUAGE - TAMIL
-
மியான்மரில் நேற்று ஒரே நாளில் 38 பேர் இராணுவத்தால் சுட்டுக் கொலை!

மியான்மரில் நேற்று ஒரே நாளில் 38 பேர் இராணுவத்தால் சுட்டுக் கொலை!


மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆா்ப்பாட்டக்காரர்கள் குறைந்தது 38 பேர் நேற்று ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு மாதத்துக்கு முன்னர் இராணுவம் ஆட்சியைப் கைப்பற்றியதில் இருந்து இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அதிகளவானவர்கள் நேற்று புதன்கிழமை கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மியான்மரில் இரத்தம் தோய்ந்த நாள் இதுவென ஐக்கிய நாடுகள் சபை வர்ணித்துள்ளது.

மியான்மரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் பொலிஸார் மிகக் கொடூரமான வன்முறைகளில் ஈடுபடுவது குறித்த அதிர்ச்சிகரமான காணொளிகள் வெளிவந்துள்ளதாக மியான்மருக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் கூறினார்.

மியான்மர் பாதுகாப்புப் படையினர் ரப்பர் குண்டுகளுடன், ஆபத்தான ஆயுதங்களையும் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆங் சாங் சூகி தலைமையிலான மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சாங் சூகி மற்றும் அவரது கட்சித் தலைவா்கள், சிவில் சமூகத்தினர், பத்திரிகையாளர்கள் என பெருமளவானவர்களை இராணுவம் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில் இராணுவ ஆட்சியைக் கண்டித்து மியான்மரில் கடந்த ஒரு மாதமாக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், இராணுவ ஆட்சியைக் கண்டித்துள்ள சர்வதேச நாடுகள், ஜனநாயக ஆட்சியை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனினும் மியான்மர் இராணுவம் இதுவரை எதனையும் கண்டுகொள்ளாமல் தமக்கு எதிராக போராட்டங்களை அடக்குவதையே குறியாகக் கொண்டுள்ளது.

இதேவேளை, நேற்று புதன்கிழமை ஆா்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களை அடுத்து ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை கூட்டுமாறு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன், மியான்மர் இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது பற்றி யோசித்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது மியான்மர் இராணுவம் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ளவேண்டும் என மியான்மரின் அண்டை நாடுகள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்திய நிலையில் மறுநாள் 38 ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இராணுவத்துக்கு எதிரான ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 50 பேர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மியான்மருக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் தெரிவித்துள்ளார்.

யாங்கோன் உள்ளிட்ட பல நகரங்களில் எச்சரிக்கை செய்யாமல் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மியான்மரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களில் 14 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும் ஷ்ரானர் பர்ஜனர் கூறினார்.

இதேவேளை, உலக நாடுகள் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து அடக்குமுறைகளை மியான்மர் இராணுவம் பிரயோகித்துவருகிறது. உலக நாடுகள் மியான்மரைத் தனிமைப்படுத்தினாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் மியான்மர் மீதான தடைகளை மேலும் வலுவாக்க திட்டமிட்டு வருகின்றன. புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட இராணுவ வன்முறைகளைக் கண்டு திகைத்துப் போயுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக மியான்மர் இராணுவம் இழைத்துள்ள கொடூர வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வருமாறு உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். எனினும் ஐ.நா. பாதுகாப்பு சபை வெறும் கண்டனத்தோடு மௌனமாகவுள்ளது. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் தமக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மியான்மருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடை போடுவதே இதற்குக் காரணமாகும்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE