Friday 23rd of April 2021 01:16:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
பாகிஸ்தான் பிரதமர் வருகை இலங்கை இராஜதந்திரத்துக்கு தோல்வியா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

பாகிஸ்தான் பிரதமர் வருகை இலங்கை இராஜதந்திரத்துக்கு தோல்வியா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


இலங்கை -இந்திய உறவு இராஜதந்திர நகர்வுக்குள் அகப்பட்டுள்ளது. மகானமரது மகாவம்ச காலத்திலிருந்து அத்தகைய போக்கினை அதிகம் உணரமுடிகிறது. இலங்கையின் புவிசார் அரசியலும் பூகோள அரசியலும் இந்தியாவை மையப்படுத்தியே இயங்க முனைகிறது. அதில் மாற்றத்தை ஏற்படுத்த விளைந்த சந்தர்ப்பம் முழுவதும் இலங்கை குழப்பமும் நெருக்கடியையும் சந்தித்து வருவதனை அவதானிக்க முடிகிறது. ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதன் இந்தியா சார்ந்த பிரதிபலிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவின் நீண்ட மௌனமும் இலங்கை அட்சியாளரின் இந்தியா பொறுத்த நம்பிக்கையும் தெளிவற்ற பதிலுக்கானதாக அமைந்துவிடும் என்ற எண்ணத்தை இலங்கை தமிழர் விளங்கிக் கொள்ள முனைகின்றனர்.இக்கட்டுரையும் இந்தியாவின் மௌனத்தையும் இலங்கையின் நகர்வையும் தேடுவதாகவே அமையவுள்ளது.

46 வது மனித உரிமைகளுக்கான ஜெனீவா கூட்டத் தொடர் 22.02.2021 ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அதன் தீர்மானங்களின் நகல் வெளியாகியுள்ளது. அதன் முக்கியத்துவம் பலவீனமாக அமைந்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பிரித்தானியா மற்றும் மனித உரிமை பேரவைக்கு வெளியே இருக்கும் அமெரிக்காவும் இலங்கைக்கு அரசாங்கத்திற்கு பலமான நெருக்கடியை ஏற்படுத்தும் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கமும் தனது நட்பு நாடுகளின் ஆதரவுடன் அத்தகைய தீர்மானத்தை தகர்துவிடுவோம் எனவும் இந்தியா முழுமையான ஆதரவை தரும் எனவும் அதற்கான கோரிக்கையை இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் விண்ணப்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. ஆனால் இந்தியாவின் தரப்பிலிருந்து இலங்கை வழங்கிய கடிதத்திற்கு எத்தகைய பதிலும் வழங்காது நீடித்த மௌனத்தை கொண்டிருப்பதையும் அவதானித்தல் வேண்டும்.

ஆனால் மிக அண்மையில் இவிவிடயம் பொறுத்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராம்நாத் சிங் தெரிவித்துள்ள கருத்து மட்டுமே இந்தியத் தரப்பின் பதிலாக அமைந்துள்ளது. அவ்வாறு இந்தியா பதிலளிக்காததற்கு பிரதான காரணம் தமிழகத் தேர்தலாக அமைய வாய்ப்புள்ளதென்ற விமர்சனம் தவிர்க்க முடியாதது. மீண்டும் தமிழகத்தை அ.இ.அ.தி.மு.க -பா.ஜ.க வெல்ல வேண்டும் என்பதில் இந்திய மத்திய அரசு தெளிவாக உள்ளது. அதனையும் கடந்து ஒரு பதில் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா வழங்குமாயின் அதுவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தது போல் தான் அமைந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அதாவது இலங்கைத் தமிழருகள் சாமாதானம் சமத்துவம் மற்றும் கௌரவத்துடன் வாழ்வதற்கு இந்தியா உறுதி செய்யும். இதனையே 2015 இல் யாழ்ப்பாணம் வருகை தந்த போதும் 2020 இல் காணெளியில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமருடன் உரையாடும் போதும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அவதானித்தால் இந்தியா எத்தகைய மாற்றத்தையும் இலங்கை தமிழர் விடயத்தில் மேற்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இந்தியா இராஜதந்திர ரீதியில் நகர்கிறது. சீனாவுக்கு எதிராக அத்தகைய நகர்வை பயன்படுத்துகிறது. அது இந்தியாவின் நலன் சார்ந்தது. அதனை குறைகூற முடியாது. ஆனால் இலங்கைத் தமிழரை முன்னிறுத்தி அத்தகைய நலன்களை கடந்த பல தசாப்தங்களாக இந்தியாவும் ஏனைய சர்வதேச சக்திகளும் நகர்ந்துள்ளன. அத்தகைய நகர்வுக்கான காலமாகவே தற்போதைய சூழல் காணப்படுகிறது. இத்தகைய நெருக்கடியை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகிறது என்பதை அவதானித்தல் அவசியமானது.

முதலாவது இந்தியா மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பது போல் வெளிப்படையாக உரையாடுகிறது. ஜனாதிபதி பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சுக்கள் மற்றும் வெளியுறவுச் செயலாளர் என அனைவரும் இந்தியா இலங்கைக்கு ஜெனீவாவில் உதவும் எனவும் இலங்கையின் நீண்ட கால நண்பன் அயலவன் பயங்கரவாதத்தை முறியடிக்க உதவிய நாடு இந்தியா என எல்லாத் தளத்திலிருந்தும் ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றன. அரசாங்கத் தரப்பினரின் அறிக்கைகள் அனைத்தும் அதில் பாவிக்கப்பட்ட சொற்கள் அனைத்தும் தந்திரமான வார்த்தைகளாவே உள்ளன.

இரண்டாவது மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா உரையாற்றிய போது தெரிவித்த விடயங்கள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை இலங்கை அரசாங்கம் வென்றதாகவே தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் நடந்தவை அனைத்தும் பயங்கரவாதம் எனவும் அது ஆபத்தான மிகக் கொடுமையான அபாயமானவை என்றெல்லாம் ஒரு தரப்பான காரணங்களை பட்டியல் படுத்தியிருப்பதுடன் இந்தியத் தலைவரை கொலை செய்த சம்பவத்தையும் நினைவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் உலக நாடுகளை திசை திருப்ப முடியும் என்ற நோக்கத்தை அவரது உரை வெளிப்படுத்துகிறது. ஆனால் இலங்கைத் தமிழர் போருக்கு பின்னர் நிகழ்த்த வேண்டியவற்றையே கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

மூன்றாவது இலங்கை அரசாங்கம் மிக இக்கட்டான நிலையில் பாகிஸ்தான பிரதமரை அழைத்து ஐந்து உடன்படிக்கையை மேற்கொண்டதுடன் பதாகிஸ்தான பிரதமருக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வைச் செய்துகாட்டியுள்ளது. இது பல விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீன இலங்கை பாகிஸ்தான உறவை முதன்மைப்படுத்தியிருந்தமை நினைவு கொள்ளத் தக்கது. இதனை எல்லாம் ஏன் இலங்கை அரசாங்கம் தற்போதைய சூழலில் மேற்கொண்டது என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. இது இராஜதந்தர ரீதியில் தோல்வியாகவும் அபாயமாகவும் பார்க்கப்படும் விமர்சனம் ஒன்று எழுந்துள்ளது. அதிலும் இந்தியா எந்த நாட்டுடனும் உறவு கொண்டாலும் ஏற்றுக் கொள்ளும் ஆனால் பாகிஸ்தானுடன் உறவை கொள்ளும் நாட்டை அனுமதிக்காது என்றெல்லாம் விமர்சனம் உண்டு. அது ஒருவகையில் சரியானதாவே தெரிந்தாலும் நடைமுறையில் தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் நெருக்கடிகாலத்தில் அதிகாரத்தை முகாமை செய்வதில் வல்லுனர்களாகவே உள்ளனர்.

இலங்கையின் இருப்பென்பது சீன பாகிஸ்தான் நட்பிலேயே தங்கியுள்ளது. எவ்வளவுக்கு அத்தகைய நாடுகளின் நட்பினை பலப்படுத்த முடியுமோ அத்தளவுக்கு இந்தியாவின் நட்பு பலமடையும் என்ற தந்திரத்தை கொண்டுள்ளனர். இந்தியா உதவ மறுத்தால் வேறு நட்புக்களை நாடி நகர முடியும் என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகைய வேறு நட்பு என்பது இந்தியாவுக்கு எதிரான நட்புக்கள் என்பதையே இலங்கை ஆட்சியாளர்கள் பாகிஸ்தான் மூலமாக தெரிவித்துள்ளனர். இதனையே கடந்த காலம் முழுவதும் இலங்கையில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அனைத்தும் மேற்கொண்ட உத்தியாகவே அமைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் அல்லாது விட்டால் இந்தியா இலங்கைக்கு சார்பாகவோ எதிராகவோ போகாது நடுநிலமை என்ற தீர்மானத்திற்கு நகரும். அதனை நோக்கியே தற்போதைய நகர்வும் அமைய வாய்ப்புள்ளது. தமிழகத் தேர்தல் இல்லாது விட்டால் தற்போது இந்தியாவிலிருந்து ஒரு முக்கிய அமைச்சர் ஒருவர் இலங்கை விஜயம் உறுதியாகியிருக்கும்.

அதே நேரம் இலங்கை தரப்பு பாகிஸ்தான பிரதமரை அழைத்தன் மூலம் உள் நாட்டில் எழுந்துள்ள ஜனாசா விடயத்தை கையாளவும் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள விமர்சனத்தை கையாளவும் முனைந்துள்ளது. ஆனால் அது முழுமையான வெற்றியைத் இலங்கை அரசாங்கத்திற்கு தந்துள்ளது எனக் கூறிவிட முடியாது.

எனவே பாகிஸ்தான் பிரதமரது இலங்கை விஜயமும் இந்தியாவிடம் இலங்கை ஜெனீவாவை கையாளுவதற்கான கோரிக்கையும் இந்திய இராஜதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாக இருந்தாலும் இலங்கையின் இராஜதந்திர உத்தியின் தோல்வியாக அளவிட முடியாது. இது எதிர் மறையான விளைவுகளைத் தரவல்லது. அத்தகைய எதிர் மறையானவையே இலங்கைக்கு வாய்ப்பினையும் வலுவையும் ஏற்படுத்துகின்றன. அதில் இலங்கை நீண்ட காலம் பயணித்து வெற்றி கண்டுவருகிறது. இதன் மூலம் இந்தியாவை பார்வையாளராக மாற்றியுள்ளது இலங்கையின் தந்திரம். இந்தியாவின் மௌனமும் அதனையே வெளிப்படுத்துகிறது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளும் அதன் செயல்பாட்டாளரும் அறிக்கை போராட்டத்தை மட்டுமே நம்பி செயல்படுகின்றனர். அல்லது அதுவே தமது செயல்பாடு என்று கருதுவது போல் தெரிகிறது. இதனை மாற்றாது வரையும் தமிழர் பிரச்சினையாக எந்த விடயமும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படாது. அனைத்து நாடுகளும் தமது நலனுக்கான அரசாங்கங்களாவே உள்ளன. தமிழரது நலனுக்காக எந்த அரசாங்கமும் செயல்படாது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடமேயே அத்தகைய தமிழர் நலன் பேணப்பட வேண்டும். அது சாத்தியப்படாத வரை ஜெனீவாக்கள் தமிழர் நோக்கில் தோற்றுக் கொண்டே இருக்கும். உலக அரசுகளின் நலன்கள் வெற்றியடையும்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியாபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE