Saturday 20th of April 2024 06:23:51 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையை அழிக்க லசந்தவின் மகள் முயற்சி! - அரசு குற்றச்சாட்டு!

இலங்கையை அழிக்க லசந்தவின் மகள் முயற்சி! - அரசு குற்றச்சாட்டு!


'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு இலங்கை அரசு நீதியைத் தராமல் மறுத்து வருகின்றது என அவரது மகள் அகிம்ஸா விக்கிரமதுங்க வொஷிங்டன் போஸ்ட் இதழுக்கு எழுதியிருந்த கட்டுரையை அரசு கடுமையாக விமர்சித்துள்ளது.

இலங்கைத் தலைவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிப்பதற்காக சர்வதேச சமூகத்தை திரட்டி இலங்கையை அழித்து அதன் வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு அகிம்ஸா விக்கிரமதுங்கவும் மேலும் பலரும் முயற்சிக்கின்றனர் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இதேவேளை, புலம்பெயர் குழுக்கள் மற்றும் எதிரணி அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில தரப்பினர் அகிம்ஸா விக்கிரமதுங்கவை இயக்குகின்றனர் என்று அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை சவால்களை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் லசந்தவின் மகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது துரதிஷ்டவசமானது.

குற்றவாளிகளை ஒருநாள் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி வழங்கும் முயற்சியில் அகிம்ஸா வெற்றி பெறுவதற்காக வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்" - என்றார்.

வொஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அகிம்ஸா விக்கிரமதுங்க எழுதியுள்ள கட்டுரையில்,

"2007 இல் பாதுகாப்புச் செயலாளராகக் கோட்டாபய ராஜபக்‌ச இருந்தபோது நடந்த ஆயுதக் கொள்வனவின்போது 10 மில்லியன் டொலர் ஊழல் நடந்திருப்பது பற்றி எனது தந்தை லசந்த விக்கிரமதுங்க வெளிப்படுத்தியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்‌ச அவரை அவதூறு குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் எனது தந்தையின் பதிப்பகம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

குறித்த ஆயுத ஊழல் தொடர்பில் எனது தந்தையிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவதற்கு சில வாரங்களே இருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி எனது தந்தை பணிக்குச் சென்று கொண்டிருக்கும்போது இராணுவப் புலனாய்வாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்‌சவையே அதற்கு நான் பொறுப்பாளியாக்குகின்றேன" - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ச ஜனாதிபதியாக வெற்றி பெற்று விட்டதால், தனது தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் முயற்சிகள் வெற்றியளிக்காத நிலை நீடிக்கின்றது எனவும் அந்தக் கட்டுரையில் அகிம்ஸா தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளும் சாட்சியங்களும் ராஐபக்‌ச அரசால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அகிம்ஸா தனது நீண்ட கட்டுரையில் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE