ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டத்தை நிறைவேற்றிய ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம்! - நா.யோகேந்திரநாதன்!
'துரதிஸ்டவசமாக அந்நிய முதலாளிகள் எங்கள் செலவிலேயே பெருமளவு எங்கள் நிலங்களைக் கொண்டு பொருளீட்டினர். எங்கள் அனுமதியின்றி இந்தியத் தொழிலாளர்களை இறக்குமதி செய்திருக்கின்றனர். இலங்கையினருக்கும் ஒன்பது இலட்சம் இந்தியப் பிரஜைகளைக் குறைக்காவிட்டால் எமது மக்கள் பிச்சையெடுப்பதிலிருந்தும் இலங்கையர் என்ற அடையாளத்தை இழப்பதிலிருந்தும் மீட்க முடியாத அபாயம் இருக்கிறது. இந்தியத் தொழிலாளர்களை நாடு கடத்த வேண்டுமென்று அன்றைய அரசாங்க சபையின் தலைவர் பரன் ஜெயதிலக்கவிடம் வலியுறுத்தினேன். அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. பின்னர் திரைசேரிக்குப் பொறுப்பான பிரிட்டிஷ் அதிகாரியான ஹுக்ஸ்ஹம் என்னுடைய திட்டத்தை ஏற்றுக் கொண்டார். நான் பிரதமரானதும் நேரு – கொத்தலாவலை ஒப்பந்தம் மூலம் அதை நிறைவேற்றிக் கொண்டேன்.
1953ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற நாடு பரந்த தொழிலாளர்களின் 'ஹர்த்தால்' போராட்டத்துக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் டட்லி சேனநாயக்க பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்பு அடுத்த பிரதமராகப் பதவியேற்று 1956 வரை பிரதமராயிருந்த முன்னாள் பிரித்தானிய இராணுவ அதிகாரியான சேர்.ஜோன்கொத்தலாவலை தனது சுயசரிதை நூலில் வெளியிட்ட கருத்துகள் இவை. அந்நிய முதலாளிகள் எங்கள் நிலங்களில் எங்கள் செலவிலேயே வருமானமீட்டியமைக்கான அவரின் கோபாவேசம் நியாயமானது.
அவர் அந்நிய முதலாளிகள் எங்கள் நிலங்களை எங்களிடமே தந்துவிட்டு வெளியேற வேண்டுமெனக் கோரியிருந்தால் அது நியாயமானதாயிருந்திருக்கும். ஆனால் அவரோ இந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்டுக் குறைந்த கூலியில், லயன் காம்பராக்களில் அடைத்து வைக்கப்பட்டு அடிமைகளாக வேலை வாங்கப்படும் அப்பாவி மலையக மக்களை வெளியேற்ற வேண்டுமென அழுத்தம் கொடுக்கிறார். அதாவது அவரும் அல்லது அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியும் தங்கள் இனக்குரோத நடவடிக்கைகளுக்குத் தேசியப் பற்று வர்ணம் பூசி வந்தமையை தெளிவுபடுத்துகின்றது. இது அடிப்படையில் சிங்கள மக்களின் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான உணர்வை மலையக மக்களுக்கு எதிராகத் திசை திருப்பி அந்நிய முதலாளிகளைப் பாதுகாக்கும் ஒரு அப்பட்டமான நயவஞ்சக நடவடிக்கையாகும்.இந்தக் கொத்தலாவலை நேரு ஒப்பந்தத்தின் நீட்சியே ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதும் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மலையக மக்கள் தாம் பிறந்து வளர்ந்த பூமியை விட்டு வெளியேற்றப்பட்டமையுமாகும்.
இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால் இலங்கை - இந்திய உறவுகள் தொடர்பாக விவாதிப்பதற்கென அப்போது பிரதமராயிருந்த சேர்.ஜோன் கொத்தலாவலைக்கு 30.10.1953ல் அழைப்பு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் 1954 ஜனவரியில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தியப் பிரதமருடன் சேர்.ஜோன் கொத்தலாவலை, டட்லி சேனநாயக்க, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆகியோர் பேச்சுகளில் கலந்து கொண்டனர். இறுதியில் 03.12.1954 அன்று நேரு – கொத்தலாவலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அதில் இந்தியாவிலிருந்து பாக்கு நீரிணை மூலம் சட்ட விரோதமாகக் குடியேறுதலை இரு நாடுகளும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் ஏற்கனவே இங்கு வசிப்பவர்களின் தேர்தல் இடாப்பில் பதிவு செய்யப்படாத 18 வயதுக்குக் கூடியோர் பதிவு செய்யப்படவேண்டுமெனவும், அப்படிப் பதிவு செய்யப்படாதவர்கள் நாடு கடத்தப்படுவர் எனவும் இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள மலையக மக்கள் தனியான பதிவேட்டில் பதிவு செய்யப்படவேண்டுமெனவும், ஒரு பிரிவில் மலையக மக்கள் 250க்குக் குறைவாக இருந்தால் தேசியப் பட்டியலில் பதிவு செய்யப்படுவர் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இது மலையக மக்களைச் சிங்களவர்களாக மாற்றும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டது எனச் சில ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதில் முக்கியமான அம்சம் ஐ.தே.கட்சி அரசு இவ்வொப்பந்தத்துக்கு அமைய எந்தவொரு மலையகப் பிரஜைக்கும் பிரஜாவுரிமை வழங்கவில்லை. நேருவின் இறப்பின் பின் கள்ளத் தோணிகள்! என்ற பேரில் மலையக மக்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.
1956 ஆட்சி மாற்றத்துடன் நேரு – கொத்தலாவல ஒப்பந்தம் முற்றாகவே கிடப்பில் போடப்பட்டது. ஆனால் சட்ட விரோதக் குடியேற்றங்களைத் தடுக்கவென வடக்கில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் எதுவும் அகற்றப்படவில்லை.
1962ல் இராணுவச் சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்புக்கு மேற்கொள்ளப்பட்ட திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீமாவோ தன் கணவர் தொடக்கி வைத்த சர்வதேச அரசியல் நகர்வுகளைத் தொடர ஆரம்பித்தார். மேற்கு நாடுகள் தங்கள் தேசியக் கொள்கைகளுக்கு எதிராகவே எப்போதும் செயற்படும் என்பதால் சீனாவுடனான உறவுகளை வளர்க்க ஆரம்பித்தார்.
அவ்வகையில் சீனாவுக்கும் இலங்கைக்குமிடையேயான கடற்படை ஒப்பந்தம் கைச்சாத்தானது. அது மட்டுமின்றி இந்திய – சீன எல்லைப் போரின் போது இலங்கை எப்பக்கமும் சாயாமல் நடுநிலைமை வகித்தமை இந்தியாவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.
இந்தியா தனது எல்லையில் எதிரி நாடான சீனாவுக்கு ஆதரவான ஒரு சக்தி உருவாவதைத் தடுக்கும் வகையில் காய்களை நகர்த்த ஆரம்பித்தது.
17.03.1964ல் நேரு இறந்ததையடுத்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அவர் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த நேரு – கொத்தலாவலை ஒப்பந்தத்தைத் தூசு தட்டி கையில் எடுத்துக்கொண்டார்.
அவ்வகையில் மலையக மக்களின் எதிர்காலம் பற்றிப் பேச இந்திய அரசால் இலங்கைக்கு 22.10.1964ல் அழைப்பு விடுக்கப்பட்டது.
தொழிற் சங்கங்களின் கூட்டுக் கமிட்டி 21 கோரிக்கைகளை முன் வைத்து நாடு பரந்தளவில் போராட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது அதற்குத் தலைமை தாங்கிய இடதுசாரி ஐக்கிய முன்னணியை உடைத்துக்கொண்டு சமசமாஜக் கட்சித் தலைவர் என்.எம்.பெரேரா அரசாங்கத்தில் இணைந்து 11.06.1964ல் நிதியமைச்சராகப் பதவியேற்றார். அதன் காரணமாக சமசமாஜக் கட்சி, எம்.ஈ.பி. ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பின்வாங்கியமையால் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கமுடியவில்லை.
தொழிலாளர்கள் போராட்டத்தால் அரசுக்கு வரவிருந்த மூன்றாவது கண்டம் தவிர்க்கப்பட்டாலும் தொழிலாளர்கள் மத்தியிலும் சாதாரண மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு தோற்றுவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய பெரும் எதிர்ப்பைத் திசை திருப்ப ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் மலையக மக்களின் பிரச்சினையைக் கையிலெடுக்கத் தீர்மானித்தது.
எனவே இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் அழைப்பை ஏற்று திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ரி.பி.இலங்கரத்தின ஆகியோரைக் கொண்ட குழுவினர் இந்தியா புறப்பட்டனர். தொடர்ந்து 6 நாட்கள் இடம்பெற்ற பேச்சுகளை அடுத்து 29.10.1964 ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில் நாம் ஒரு முக்கிய விடயத்தை அவதானிக்கவேண்டும். என்.எம்.பெரேரா அப்போது அமைச்சரவையில் ஒரு சக்தி வாய்ந்த அமைச்சராக இணைந்திருந்தார். 1948ல் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபோது அவர்கள் தங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள். எனவே அவர் இத்தூதுக் குழுவில் கலந்து கொண்டு மலையக மக்களுக்குச் சாதகமான முறையில் இலங்கைக் குழுவினரை வழி நடத்தியிருக்கவேண்டும். அப்படியான வாய்ப்பிருந்தும் அவர் அம்முயற்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அது மட்டுமின்றி சமசமாஜிகள் அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகக் குரலெழுப்பவில்லை.
சமசமாஜக் கட்சியினர் ஒரு காலத்தில் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து எனக் குரல் கொடுத்து விட்டுப் பின் தனிச் சிங்களத்தை ஏற்றனரோ, எவ்வாறு அமைச்சுப் பதவிக்காக இடதுசாரி ஐக்கிய முன்னணியை உடைத்து தொழிலாள வர்க்கத்தின் பேரெழுச்சியை மழுங்கடித்தனரோ அவ்வாறே அவர்கள் மலையக மக்களுக்குத் துரோகம் செய்யவும் தயங்கவில்லை.
இவர்களைப் போன்றே சண்முகதாசன் அணியைச் சேர்ந்த சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர்ந்த இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் தம்மைத்தாமே விற்று மக்கள் விரோத நிலைப்பாட்டை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மலையக மக்களின் மிகப் பெரும் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடனோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாப் அஸீஸ் தலைமையிலான ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸுடனோ, சண்முகதாசன் தலைமையிலான செங்கொடிச் சங்கத்துடனோ தமிழரசுக் கட்சியின் தலைமையிலான தோட்டத் தொழிலாளர் கழகத்துடனோ எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படாமலே அவ்வொப்பந்தம் கைச்சாத்தானது. அதாவது இவ்வொப்பந்தம் இலங்கை - இந்திய அரசுகளால் மலையக மக்கள் மேல் திணிக்கப்பட்டது.
அப்போது மலையகத்தில் 9 இலட்சத்து 75,000 பேர் நாடற்ற மக்களாக வாழ்ந்து வந்தனர். இவர்களில் 5 இலட்சத்து 25,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதென்றும் 3 இலட்சம் பேரை இலங்கை ஏற்றுக்கொள்வதெனவும் இவ்வொப்பந்தம் மூலம் இணக்கம் காணப்பட்டது. மிகுதி ஒன்றரை இலட்சம் பேர் பற்றிப் பின்பு பேசித் தீர்க்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
1948ம் ஆண்டு மலையக மக்களை நாடற்றவர்களாக்கியது தொடக்கம் நேரு – கொத்தலாவலை ஒப்பந்தம் உட்பட மலையக மக்களுக்கு எதிராகவும் அவர்களை இலங்கையை விட்டு வெளியேற்றவும் ஐ.தே.கட்சி மேற்கொண்ட திட்டங்களுக்கு ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் திட்டவட்டமான வடிவத்தைக் கொடுத்தது.
இது தொடர்பாகத் தொண்டமான் கருத்து வெளியிடும்போது 'இது மக்களை வைத்து நடத்திய குதிரைப் பேரம்' எனத் தெரிவித்திருந்தார். அதேவேளையில் தமிழரசுக் கட்சித்தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 'அதிகார விளையாட்டில் ஒரு மில்லியன் மக்கள் பகடைக் காய்கள் ஆக்கப்படுகின்றனர்' எனக் கண்டனம் செய்திருந்தார்.
ஆனால் 1965ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐ.தே.கட்சி தலைமையிலான ஆட்சியில் பங்காளிகளாக இருந்த இருவரும் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அதை ஆதரித்து வாக்களித்தமை குறிப்பிடத் தக்கது. இவர்களைப் பொறுத்தவரை எப்போதுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டு வரும் விடயங்கள் தீயவையாகத் தெரியவருவதும், அதையே ஐக்கிய தேசியக் கட்சிகொண்டுவரும் போது நல்லவையாக மாறிவிடுவதும் ஒரு எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது.
1948ல் ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்பட்ட நாடற்றவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டதன் மூலமும். 5 இலட்சத்து 25,000 தமிழர்களை நாடு கடத்த ஏற்பாடு செய்ததன் மூலமும் தொழிலாளர் போராட்டங்கள், வாழ்க்கைச் செலவு உயர்வு என்பனவற்றால் சரிந்திருந்த தனது செல்வாக்கை சிங்கள மக்களிடம் நிமிர்;த்திவிட முடியுமென திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நம்பினார். அடுத்த கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வலிமையான பிரசார ஊடகமும், ஏகாதிபத்திய சார்புக் கருத்துகளை மக்களிடையே விதைப்பதுமான 'ஏரிக்கரை' பத்திரிகை (லேக் ஹவுஸ்) தேசிய மயமாகும் முயற்சிகளில் இறங்கினார் ஸ்ரீமாவோ அம்மையார்.
பிரம்மஞான சங்கத்தால் நடத்தப்பட்டு வந்த 'சரசவி சந்தரெச' பத்திரிகையின் ஆசிரியராக 1903ல் பதவியேற்ற எச்.என்.பெரேரா சிங்கள பௌத்த மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட அப்பத்திரிகையை அநகாரிக தர்மபாலவின் கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் முஸ்லிம்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கு எதிரான சாதனமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதன் காரணமாக 1908ல் அதைவிட்டு வெளியேற்றப்பட்ட அவர் டி.பி.ஜெயதிலக்கவுடன் இணைந்து 'தினமின' பத்திரிகையை ஆரம்பித்தார். சில காலத்தில் டி.ஆர்.விஜயவர்த்தன அதை விலைக்கு வாங்கினார். அதன் பின் தினகரன் என்ற தமிழ் பத்திரிகையும் டெய்லி நியூஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஏனைய பல பத்திரிகைகளையும் விழுங்கிவிட்டு பெரு விருட்சமாக வளர்ந்து விட்டது.
இது ஐக்கிய தேசியக் கட்சியின் வலுவான ஊடக ஆயுதமாகப் பயன்பட்டதுடன் இனக் கலவரங்களின் போது அவற்றை ஊக்குவிப்பதில் அவை முக்கிய பங்கு வகித்தன.
03.11.1964 அன்று சிம்மாசனப் பிரசங்கத்தின்போது 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தைத் தேசிய மயமாக்கும் பிரேரணை முன் வைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அரசாங்கத்தின் சார்பில் கொல்வின் ஆர்.டி.சில்வா தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அமிர்தலிங்கம், வி.என். நவரத்தினம், துரைரத்தினம் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு அதை நிராகரித்து எதிர்த்து வாக்களிப்பதென முடிவு செய்தது.
மேற்படி பிரேரணையின்போது அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த சி.பி.டி.சில்வா தலைமையிலான 13 பேர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர். அதன் காரணமாகப் பிரேரணைக்கு ஆதரவாக 73 பேரும் எதிராக 74 பேரும் வாக்களிக்கப் பிரேரணை தோல்வியடைந்தது.
அரசாங்கம் உடனே பதவி விலகவில்லை. கொல்வின் ஆர்.டி.சில்வா மீண்டும் அமிர்தலிங்கத்தைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றத் தயார் எனக் கூறி ஆதரவு கோரினார். அமிர்தலிங்கம் ஸ்ரீலங்கா சுதந்தி;ரக் கட்சியை நம்பமுடியாதெனக் கூறி ஆதரவு வழங்க மறுத்துவிட்டார்.
அதையடுத்து டிசம்பர் 7ம் திகதி பிரதமர் ராஜினாமாச் செய்ததுடன் அரசாங்கம் கலைக்கப்பட்டது.
தமிழ் மக்களின் சத்தியாக்கிரகப் போராட்டம், இராணுவப் புரட்சி என தொழிலாளர்களின் 21 அம்சக் கோரிக்கை என மூன்று கண்டங்களை வெற்றிகரமாகத் தாண்டி வந்த ஸ்ரீமாவோ தலைமையிலான ஆட்சி நான்காவது கண்டத்தில் அதாவது லேக் ஹவுஸ் தேசிய மயத்தில் கவிழ்ந்து வீழ்ந்தது. இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் உரிமைக் குரலுக்கு மதிப்பளிக்காமையும் என்.எம்.பெரேரா போன்ற இடதுசாரிகளின் துரோகத்திற்கும் விழுந்த அடியாகவே கருதவேண்டியுள்ளது.
தொடரும்.....
அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை