Wednesday 24th of April 2024 11:25:35 AM GMT

LANGUAGE - TAMIL
.
ராஜபக்ச தரப்பின் பின்னணியில் யாழ். மாநகர சபையை கலைக்க சதி! - மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் குற்றச்சாட்டு!

ராஜபக்ச தரப்பின் பின்னணியில் யாழ். மாநகர சபையை கலைக்க சதி! - மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் குற்றச்சாட்டு!


பல இலட்சம் ரூபா செலவு செய்து ராஜபக்ச தரப்பின் பின்னணியில் யாழ். மாநகர சபையை கலைப்பதற்கு சதி நடப்பதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநகர சபை செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மாநகர சபையை கலைக்கும் முயற்சி பெருத்த செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாநகர சபை முதல்வராகிய எனது பதவி மற்றும் ஆதரவான உறுப்பினர்களது பதவிகளை பறிப்பதன் மூலம் மாநகர சபையை கலைக்கின்ற செயல்பாடாகும்.

மாநகர சபை முதல்வர் பதவியை நான் இழக்கின்ற சந்தரப்பத்தில் மாநகரசபை கலையும். இது ராஜபக்ச தரப்பு விரும்பிய அல்லது அவர்களது நிகழ்ச்சி நிரல். அவர்கள் விரும்புகின்ற செயற்பாடும் அதுவே.

யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தை பொறுப்பெடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்ற போது அதற்கு தடையாக நாங்கள் இருக்கின்றமையால் ராஜபக்ச தரப்பு கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து எங்களை பதவியில் இருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பாக என்னை மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்குவதற்காக வழக்குகளிலே ஈடுபட்டு வருகிறது.

இந்த செயல்பாடுகளுக்கு எதிராக நாங்கள் கடுமையாகப் போராடி வருகின்றோம்.

இந்த செயற்பாடுகளுக்காக கிட்டத்தட்ட ஐம்பது இலட்ச்திற்கு மேல் வழக்கு நடவடிக்கைகளுக்காக இதுவரை செலவு செய்துள்ளார்கள்.

இவ்வாறு யாழ். மாநகர சபையை கலைப்பதன் ஊடாக அதனை தங்களது நேரடியான ஆளுகைக்குள் கையகப்படுத்தி மாநகர சபையின் பெரும் சொத்தாக கருதப்படுகின்ற யாழ். பண்பாட்டு மையத்தை தங்களுடைய கட்டுப்பாடடிற்குள் எடுப்பதற்கு முயற்சித்து வருகின்றார்கள்.

அவர்களின் இந்த முயற்சிக்கு யாழ். மாநகர சபை தடையாக இருக்கின்ற காரணத்தினால் ராஜபக்ச தரப்பு எங்களை பதவியில் இருந்து அகற்றுவதற்காக பெரும் எடுப்பிலே பணத்தை செலவழிக்கின்றார்கள் என்று நான் கருதுகின்றேன் என்றார்.

இவ்வாறான முயற்சியை நேரடியாக செய்கின்றார்களா, அல்லது வேறு நபர்களை வவைத்து செய்கின்றார்களா என எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையில்,

குறித்த வழக்கை நடத்துவதற்கு சிலரை வைத்துள்ளார்கள். எங்களுடைய கட்சியில் உள்ள அவர்களுக்கு விசுவாசமாக இருக்கின்ற, அவர்களுடைய நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டு துரதிஸ்டவசமாக இனத்தை அழிப்பதற்கான அல்லது இனத்தை பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் சில நபர்கள் ஊடாகவே இதனைச் செய்கின்றார்கள்.

2019 இலே ராஜபக்ச தரப்பு வெல்ல வேண்டுமென்று துடித்தவர்கள் இதனைச் செய்கின்றார்கள் என யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்திருதார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE