Wednesday 21st of April 2021 04:23:48 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஜே.ஆர்.ஜயவர்த்தன பூட்டிய விலங்கை ஆயுதமாக்கும் சிங்கள ராஜதந்திரம்! - நா.யோகேந்திரநாதன்!

ஜே.ஆர்.ஜயவர்த்தன பூட்டிய விலங்கை ஆயுதமாக்கும் சிங்கள ராஜதந்திரம்! - நா.யோகேந்திரநாதன்!


இந்திய பிராந்திய வல்லரசுக்கெதிராக எந்த வழிமுறை மூலம் இந்தியா சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படுகிறதோ, அதேமுறையில் காந்தீய வழியில் போராடி அன்னை பூபதி உயிர் நீத்த குருஷேத்திரப் போர்க்களம் தான் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம். அவர் அந்தப் போரைத் தனி ஒரு பெண்ணாக உணவை ஒறுத்து நடத்திய போதிலும் அவர் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் விடுதலை வேட்கையின் கூர்முனையாகக் களமாடினார். அதன் காரணமாகவே அவர் போராட்டத்தை ஆரம்பித்த நாள் முதல் அவரைச் சுற்றி ஆயிரமாயிரமாக எமது மக்கள் அணிதிரண்டர். இந்திய அமைதிப் படையினரின் அச்சுறுத்தல்களோ, அவர்களால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளோ அவரது போராட்டத்தையோ, அவரைச் சுற்றி மக்கள் ஆயிரக் கணக்கில் அணிதிரள்வதையோ தடுத்து நிறுத்தி விடமுடியவில்லை.

அவரின் வீரச்சாவு இந்தியப் பிராந்திய வல்லரசின் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்தியது மட்டுமன்றி இந்திய இராணுவம் எமது மண்ணிலிருந்து விரட்டப்படவேண்டிய தேவைக்கு உரமூட்டியது. இறுதியில் இந்திய இராணுவம் எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட எடுத்த முயற்சிகளில் படுதோல்வியடைந்து நாட்டைவிட்டு அவமானத்துடன் வெளியேற வேண்டிய நிலை எழுந்தது.

அன்னைபூபதி களமாடிய அந்த மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தற்சமயம் மீண்டும் ஒரு களமுனை திறக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைப் பேரணி எழுச்சிப் பேரவையால் அங்கு சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது இலங்கை அரசுடனோ அல்லது வேறு எந்தப் பிராந்திய மேலாதிக்க சக்திகளுடனோ மோதும் போராட்டமல்ல. எமது பிரச்சினைகளை நேர்மையான முறையில் எவ்வித விட்டுக்கொடுப்புகளுக்கோ சறுக்கல்களுக்கோ இடமின்றி சர்வதேச நாடுகள் கையாண்டு எமக்கு நீதியைப் பெற்றுத் தரவேண்டுமென உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டம் அது. ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்படும் தீர்மானம் மூலம் இலங்கையின் போர்க்குற்ற, மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தொடர்பாகச் சர்வதேசப் பொறிமுறை மூலம் நீதி எட்டப்படவேண்டுமெனக் கோரும் போராட்டம்.

அதே கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய முன்றலில் இன்னுமொரு களமுனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சிவில் அமைப்புகள், மதகுருமார் ஆதரவுடன் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமாகத் திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சிப் பேரணி எமது கோரிக்கைகளை உலகின் காதில் ஓங்கி ஒலிப்பதிலும் தமிழ் மக்களை ஒரே அணியாகத் திரட்டுவதிலும் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூரிலும் மட்டக்களப்பு மாமாங்கத்திலும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் எமது உரிமைகள் கிட்டும்வரை நாம் ஓயப்போவதில்லையென்ற செய்தியை உலகின் காதில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

ஜெனீவாவில் 46வது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் பச்லெட் அம்மையார் இலங்கை தொடர்பாக முன்வைத்த அறிக்கை மிகவும் காத்திரமானதும், இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பனவற்றுக்கு நீதியை நிலைநாட்டும் வகையிலும் இலங்கையின் இராணுவ மயமாக்கல் தொடர்பாகவும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்ததுடன் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

அதையடுத்து பிரிட்டனின் தலைமையில் 5 நாடுகள் இலங்கை தொடர்பான ஒரு தீர்மான முன் வரைவை முன் வைத்தன. அதில் இலங்கை பொறுப்புக் கூறல் விடயங்களில் போதிய அக்கறை காட்டவில்லையெனக் கண்டனம் செய்யப்பட்டிருந்த போதிலும் ஆணையாளரின் அறிக்கையில் உறுப்பு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தத்தமது நாட்டு நீதித்துறை மூலம் விசாரணைகளை நடத்திக் குற்றவாளிகளின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், அவர்களுக்குப் பயணத்தடை விதிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்;ட விடயம் பற்றி முன்வரைவில் எதுவும் கூறப்படவில்லை. மேலும் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் பதினெட்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படவேண்டுமென்பது பற்றியும் கூறப்பட்டிருந்தது.

எனவே இம்முன்வரைவு தமிழ் மக்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையிலும் எதிர்ப்பார்ப்புகள் நிறைவு செய்யப்படாத வகையில் ஏமாற்றமளிப்பதாகவும் அமைந்திருந்தது. சர்வதேச நாடுகளின் நேரடித் தலையீடின்றி இலங்கை நீதியை நிலைநாட்டுவது சாத்தியமில்லையென்பது போர் முடிந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் சந்தித்த அனுபவங்களாகும்.

இந்த நிலையிலேயே இலங்கை தொடர்பான போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன சர்வதேசப் பொறிமுறை மூலம் கையாளப்பட்டு தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்படவேண்டுமெனக் கோரி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி இடம்பெற்றதுடன், தற்சமயம் மாமாங்கம், நல்லூர் ஆகிய இடங்களில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் பல நெருக்கடிகளைச் சந்தித்த போதிலும் தங்களுக்கு எதிராக ஜெனீவாவில் முன் வைக்கப்படக்கூடிய தீர்மானத்தை தோற்கடிக்கும் வகையில் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனா, பாகிஸ்தான் உட்பட 21 நாடுகளின் ஆதரவை இலங்கை பெற்றுள்ளதாகக் கூறப்படும் அதேவேளையில் இந்தியாவின் ஆதரவைப் பெறவும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் என்பனவற்றை வைத்தே இலங்கை சீனா பக்கம் முழுமையாகச் சாய்ந்து விடுவதையும் இலங்கை சீனாவின் இந்து சமுத்திர மேலாதிக்கக் கொள்கையின் கேந்திரமாக மாறுவதையும் தடுப்பதற்கு மேற்கு நாடுகளும் இந்தியாவும் முயன்று வருகின்றன. அவற்றின் மூலமே இலங்கை மீது பொருளாதாரத் தடை போன்ற நெருக்கடிகளை ஏற்படுத்தி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியுமென எதிர்பார்க்கப்பட்டது.

1977ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்கு வந்தபின்பு ஏற்கனவே திருமதி ஸ்ரீமாவோ பண்டாநாயக்க ஆட்சியில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் வளர்ச்சியைச் சிதைத்து திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுலாக்கி சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்கினார். அதன் காரணமாக பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையில் ஏராளமான உற்பத்தி நிலையங்களை உருவாக்கின. அதன் மூலம் இலங்கையின் பிரதான வருமானம் தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி, சுற்றுலாத்துறை என்பனவாக மாறிவிட்டன.

எனவே இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளின் மீதான தங்கு நிலைப் பொருளாதாரமாக மாறியது. எனவே இலங்கையில் எந்தகைய ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட மேற்குலகப் பொருளாதாரத்திலேயே தங்கி நிற்கவேண்டியளவும் இலங்கைக்குக் கழற்ற முடியாத விலங்கு போடப்பட்டது. அதன் காரணமாகவே 1995ல் திருமதி சந்திரிகா அம்மையார் ஆட்சிக்கு வந்தபோதும் ஜே.ஆர்.இறுக்கிய பொருளாதார விலங்கிலிருந்து வெளியே வரமுடியவில்லை.

தற்சமயம் கூட இலங்கையின் தேசிய வருமானத்தின் 45 வீதம் ஆடை ஏற்றுமதியாகவே உள்ளது. அதிலும் 25 வீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே இலங்கை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் முதலிய நாடுகளின் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டால் பொருளாதாரத் தடை ஜி.எஸ்.பி. வரிச் சலுகை நிறுத்தம் போன்ற நெருக்கடிகளை உருவாக்கமுடியுமெனவும் அதற்கு போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் என்பனவே வெளிப்படையான காரணங்களாக முன் வைக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜே.ஆர்.ஜயவர்த்தன போட்ட பூட்டை இப்போது இலங்கை அரசு மேற்கு நாடுகளுக்கு எதிராகவே பயன்படுத்துவது தான் சிங்கள ராஜதந்திரியின் வெற்றியாகும்.

இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்ட பல்தேசிய நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இவற்றுக்கான இயந்திரங்களும் துணிகள், நூல்கள் போன்ற மூலப் பொருட்களும் அந்த நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்களை அந்த நிறுவனங்கள் அனுமதிக்கப் போவதில்லை.

எனவேதான் மேற்கு நாடுகளுக்கு எதிராக இலங்கை ஜெனீவாவில் போர்க் கொடி தூக்கியுள்ளதுடன் தனக்குச் சார்பாகச் சில நாடுகளை அணி திரட்டியும் வருகிறது.

அதன் காரணமாகவே எமது போராட்டங்களும் மேலும் வலிமையுடையவையாகத் தொடரப்படவேண்டும். எமது போராட்டங்களே மேற்கு நாடுகளின் தளம்பல் நிலையை போக்கி உறுதியான நிலைப்பாட்டை எடுக்க நிர்ப்பந்திக்கும் என்பது முக்கியமான விடயமாகும்.

தற்சமயம், எமது மக்களின் அயராத போராட்டங்கள் காரணமாகவும் இலங்கை அரசு தனது குற்றங்களை நியாயப்படுத்த எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக ஏற்கனவே பிரிட்டன் முன்வைத்த தீர்மானத்தில் தமிழ் மக்களுக்கும் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

அண்மையில் அமெரிக்கா போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பனவற்றுடன் தொடர்புபட்டவர்கள் நாடு கடத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள், பிரிட்டனின் முன் வரைவின் வார்த்தைப் பிரயோகங்கள் கடுமையாக்கப்பட வேண்டுமெனவும் இறுக்கமாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆதரவுடன் இலங்கை இத்தீர்மானத்தைத் தோற்கடித்துவிட முடியுமென இலங்கை நம்புகிறது. இந்தியா இவ்விடயத்தில் மௌனம் காத்த போதிலும் நடுநிலைமை வகிக்குமென்றே கருதப்படுகிறது.

எப்படியிருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு நீதி கோரி இலங்கையில் இடம்பெறும் மக்கள் மயப்பட்ட போராட்டங்களுக்கும் அப்போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் வழங்கும் ஆதரவும் லண்டனின் அம்பிகா அம்மையார் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம், ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆர்ப்பாட்டம், சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் வலுவான முயற்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து எமக்குக் காத்திரமான சூழலை ஏற்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் உள்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களே எமது உரிமைகளை வென்றெடுப்பதில் அடிப்படையானவை என்பதும் ஏனைய துணை அம்சங்கள் எமது போராட்டங்களின் வலிமை காரணமாகவே அவை மேலும் சக்தி பெறும் என்பதும் உணரப்படவேண்டும். எனவே எமது போராட்டங்களுக்குள் அரசியல் உள்நோக்கம் கொண்ட அந்நிய உளவு நிறுவனங்களின் முகவர்கள், ஊடுருவ விடாமலும் திசை திருப்பி விடாமலும் நாம் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாயிருக்கவேண்டும்.

ஜே.ஆர்.ஜயவர்த்தன போட்ட விலங்கையே சிங்கள ராஜதந்திரத்தால் முறியடிக்க முயற்சிகள் எடுக்கப்படும்போது எமது ஐக்கியத்தாலும் போராட்ட உறுதியாலும் அந்த ராஜதந்திரத்தை முறியடிக்க முடியும் என்ற வலுவான உண்மை உணரப்படவேண்டும்.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்.

09.03.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், நல்லூர்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE