Wednesday 21st of April 2021 05:31:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 46 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 46 (வரலாற்றுத் தொடர்)


ஐக்கிய தேசியக் கட்சியை அரியணை ஏற்றிய தமிழ் அரசியல் தலைமைகள்! - நா.யோகேந்திரநாதன்!

'நான் பிரதமராயிருக்கும்வரை தமிழ் மொழியும் பண்பாடும் என்றுமே பாதிக்கப்படமாட்டாது எனத் தமிழ் மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இலங்கை போன்ற பல் தேசிய நாடொன்றில் பல்வேறு குழுக்களின் கலாசாரத்தையும் மொழியையும் பேணிப் பாதுகாப்பது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் என்பதை நீங்களும் என்னுடன் சேர்ந்து ஏற்றுக்கொள்வீர்கள். சுதந்திரத்தின் கனிகளை நாம் அனுபவிக்க வேண்டுமானால் இந்த இன ஐக்கியம் பேணப்படவேண்டும். நான் இலகுவில் வாக்குக்கொடுக்கமாட்டேன். கொடுத்தால் நிறைவேற்றத் தவறமாட்டேன்'.

இது 1966ம் ஆண்டு ஜூன் மாதம் கல்முனையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டின் இறுதி நாளன்று பங்கு கொண்ட அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்க ஆற்றிய உரையில் தமிழ் மக்களின் பலத்த கரகோஷத்தின் மத்தியில் வெளியிட்ட வாக்குறுதியாகும்.

ஒரு கட்சியின் வருடாந்த மாநாட்டில் ஒரு நாட்டின் தலைவர் பங்கு கொண்டு சிறப்புரையாற்றும் வழமை அது காலவரை இருந்ததில்லை. அத்தகைய மரபு மீறலுக்கு டட்லி சேனநாயக்க மீது தமிழரசுக் கட்சியினர் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையே காரணமெனக் கருதப்பட்டது. ஆனால் அதுவரை நடந்த சம்பவங்களையும் அதன் பின்பு இடம்பெற்ற சம்பவங்களையும் அலசிப் பார்க்கும்போது அம்மரபு மீறல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே நிலவிய உள்ளார்ந்த உறவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது என நம்ப வேண்டியுள்ளது.

அதுமட்டுமின்றி 1966 செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கு அளிக்கப்பட்ட பெரும் வரவேற்பில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திரண்டிருந்ததுடன் எல்லாவற்றிலும் ஒருவருடன் ஒருவர் முரண்படும் தமிழரசுக் கட்சியினரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்தே இந்த வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தனர். அதுமட்டுமின்றி அந்த நிகழ்வின்போது இலங்கையின் தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. 1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு தேசியக் கொடியைத் தமிழரசுக் கட்சியினர் பகிஷ்கரித்து வந்தனர் என்பதும் திருமலையில் தேசியக் கொடியை இறக்க முயன்ற நடராசன் 1957ல் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது திருமலை நடராசனின் உயிர்த் தியாகம் ஐ.தே.கட்சி, தமிழரசுக் கட்சி நல்லுறவில் கால்களில் போட்டு மிதிக்கப்பட்டது.

03.12.1964ல் சிம்மாசனப் பிரசங்கத்தின்போது பிரேரிக்கப்பட்ட 'லேக் ஹவுஸ்' பத்திரிகை நிறுவனத்தைத் தேசிய மயமாக்கும் தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் டிசம்பர் 7ம் நாள் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் கலைக்கப்பட்டது.

22.03.1965ல் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 66 ஆசனங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 41 ஆசனங்களிலும் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களிலும் தமிழ்க் காங்கிரஸ் 3 ஆசனங்களிலும் சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி 3 ஆசனங்களிலும் வெற்றி பெற்றன. அதன் காரணமாக எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க போதியளவு பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில் லேக் ஹவுஸ் நிறுவனத்தைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்த கட்சிகளின் ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெற்றுக்கொடுக்க அதன் நிர்வாக இயக்குனரான எஸ்மண்ட் விக்கிரமசிங்ஹ களமிறங்கினார்.

அவர் யாழ்ப்பாணம் வந்து தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தைச் சந்தித்து ஐ.தே.கட்சி ஆட்சியமைப்பதற்கான ஆதரவைக் கோரினார். செல்வநாயகத்தால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எஸ்மண்ட் விக்கிரமசிங்ஹ சம்மதம் தேரிவித்ததையடுத்து கொழும்பில் டட்லி தலைமையில் ஐ.தே.கட்சியினருக்கும் செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினருக்குமிடையே பேச்சுகள் இடம்பெற்றன. அதன்படி வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழி, நீதிமன்ற மொழி என்பன தமிழாக இருக்கவேண்டுமெனவும் மாவட்ட சபைகள் அமைக்கப்படவேண்டுமெனவும் அவற்றின் அதிகாரங்கள் பற்றிப் பின்னர் பேசித் தீர்மானிக்கப்படுமெனவும், தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படக்கூடாதெனவும் தமிழ் அரசாங்க ஊழியர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டுமெனவும் உடன்பாடு எட்டப்பட்டது. அவ்வுடன்பாட்டின் அடிப்படையில் டட்லி, செல்வா ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில் ஐ.தே.கட்சி தலைமையில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, சி.பி.டி.சில்வா, பிலிப் குணவர்த்தன. தஹநாயக்க, கே.எம். ராஜரத்தின ஆகியோரின் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் என்ற பேரில் 7 கட்சிக் கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியினர் உள்நாட்டு அமைச்சர் பதவியைக் கோரியிருந்த போதிலும் அது டபிள்யூ.தஹநாயக்கவுக்கு வழங்கப்பட்டு, தமிழரசுக் கட்சியின் சார்பில் திருச்செல்வத்துக்கு உள்ளுராட்சி சபைகள் அமைச்சு வழங்கப்பட்டது. சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1965ல் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி என அன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் ஐக்கிய தேசியக் கட்சியை அரியணையேற்றிய துடன் அதில் தாமும் பங்காளிகளாகினர்.

அதையடுத்தே 1965 ஜூன் மாதம் கல்முனையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் டட்லி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதும், அங்கு அவர் மக்களிடம் நேரடியாகவே வாக்குறுதிகளை வழங்கியமையும் இடம்பெற்றன. அவ்வடிப்படையிலேயே 1965 செப்டெம்பரில் யாழ்ப்பாணத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு டட்லி சேனநாயக்கவுக்கும் அவரது அமைச்சர்களுக்கும் பெரும் வரவேற்பளித்தனர்.

1956ல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட காலம் தொடக்கம் இலங்கையின் சுதந்திர தினத்தைத் தமிழரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கமைய பகிஷ்கரித்து வந்ததுடன் தமிழ் மக்கள் கறுப்புக் கொடிகளை ஏற்றி அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து வந்தனர். 1965ல் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்த பின்பு 1966ல் இலங்கையின் சுதந்திர தினத்தை வெகுவிமரிசை யாகக் கொண்டாடினர். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை ஆரம்பித்து வைத்தார்.

1957ல் திருமலையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியை இறக்க முயன்ற திருமலை நடராசன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மொழியுரிமை பறிக் கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தன் உயிரை அர்ப்பணித்தார். அவரின் தியாகத்தைத் தேர்தல் மேடைகளில் முழங்கி வாக்குச் சேகரிக்கும் தமிழரசுக் கட்சியினரோ மொழிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாத நிலையிலும் அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறி தாமே தங்கள் கையால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். திருமலை நடராசனின் தியாகம் தமிழரசுக் கட்சியினராலேயே அர்த்தமிழக்கச் செய்யப்பட்டது.

அவை மட்டுமின்றி 1965 - 1970 காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு விரோதமான பல நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாதது மட்டுமின்றி அவற்றுக்கு ஆதரவையும் வழங்கி வந்தனர்.

அவற்றில் வடக்கில் இடம்பெற்ற இரு முக்கிய விடயங்களைக் குறிப்பிடலாம்.

1966ம் ஆண்டு சர்வதேசத் தொழிலாளர் நாளான 'மே தினம்' ஒரு 'போயா' நாளன்று வந்தது. எனவே ஐ.தே.கட்சி, தமிழரசுக் கூட்டரசாங்கம் மே 1ம் திகதியன்று மே தின நிகழ்வுகளை நடத்தக் கூடாதெனத் தடை விதித்தது.

உலகம் முழுவதுமே தொழிலாள வர்க்கம் மே தினத்தைக் கொண்டாடும்போது இலங்கையில் மட்டும் வேறு ஒரு நாளில் கொண்டாடுவது பொருத்தமற்றதெனவே தொழிற்சங்கங்கள் முடிவெடுத் தன.

அவ்வகையில் சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தடையை மீறி மே முதல் நாளிலேயே மே தினக் கொண்டாட்டங்களை நடத்துவதென முடிவு செய்தன.

யாழ்.நகரமெங்கும் பலத்த பொலிஸ் காவல் போடப்பட்டதுடன் கடுமையான ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

பிற்பகல் படக்காட்சி முடிவடையும் நேரம் எவரும் எதிர்பாராத விதமாக ராஜா, வின்ஸர் பாடமாளிகைகளுக்குள்ளிருந்து செங்கொடிகளை ஏந்தியவாறே கோஷமிட்டு வெளிவந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் பெரிய உணர்வெழுச்சியுடன் ஊர்வலத்தை ஆரம்பித்தனர். ஊர்வலம் ஸ்ரான்லி வீதியூடாக சென்று ஆஸ்பத்திரி வீதியை வந்தடைந்து பஸ் நிலையத்தையும் கடந்து சத்திரம் சந்தி நோக்கி நகர்ந்தது. ஏறக்குறைய 100 பேருடன் ஆரம்பமான ஊர்வலம், ஓடைகளுக்குள்ளும் கடைகளின் பின்னும் மறைந்து நின்ற தொழிலாளர்கள், கடைச் சிப்பந்திகள் ஆகியோரும் இணைந்து கொள்ளவே அது பஸ் நிலையத்தை அடைந்தபோது ஆயிரக் கணக்கானோராகப் பெருகியிருந்தது.

சந்திரச் சந்தியிலிருந்து முற்றவெளி செல்லும் வீதியில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். ஊர்வலம் தடையை மீறிச் செல்ல முயன்றபோது பொலிஸார் தடியடி, கண்ணீர்ப் புகைப் பிரயோகம் என்பவற்றை மேற்கொண்டனர். ஊர்வலத்தின் முன்னணியில் சென்ற பலர் காயங்களுடன் கைது செய்யப்பட்டனர். ஏனையோர் கலைந்து சென்று ஆரியகுளத்திலுள்ள ஒரு தனியார் காணியில் மே தினக் கூட்டத்தை நடத்தினர்.

இதில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம் பௌத்த மத மேலாதிக்கம் தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கைகளை ஒடுக்க தமிழரசுக் கட்சியினர் துணை போயினர் என்பதுதான். அதாவது இவ்வூர்வலத்தில் பங்கு கொண்டோர் தமிழர்களே! பௌத்த மத ஆதிக்கம் தமிழ்த் தொழிலாளர்கள் மேல் தமிழரசுக் கட்சி பங்கு கொண்டிருந்த அரசாங்கம் திணிக்க முயன்றது என்பது உற்றுநோக்கப்பட வேண்டும். ஒடுக்குமுறையாளர்களின் நோக்கங்களின் முன்பு இவர்களின் போலித் தமிழ் தேசியம் சுருண்டு விடும் என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாகும்.

அதேவேளையில் காலங்காலமாக வடபகுதியில் நிலவி வரும் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே தேனீர் கடைப் பிரவேசம், ஆலயப் பிரவேசம் போன்ற வடிவங்களில் எழுச்சி பெற்றன. அந்த நிலையில் சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு நிறுவனமயப்பட்ட போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன.

இவ்வமைப்பில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமின்றி உயர் சாதி முற்போக்காளர்களும் இணைந்து தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

சாதிப்பாகுபாடுக்கு எதிராக 1966 ஒக்டோபரில் சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு பேரணி முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பு இப்பேரணி மீது பொலிஸாரால் தடை செய்யப்பட்டு, தடியடிப் பிரயோகம் நடத்தப்பட்டதுடன் பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் ஏனையோர் கலைந்து செல்ல மறுத்த நிலையில் கோஷங்கள் போடாமல் ஊர்வலம் செல்லப் பொலிஸார் அனுமதித்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் வாயைக் கட்டியவாறு ஊர்வலமாகச் சென்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து மாவிட்டபுரம், பன்றித்தலைச்சி உட்பட பல ஆலயப் பிரவேசங்கள் இடம்பெற்றன. அவற்றின்போது சாதி வெறியர்கள் ஆலயப் பிரவேசம் செய்யப் போன மக்கள் மீது கடும் தாக்குதல்களை நடத்தினர். தாக்குதல்கள் தொடங்க முன்பே பொலிஸார் அவ்விடத்தை விட்டு அகன்று அவர்களுக்கு வாய்ப்பை வழங்கினர்.

இவ்வாறே சங்கானை, மட்டுவில், மந்துவில் போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப்பட்;ட நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களும் பதில் தாக்குதல்களை நடத்தினர். இவற்றின் காரணமாக இரு தரப்பிலும் பல உயிர்ப் பலிகள் இடம்பெற்றன.

ஆலயப் பிரவேசம் தேனீர்க் கடைப் பிரவேசம் போன்றவற்றைத் தடுப்பதும், சாதிப் பாகுபாடு காண்பிப்பதும் சட்டப்படி குற்றமாக இருந்த போதிலும் பொலிஸார் சாதி வெறியர் பக்கமே நின்று செயற்பட்டனர்.

அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த தமிழரசுக் கட்சியினர் உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் பொலிஸாரை நியாயபூர்வமாக நடக்க வைத்திருக்கலாம். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் ஒரு பகுதியினரின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு மறைமுகமாக ஆதரவு வழங்கியமை இங்கு கவனத்தில் எடுக்கவேண்டியது முக்கியமாகும்.

அதாவது தமிழரசுக் கட்சி உயர் குடியினரின் நலன்களின் அடிப்படையில் தொழிலாளர்கள் போராட்டங்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் என்பனவற்றுக்கு எதிராகவே செயற்பட்டனர்.

தமிழ் மக்களின் பரந்துபட்ட ஆதரவைப் பெற்ற கட்சி என்ற வகையிலும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் என்ற முறையிலும் தமிழரசுக் கட்சி தலையிட்டு தீண்டாமைப் பிரச்சினைக்கு ஒரு நியாயபூர்வமான தீர்வைக் கண்டிருக்கலாம்.

ஆனால் அவர்களின் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான உயர் குடிகளின் நலன் சார்ந்த அரசியல் அதற்கு இடம்கொடுக்கவில்லை.

இந்த மேட்டுக்குடி அரசியல் காரணமாகவே சிங்கள உயர் குடியினரான முதலாளித்துவ, ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியிலமர்த்த வைத்தனர் என்பது அடிப்படை உண்மையாகும். அத்துடன் அமைச்சரவைப் பதவியையும் பெற்றுக்கொண்டு அதிகாரத்தில் பங்காளிகளாகவும் திகழ்ந்தனர்.

அதன் காரணமாகவே 1965 – 1970 காலப்பகுதிகளில் கூட ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்தபோதிலும் அந்த ஆட்சிக்கு தமிழரசுக் கட்சியினர் இறுதி வரை ஆதரவு வழங்கி வந்தனர் என்பது மறுக்கமுடியாத வரலாற்று பதிவாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE