Friday 19th of April 2024 06:15:02 AM GMT

LANGUAGE - TAMIL
.
சர்வதேசத்தின் அடுத்த நகர்வுக்குக் கதவை மூடிய சம்பந்தன்! - நா.யோகேந்திரநாதன்!

சர்வதேசத்தின் அடுத்த நகர்வுக்குக் கதவை மூடிய சம்பந்தன்! - நா.யோகேந்திரநாதன்!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டனால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்மான முன் வரைவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தனது மனம் நிறைந்த திருப்தியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

அப்பாராட்டுரையில் அத்தீர்மானம் மிகவும் கனதியாகவும் வடக்குக் கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் பிரேரணையின் புதிய வரையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் பல நாடுகள் இப்பிரேரணைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் தாங்கள் பல நாட்டுத் தூதுவர்களுடனும் பேச்சுகளை நடத்தி ஆதரவு கோரியுள்ளதாகவும் அப்படி ஆதரவுகோரி தான் ஒரு பகிரங்க அறிக்கையையும் விடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அம்மையார் இலங்கையில் போர்க் குற்றங்கள் மேற்கொண்டார்கள் என ஆதாரங்கள் காணப்படுபவர்களை உறுப்பு நாடுகள் தங்கள் நாடுகளிலேயே விசாரணைகளை நடத்தி அவர்களுக்குப் பயணத்தடை விடுப்பதுடன் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படவேண்டுமெனவும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் தொடர்பான ஆவணங்களை மனித உரிமைகள் பேரவை எதிர்கால விசாரணைகளுக்கேற்ற வகையில் சேகரிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்ட இரு விடயங்களும் இவ்வரையில் உள்ளடக்கப்படவில்லை. அதாவது இத்தீர்மானத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான விசாரணைகளை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்வதைப் பற்றி எந்த ஒரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை.

ஏற்கனவே உள்நாட்டுப் பொறிமூலம் தீர்வு காணத்தக்கதாக அமைந்திருந்த 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறிவிட்டது. அண்மையில் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறினாலென்ன, தோற்கடிக்கப்பட்டாலென்ன இலங்கை தனது கொள்கைகளிலிருந்து மாறாது என வெளிநாட்டு ஊடகமொன்றுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையில் இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையெனவும் மனித நேய நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டனர் எனவும் புலம்பெயர் அமைப்புகளின் பணம் காரணமாகவே தனக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்தாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய மீது பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடு தெளிவாயிருந்தபோதிலும் பிரதமர், இராணுவத் தளபதி ஆகியோரின் அண்மைய கருத்துகளிலிருந்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க முடியாது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான் பிரிட்டனின் பிரேரணையில் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெறும் விவகாரம் இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லப்படவேண்டுமென்ற மனித உரிமை ஆணையாளரின் ஆலோசனை உள்ளடக்கப்படாமை தமிழ் மக்களுக்கு முற்றிலும் ஏமாற்றமளிக்கும் ஒரு விளைவையே ஏற்படுத்தியுள்ளது. அப்படியிருந்தும் திரு.சம்பந்தன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் என்பவற்றுக்கு இப்பிரேரணை தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்திருப்பது தமிழ் மக்களை மட்டுமின்றி சர்வதேசத்தையும் ஏமாற்றிப் பிழையான பாதையில் திசை திருப்பும் துர்நோக்கம் கொண்டதாகவே கருதவேண்டியுள்ளது. அதாவது தமிழ் மக்கள் இப்பிரேரணையை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றனர் என்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச நாடுகள் அடுத்த கட்டம் நோக்கி நகர்வதைச் சம்பந்தர் திசை திருப்புகிறார் என்றே தெரிகிறது.

திரு.சம்பந்தன் அவர்கள் பிரிட்டனின் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கும்படி வெளிநாடுகளிடம் கோரிக்கை வைத்தமையைத் தவறெனக் கூறி விடமுடியாது. அப்படி ஆதரவு கோரும்போது அந்நாடுகள் சர்வதேச விசாரணை சம்பந்தமான பகுதிகளைச் சேர்க்கவேண்டுமென வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டிருந்தால் அதில் நியாயம் உண்டு. ஏற்கனவே அமெரிக்கா போர்க் குற்றவாளிகளை நாடு கடத்த வேண்டுமெனவும் ஜேர்மனி தீர்மான விடயங்கள் மேலும் கடுமையாக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்திருந்தன. அவற்றைக் கூட நிராகரிக்கும் வகையில் சம்பந்தன் தற்போதைய தீர்மானத்துக்குத் திருப்தி தெரிவித்து சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியுள்ளார். இது சர்வதேசத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு முட்டுக்கட்டை போடும் விடயம் என்பது தான் உற்றுக் கவனிக்க வேண்டியதாகும்.

போர் முடிவுற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இலங்கையில் உள்ளகப் பொறிமுறை மூலம் எந்த ஒரு நியாயமான தீர்வும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேன் நிலவு கொண்டாடிய 5 வருடங்களில் கூட மீண்டும் மீண்டும் அரசாங்கத்துக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டபோதும் எந்தவொரு சிறு நகர்வுகூட மேற்கொள்ளப்படவில்லை. மாறாகத் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற வகையிலேயே ஒவ்வொரு விடயங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இலங்கைக்குள் நியாயமான தீர்வு கிட்டாது என்பதைத் திட்டவட்டமாகப் புரிந்து கொண்ட பின்பே எமது மக்கள் எமது பிரச்சினைகளுக்கான தீர்வு சர்வதேசப் பொறிமுறை மூலம் எட்டப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நியாயபூர்வமான தீர்வு எட்டப்பட முடியாது என்பது திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தமிழ் மக்களுக்குச் சர்வதேச விசாரணையைக் கோருவதைவிட வேறு எந்த வழிமுறையும் இல்லை.

இதன் அடிப்படையிலேயே சிவில் அமைப்புகள், மதகுருமார் ஒன்றிணைந்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியை ஏற்பாடு செய்து முன்னெடுத்தனர். இதில் தமிழ், முஸ்லிம் மக்கள் இன, மத வேறுபாடுகளைக் கடந்து பல்லாயிரக் கணக்கில் அணி திரண்டனர்.

இந்த எழுச்சிப் பேரணி தமிழ், முஸ்லிம் மக்கள் மேல் இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரியும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித குல விரோத நடவடிக்கைளுக்கு சர்வதேச விசாரணையைக் கோரியும் தமிழ் பேசும் மக்களின் ஐக்கியப்பட்ட உறுதிமிக்க உரிமைக் குரலாகவும் ஒலித்தது. இப்பேரணி தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தமது கட்டற்ற ஒடுக்குமுறைகளை மேற்கொண்ட இலங்கையின் ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அது மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் எமது கோரிக்கைகளுக்கு இது வலிமை சேர்த்தது.

அதன் தொடர்ச்சியாக நல்லூரில் யாழ்ப்பாண, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரணை கோரி மேற்கொள்ளப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் அமைப்புகள், மதநிறுவனங்கள், காணாமற் போனோர் உறவுகள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டு உரிமைக் குரலெழுப்பி வருகின்றனர். இவ்வாறே மட்டக்களப்பு மாமாங்கத்திலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான எழுச்சிப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு சர்வதேச விசாரணை கோரி வருகின்றனர். அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தளர்வின்றித் தொடர்கிறது. அம்பாறையிலும் இவ்வாறான ஒரு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புலம்பெயர் மக்களின் உணர்வு வெளிப்பாடாக திருமதி அம்பிகை அவர்கள் சர்வதேச விசாரணை கோரிச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றார். புலம் பெயர் தமிழர்களின் அமைப்புகள் ஜெனிவாவில் பெரும் எழுச்சிப் பேரணியை நடத்தியுள்ளன.

அவ்வாறே புலம்பெயர் நாடுகளின் மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் என்பனவும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றன.

இவ்வாறு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சர்வதேச மட்டத்திலும் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளச் சர்வதேச விசாரணையைக் கோரிப் போராட்டங்களும் அழுத்தங்களும் முன்னெடுக்கப்படும் நிலையில் அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்தி சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உள்ளடக்காத பிரிட்டிஷ் தீர்மானத்தைச் சம்பந்தர் அவர்கள் திருப்திகரமானதெனக் கூறி வரவேற்றுள்ளார்.

இத்தீர்மானம் திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்ட போதிலும் இதை இறுதித்தீர்மானமாகக் கொள்ளமுடியாது. எதிர்வரும் 18ம் திகதி இது வாக்கெடுப்புக்கு விடப்படும்வரை இதில் எமக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.

ஆனால் சம்பந்தர் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்கள் என்பனவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் பிரிட்டனின் புதிய வரைவு அமைந்துள்ளதென திருப்தி தெரிவித்திருந்தமை, இத்தீர்மானத்தில் எமக்குச் சாதகமான மாற்றங்களைச் செய்யும் முயற்சிகளை நிராகரிக்கும் ஒரு அப்பட்டமான இலங்கை ஆட்சியாளர்களுக்குச் சாதகமான ஒரு போக்காகும். அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேரால் அவர் மேற்கொள்வதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை, மன்னிக்கப் போவதுமில்லை.

எனவே நாம் மேற்படி தீர்மானத்தில் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மேலும் வலிமைப்படுத்தப்படவேண்டும். சம்பந்தர் மூட முயலும் கதவுகளை உடைத்துத் திறந்து நாம் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறவேண்டும்.

எனவே எதிர்வரும் 17ம் நாள் சர்வதேச விசாரணை கோரி நடத்தப்படவுள்ள பேரணி, பிரிட்டனால் முன்வைக்கப்பட்ட வரைவில் எமக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் ஒரு பேரெழுச்சியாக உலகின் மனச்சாட்சியை உலுப்பவேண்டும்.

அதுவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய ஒரு மாற்றத்திற்கான நல்ல ஆரம்பம் என தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

அருவி இணைத்திற்காக : நா.யோகேந்திரநாதன்

16.03.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இரா சம்பந்தன், இலங்கை, உலகம், கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE