Thursday 28th of March 2024 06:26:16 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் முதன்முறையாக மேடை நாடக கலைஞர்களுக்கு அரச செலவில் காப்புறுதி!

இலங்கையில் முதன்முறையாக மேடை நாடக கலைஞர்களுக்கு அரச செலவில் காப்புறுதி!


இலங்கையில் முதன்முறையாக மேடை கலைஞர்களுக்கான 'ப்ரேக்ஷா' விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதி திட்டம் நேற்று வழங்கப்பட்டது.

தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க அறக்கட்டளை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ப்ரேக்ஷா விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதி ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தால் செயற்படுத்தப்படுகிறது.

அதற்கமைய, ஒரு உறுப்பினர் மரணித்தால் 2 இலட்சம் ரூபாயும், திடீர் மரணம் ஏற்பட்டால் 600,000 ரூபாயும், முழுமையாக ஊனமுற்றால் நான்கு இலட்சம் ரூபாயும், கடுமையான நோய் காப்புறுதிக்கு மூன்று லட்சம் ரூபாயும், வைத்தியசாலையில் அனுமதிக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 150,000 ரூபாயும், வெளிநோயாளர் சிகிச்சைக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வரையிலும் வழஙக்கப்படும்.

ப்ரேக்ஷா விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதிகளை வழங்கும் திட்டத்தை குறிக்கும் வகையில் குறியீட்டு ரீதியாக பிரதமரின் கரங்களினால் மேடை நாடக துறையின் சிரேஷ்ட கலைஞர்களுக்கு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து காப்புறுதி பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கம் காப்புறுதி தொகையை செலுத்தி 'ப்ரேக்ஷா' காப்புறுதியை வழங்குவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறுவதாக தெரிவித்தார்.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் நெருக்கடிக்கு உள்ளான தருணத்தில், அனைத்து கலை துறை சார்ந்த கலைஞர்களும் அந்தக் கலைகளும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின.

அவ்வாறானதொரு தருணத்தில் இலங்கை கலைஞர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு அவர்களது வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கு சலுகை வட்டி வீதத்தில் 5 இலட்சம் ரூபாய் கடன் தொகையை பெற்றுக் கொடுத்து அவர்களது வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கு முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கோவிட்-10 தொற்று காரணமாக தொலைக்காட்சி நாடக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்துவதற்கு நாம் வாய்ப்பு வழங்கினோம்.

அதன் காரணமாக அத்தொலைக்காட்சி நாடக படப்பிடிப்புகளை தொடர அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் மேடை நாடக கலைஞர்களுக்கு தமது நாடகங்களை மேடையேற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

அவர்களின் பார்வையாளர்கள் திரையரங்குகளிலிருந்து விலகி இருக்கும்போது டவர் மண்டப அரங்க அறக்கட்டளை ஏற்பாடு செய்த ப்ரேக்ஷா நாடக விழா மூலம் நாடக எழுத்தாளர்கள், நடிகர்களின் வாழ்க்கையை புதுப்பிக்க முடிந்தமை எங்களுக்கு ஒரு பெரிய சாதனையாகும் .

இது நாடகக் கலையில் ஒரு புதிய எழுச்சியை கொண்டுவந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கோவிட் தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொண்டு, அனைத்து கலைகளும் மீண்டும் சரிந்தபோது, அவர்களின் வாழ்க்கைத் தரம் மிகக் குறைந்த நிலைக்கு சரிந்தது.இத்தகைய சூழ்நிலையில், 500 நாடகக் கலைஞர்களுக்கு இந்த காப்புறுதி திட்டத்தை அரசாங்கத்தின் முழு செலவில் அறிமுகப்படுத்தினோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இது ஒரு சிறந்த காப்புறுதி திட்டமாகும். இது திடீர் மரணம் ஏற்பட்டால் அவர்களுக்கு சிறப்பு நிவாரணம் அளிக்கிறது. இதன் மூலம் காப்புறுதியை பெற்று இலங்கை நாடகக் கலையை வளர்ப்பதற்கான வலிமை, தைரியம் மற்றும் ஆரோக்கியம் கிடைக்க நான் மனதார பிரார்த்திக்கிறேன்.

அத்துடன் இந்த ப்ரேக்ஷா காப்புறுதியை வழங்குவதற்கு முக்கிய பங்கு வகித்த தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அவரது அமைச்சின் ஊழியர்களுக்கும், டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவின் அனைத்து ஊழியர்களுக்கும், இக்காப்புறுதியை வழங்கும் ஜனசக்தி நிறுவனத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என பிரதமர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, இராஜாங்க அமைச்சின் செயலாளர் கே.ஏ.சீ.ஆர்.நிசாந்த ஜயசிங்க, டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி டக்ளஸ் சிறிவர்தன, இலங்கை கலை மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஜயசேன கோட்டேகொட, ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவி லியனகே உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் உறுப்பினர்கள், ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மேடை நாடக துறையின் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE