Wednesday 24th of April 2024 01:37:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
“சர்வதேச அரசியலின் அடிப்படையில் தமிழ் தலைமைகளின் அணுகுமுறையில்  மாற்றம் வேண்டும்” - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

“சர்வதேச அரசியலின் அடிப்படையில் தமிழ் தலைமைகளின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்” - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


ஜெனீவா அரசியல் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பினை நோக்கி நகர்கிறது. அரசாங்கத்திற்கான நாடுகளின் ஆதரவு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகவும் வாக்கெடுப்பில் சில சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் நெருக்கடியை எதிர் கொள்ளலாம் என்றும் செய்திகள் வெளியாகின்றன. இதில் இலங்கையை ஆதரித்து பேசிய நாடுகளட் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகிக்கலாம் எனவும் மேற்குலக நாடுகள் எவையும் இலங்கையை ஆதரித்து பேசவில்லை என்பதனால் அத்தகைய நெருக்கடி வலுக்க வாய்ப்புள்ளதாகவும் தென் இலங்கை அரசியல் தலைமைகள் கூறுகின்றனர். இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரிந்தாலும் நடுநிலமை வகிக்கப் போவது உறுதியாகிறது. குறிப்பாக கிழக்கு முனையத்தை கொடுக்காத இலங்கையின் தந்திரம் மேற்கு முனையம் பற்றிய உரையாடலை ஆரம்பித்ததன் பிரதிபலிப்பு நடுநிலையை நோக்கி இந்தியா நகரமுடியும் என கருத வாய்ப்புள்ளது. இக்கட்டுரையும் சர்வதேசம் பொறுத்து தமிழ் தலைமைகளது அணுகுமுறைகளை புரிந்து கொள்வதாக அமையவுள்ளது.

முதலாவது இந்தியாவின் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஐவர் அடங்கிய குழுவினர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மனித உரிமைகள் பேரவைக்கும் அதன் அங்கத்துவ நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் அடங்கியுள்ள கோரிக்கைகள் இலங்கையை ஐ.நா பாதுகாப்புச் சபையூடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேலண்டும். ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இழைத்த மனித உரிமைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை ஐ.நா. மனித உரிமைப் பேரவை அறிக்கையினை தயாரித்து உலகளாவிய அரசியல் மற்றும் நீதி மன்றங்களில் கையளிக்க வேண்டும்.ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் கீழ் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.இலங்கை தொர்பில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிறப்பு கூட்டத் தொடர் ஒன்றினை நடாத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி அறிக்கை ஒன்றினை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பில் ஓய்வு பெற்ற உயர்நீதிபதிகள் என்ற விமர்சனம் காணப்பட்டாலும் நடைமுறையில் ஒர்; அரசியல் செய்முறை ஒன்றுக்கான களம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் அறிக்கைகளை விடுகின்ற அரசியல்' வாதிகளை விட அவர்களது மேடைப் பேச்சுக்களை விட இது மேலான செயலாக தெரிகிறது. ஆனால் இவை சரியானவை என்பதற்கு அப்பால் அதற்கான அணுகுமுறைகள் வேண்டும்.

இரண்டாவது வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூகத்தின் அறிக்கையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் பொறுப்புக் கூறல் பொறிமுறையை அமுல்படுத்தவும். மற்றும் போர்க்குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன்நிறுத்தவும் கோரி இணை அனுசரணை நாடுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதிலும் பலவிமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஒரு அரசியல் செய்முறையொன்றுக்கான நடவடிக்கை மேற்கொள்ள முனைந்துள்ளதை காணலாம். ஆனால் இதனை ஜெனீவாவைக் கடந்து செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

மூன்றாவது தமது நிலங்கள் பறிபோகின்றன புராதன சின்னங்கள் அழிக்கப்படுகின்றன தமது வாழ்வாதாரம் சுரண்டப்படுகின்றது என்று தமிழ் மக்கள் கடந்த 12 வருடங்களாக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடாத்திவருகின்றனர். ஆனால் அவற்றை சர்வதேச சமூகம் கவனத்தில் கொண்டு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வில்லை. இதனால் தான் இன்று நிலமை இவ்வளவு மோசமடைந்துள்ளது என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி. விக்னேஸ்வரன் நுனெடநளள றுயச உரையாடலின் போது தெரிவித்துள்ளார். இதே கருத்தினை பல அரசியல் வாதிகள் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களது கருத்துக்கள் மீது அதிக விமர்சனம் உண்டு.

நான்காவது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியாவில் அம்பிகை செல்வக்குமார் என்பவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு ஆதரவாக வடக்கு கிழக்கிலும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டம் நிகழ்pந்துள்ளது. இவை அனைத்தும் சி-வில் அமைப்புக்களே மேற்கொண்டன. பாதிக்கப்பட்ட மக்களும் பொது மக்களுமே அதில் கலந்து கொண்டனர்.

ஐந்தாவது இவற்றையெல்லாம் முடிபுக்கு கொண்டுவரும் விதத்தில் பிரித்தானியா இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்;தில் நிறுத்துவதற்கான கோரிக்கையை நிராகரித்தது. அதற்கு பிரிட்டன் கூறிய காரணம் ஐ.நா. பாதுகாப்பு சபை ஊடாக மட்டுமே இலங்கையை பரிந்துரைக்க முடியும் எனவும் இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாத நாடு என்ற வகையிலும் காரணங்களை தெரிவித்துள்ளது.இந்நடவடிக்கை பொறுத்து பாரிய விமர்சனம் ஒன்றினை பிரிட்டிஷ் தொழில் கட்சி முன்வைத்துள்ளது.

இவை அனைத்தையும் அவதானிக்கும் போது தமிழ் தலைமைகளும் அவர்களது கருத்துக்களில் சர்வதேசம் பற்றிய புரிதல் எப்படி அமைந்துள்ளது என்பது தெரிகிறது. தேசிய அரசுகளின் உறவுகளாலும் நலன்களாலும் உருவாக்கப்பட்டதே சர்வதேச அரசியல். இதற்குள் சர்வதேச நிறுவனங்களும் விதிவிலக்கானவை அல்ல. ஐ.நா. சபையும் வல்லரசுகளின் நலன்களுக்காகவே கட்டிவளர்க்கப்ட்ட நிறுவனமாகும். மனித உரிமையும் ஒர் அரசியல் பொறிமுறையாகவே உள்ளது. அதனை முன்னிறுத்தியே நாடுகளது அரசியலும் நலன்களும் நகர்த்தப்படுகிறது. பனிப்போர்க்காலத்தில் மட்டுமே முன்னாள் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் தமது நலன்களின் இழுபறிக்குள்ளால் ஒடுக்கப்பட்ட தேசியங்களது மனித உரிமையும் சுயநிர்ணயமும் ஓரளவு பாதுகாக்கப்பட்டது. தற்போது அவை அனைத்தும் முடிபுக்கு வந்துவிட்டன. சீனர்களும் அமெரிக்கர்களும் ஒரே பாதையில் தான் பயணம் செய்கிறார்கள். ஆனால் அவர்களது இலக்குகள் மீதான போட்டித் தன்மை மட்டுமே காணப்படுகிறது. ஏன் கியூபாவும் அமெரிக்காவும் ஒரே கொள்கைக்குள்ளேயே செயல்படுகின்றன. அமெரிக்கா எதிர் கியூபா என்பதற்காகவே கியூபர்கள் இலங்கையை ஆதரிக்கின்றனர். இலங்கை ஆட்சியாளர்கள் எவ்வளவு சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்டாலும் இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

மேற்குலகமும் இணைந்தே இறுதி போரை நிகழ்த்தியது என்பது அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல சமகாலத்தில் வாழ்ந்த மக்களுக்கும் நன்கு தெரியும். ஆனந்தபுரம் சண்டையில் பிரித்தானியாவின் பங்களிப்புப் பற்றிய கட்டுரைகள் பல டெயிலிமிரர் பத்திரிகையில் வெளிவந்திருந்தன. எனவே இத்தகைய நாடுகள் அப்போது போரை முடிபுக்கு கொண்டுவர செயல்பட்டார்கள் தற்போது இலங்கை அரசாங்கத்தை கண்டிப்பதற்கு முயல்வது போல் செயல்படுகிறார்கள். காரணம் தற்போதுள்ள அரசாங்கத்தால் அவர்களது நலன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரனில்-மைத்திரி காலம் மேற்குலகத்தினது காலம் தற்போது சீனாவினது காலம். அதுவே இங்குள்ள பிணக்கக்கான காரணம். இதனை முன்னிறுத்தி தமிழ் தலைமைகள் அரசியல் செய்ய வேண்டும். அரசியல் செய்வதென்பது தமிழ் மக்களுக்கானதாக இருப்பதுடன் அவர்களது நலன்களை அடைவதற்கானதாக அமையவேண்டும். கொள்கையும் கட்சியும் தனிநபர்களும் பரம்பரை ஆதிக்கமும் மட்டுமே அரசியல் என்று கருதும் தமிழ் தலைமைகள் இருக்கும் வரை தீர்வோ வரைபோ சாத்தியமாகாது. புலம்பெயர்ந்தவர்களும் சரி புலத்திலுள்ள அரசியல் கட்சிகளும் சரி தமது தனித்துவத்தை மட்டுமே கருகிறார்களே அன்றி தமிழ் மக்களது தனித்துவத்தைக் கருத்தாகக் கொள்ளவில்லை.

சர்வதேசம் தவறிளைத்துவிட்டது என்றும் முதுகில் குத்திவிட்டது என்றும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது என்றும் புலம் பெயர்ந்தவர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் கூறுகிறார்கள். இத்தகைய தரப்புக்கள் சர்வதேச அரசியலில் மேற்கொண்ட நகர்வுகள்தான் என்ன. தமிழ் மக்கள் தான் பேராடுகிறார்கள். தமிழ் தலைவர்கள் அந்த போராட்டக் களத்தில் கூட இல்லை.உண்ணாவிரம் இரக்க வேண்டியவர்கள் தமிழ் மக்களல்ல. தமிழ் தலைவர்களே. எந்தவித அரசியல் நகர்வையும் மேற்கொள்ளாது சர்வதேசம் முதுகில் குத்திவிட்டது என்று உரைப்பதில் எந்தவித பயனும் கிடையாது. இது மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கை மட்டுமே.

எனவே சர்வதேச அரசியலை கையாளவும் அதற்கான உபாயங்களை வகுக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். காரணம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையே உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் அங்கீகரிக்கும். அவர்கள் தமிழ் மக்களுக்கானவர்களாக தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்காக எதனையும் இழக்கத்' தயாராக வேண்டும். அதன்படி தந்திரேபாயமாக இராஜீக வழிமுறைக்கூடாக நாடுகளை அணுக வேண்டும். நாடுகளை குற்றம் சாட்டுவதும் கண்டிப்பதும் சர்வதேச அரசியலில் அநாகரீகமான செயல்' என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவை சரிசெய்யப்படாது விட்டால் எத்தனை ஜெனீவா வந்தாலும் மாற்றம் சாத்தியமற்றது. தமிழ் மக்களது நெருக்கடிக்கும் தீர்வு எட்டப் போவதில்லை.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE