Wednesday 21st of April 2021 05:07:02 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 47 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 47 (வரலாற்றுத் தொடர்)


தமிழ் மக்களின் உரிமைகளை ஐ.தே.கட்சிக்குப் பலி கொடுத்த தமிழ் அரசியல் தலைமைகள்! - நா.யோகேந்திரநாதன்!

'எங்கள் இளைஞர்களின் அதிருப்தி நீண்ட கால நோக்கில் நாட்டுக்குத் தீமையாக அமையும். நான் அமைதியாக இருக்கத் தயாராயிருக்கிறேன். எமது இளைஞர்கள் அவ்வாறு இருக்கத் தயாரில்லை. நீங்கள் எங்களைக் கைவிட்டு விடலாம் என அவர்கள் கூறுகிறார்கள். என் மீது அவர்கள் கொண்டிருக்கும் மரியாதையினால் அவர்கள் என்னுடன் சேர்ந்து செல்ல முடிகிறது. ஏமாற்றப்படுகிறேன் என அவர்கள் உணரத் தலைப்பட்டால் அவர்களின் பார்வையில் நான் முட்டாளாகத் தென்படுவேன். அதன் பின் அவர்கள் என்னை மதிக்க மாட்டார்கள். தமிழ் இளைஞர்கள் மத்தியில் எனது செல்வாக்கைத் தக்க வைப்பதற்கு சிங்களத் தலைமைத்துவம் தவறுமானால் அவர்களே இழப்புகளைச் சந்திக்க வேண்டியவர்களாவார்கள்'.

ஏற்கனவே டட்லி செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாவட்ட சபை அமைக்கும் முயற்சி எதிர்க்கட்சினரதும் ஆளுங்கட்சியில் உள்ள இனவாதிகளதும் எதிர்ப்புகளை முன்வைத்து டட்லியால் கைவிடப்படும் நிலை உருவாகியது. எனவே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மாவட்ட சபை அமைப்பது பற்றிய தங்கள் கோரிக்கையின் இறுக்கத்தைத் தளர்த்தி அதற்குப் பதிலாக திருமலையில் ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டுமென்ற தங்கள் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு தனது சம்மதத்தைத் தெரிவித்த டட்லி சேனநாயக்க பல்கலைக்கழகம் அமைக்க வரவு செலவுத் திட்டத்தில் அடையாள மானியமாக 10 ரூபா ஒதுக்கிவிட்டு அதைக் கிடப்பில் போட்டு விட்டார்.

அந்த நிலையில்தான் 1968 ஜனவரியில் டட்லி சேனநாயக்காவை நேரில் சந்தித்த தந்தை செல்வா அவரிடம் நேரடியாகவே தனது மன நிலையையும், எச்சரிக்கையையும் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் தான் அமைதியாக இருக்கத் தயாரெனவும் இளைஞர்கள் அவ்வாறிருக்கத் தயாரில்லை எனவும் குறிப்பிட்டதன் மூலம் இளைஞர்களைச் சமாளிக்கும் விதத்தில் ஏதாவது செய்யவேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டினாரேயொழிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தவில்லை.

1965ம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தில் பங்கு வகித்தபோதிலும் தமிழ் மக்கள் பிரச்சினைகள் எதுவுமே உருப்படியாகத் தீர்க்கப்படவில்லை. அவர்கள் அரசாங்கம் தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலெல்லாம் விட்டுக்கொடுப்புகளையே மேற்கொண்டு வந்தனர். தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் இணைந்த அரசு ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குள்ளாகவே அப்போது கல்வியமைச்சராயிருந்த இரியகொல்ல வடக்குக் கிழக்குக்கு வெளியேயுள்ள பாடசாலைகளில் தமிழ் கற்பிக்கப்படுவதை நிறுத்தினார். கொழும்பு உட்படத் தென் பகுதி நகரங்களிலும் சிறு நகரங்களிலும் மலையகத்திலும் வாழ்ந்த ஏராளமான தமிழ்ப் பெற்றோர்களின் பிள்ளைகள் பாதிக்கப்பட்டனர். அந்த விடயம் டட்லியின் கவனத்துக்குத் தமிழரசுக் கட்சியினரால் கொண்டு செல்லப்பட்டதையடுத்து அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் இரியகொல்ல தொடர்ந்தும் கல்வியில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும் அவற்றைத் தமிழரசுக் கட்சியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. குறிப்பாக 'சியவச' என்ற லொத்தர் அறிமுகப்படுத்தி அதை மாணவர்கள் மூலம் விற்பனை செய்யும் ஒரு திட்டம் இரியகொல்லவால் கொண்டுவரப்பட்டது. அது மாணவர்களிடம் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் எனக் கூறி இடதுசாரிகள் எதிர்த்தனர். தமிழரசுக் கட்சி ஆட்சியதிகாரத்தில் பங்காளிகளாயிருந்த போதிலும் அதைத் தடுத்து நிறுத்த முயலவில்லை.

1958ல் ஐக்கிய தேசியக் கட்சியின் கடும் எதிர்ப்பால் பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட நிலையில் பண்டாரநாயக்கவினால் நியாயமான தமிழ் உபயோகச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அவர் அதை நிறைவேற்ற முன்பே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் 1966ல் நியாயமான தமிழ் உபயோகச் சட்டத்துக்கான சட்ட விதிகளை உருவாக்கும் பொறுப்பு அமைச்சர் திருச்செல்வத்திடம் பிரதமர் டட்லி சேனநாயக்கவால் ஒப்படைக்கப்பட்டது.

1966 ஜனவரி 8ஆம் நாள் நியாயமானளவு தமிழ் மொழி உபயோகச் சட்டத்துக்கான சட்ட விதிகள் நாடாளுமன்றத்தில் அப்போதைய இராஜாங்க அமைச்சர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் முன்வைக்கப்பட்டது.

ஏற்கனவே பண்டாரநாயக்கவால் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்துக்கு ஐ.தே.கட்சி அரசாங்கம் சட்ட விதிகளை நிறைவேற்றியபோது பண்டாரநாயக்கவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தமிழுக்கும் சிங்களத்துக்கும் சமஅந்தஸ்துக் கோரி வந்த இடதுசாரிகளும் அச்சட்டத்தை எதிர்த்துப் பல போராட்டங்களை மேற்கொண்டனர். இச்சட்டத்தை நிறைவேற்றக் கூடாதெனக் கோரி இடதுசாரித் தொழிற்சங்கங்களால் விகாரமாதேவி பூங்காவிலிருந்து பாராளுமன்றம் நோக்கி பெரும் பேரணி மேற்கொள்ளப்பட்டது. கொள்ளுப்பிட்டியில் அப்பேரணி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் தம்பராவ ரத்தினசார தேரர் என்ற ஒரு பௌத்த பிக்கு கொல்லப்பட்டார்.

இவ்வாறான கடும் எதிர்ப்பின் மத்தியிலும் நியாயமான தமிழ் மொழி உபயோகச் சட்ட விதிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சட்ட விதிகள் நிறைவேற்றப்பட்டாலும் தமிழ் மொழி சம்பந்தப்பட்ட விதிகள் அமுல்படுத்தப்படவில்லை. அதுபோன்று சிங்களம் சித்தியடையாத அரச ஊழியர்கள் மூவர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டதும் வருடாந்த சம்பள உயர்வு ரத்துச் செய்யப்படுவதும் நிறுத்தப்படவில்லை.

1965 ஜூன் மாதம் தேசிய அரசு சிங்களம் சித்தியடையாதவர்கள் எவ்வித இழப்பீடுகளுமின்றி பணி நீக்கம் செய்யப்படும் சட்டம் முன்வைக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சி அதற்கு மறைமுக ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் பண்டா – செல்வா ஒப்பந்தத்தை கண்டி யாத்திரை உட்படப் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கிழிக்க வைத்தவர் ஜே.ஆர்.ஜயவர்த்தன. அவர் தமிழ் மொழிகள் உபயோகச் சட்ட விதிகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தபோது 'விகாரமாதேவிப் பூங்காப் பேரணி' முதல் தங்கள் கடும் எதிர்ப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியிட்டனர்.

அதாவது தாங்கள் செய்யும்போது சரியான விடயங்களாகப்படுபவை எதிர்க்கட்சி செய்யும்போது தீயவையாக மாறுவது சிங்கள அரசியலின் மாற்ற முடியாத மரபாக இருந்து வருகிறது.

பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்ட நியாயமான தமிழ் உபயோகச் சட்டத்திற்கான சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் எதிர்க்கட்சியினரின் நாடு பரந்த எதிர்ப்பின் காரணமாக தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட்டுவிட்டதாகச் சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தான் முக்கியம். அரசாங்கத்துடன் பங்காளியாயிருந்த தமிழரசுக் கட்சியும் அது பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் அவை அமுல்படுத்தப்படுமென்ற நம்பிக்கையைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தித் தொடர்ந்து ஏமாற்றத் தவறவில்லை.

மலையக மக்களின் குடியுரிமை தொடர்பான ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு மாத காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் 'லேக்ஹவுஸ்' பத்திரிகை நிறுவனத்தை தேசிய மயமாக்கும் மசோதாவில் தோற்கடிக்கப்பட்டு கலைக்கப்பட்டது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் அதைச் சட்டமூலமாகப் பாராளுமன்றத்தில் முன் வைத்தது. தமிழரசுக் கட்சியும் தொண்டமானும் முதலில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தபோதும் டட்லி சேனநாயக்கவின் இவ்வொப்பந்தம் மூலம் எவரும் பலவந்தமாக வெளியேற்றப்படமாட்டார்கள் என்ற வாக்குறுதியின் பேரில் அச்சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கினர்.

ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்தானபோது 'இது மக்களை வைத்து நடத்திய குதிரைப் பேரம்' எனக் கண்டித்த தொண்டமானும் 'அதிகார விளையாட்டில் ஒரு இலட்சம் மக்கள் பகடைக்காய்களாக்கப்படுகின்றனர்' எனத் தன் எதிர்ப்பைத் தெரிவித்த செல்வநாயகமும் எவ்வித கூச்சமுமின்றி ஐக்கிய தேசியக் கட்சி அதைச் சட்டமாக நிறைவேற்றியபோது ஆதரவை வழங்கினர்.

அப்போது இலங்கையின் தேசிய வருமானத்தில் 60 வீதம் தேயிலை ஏற்றுமதி மூலமே கிடைத்தது. ஆறு இலட்சம் தொழிலாளர்களுக்குத் தலைமை தாங்கிய தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இம்மசோதாவுக்கு எதிராக நேர்மையான போராட்டத்தை நடத்தியிருந்தால் அதை நிறைவேற்றாமல் தடுத்திருக்கலாம். இப்போராட்டத்துக்கு சண்முகதாசனின் மிகப் பலம்பெற்ற தொழிற்சங்கமான இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனமும் ஆதரவு வழங்கத் தயாராயிருந்தது.

ஆனால் நுவரெலியாவில் பெருந்தோட்டங்களின் உரிமையாளரான தொண்டமானோ, தலவாக்கலை லக்சுமி தோட்ட உரிமையாளரான எஸ்.ஜே.வி.செல்வநாயகமோ இரத்தினபுரியின் ஸ்ரீனிவாச தோட்ட முதலாளியான ஜீ.ஜீ.பொன்னம்பலமோ மலையக மக்களின் பிரச்சினைகளைத் தங்கள் அரசியல் தேவைகளுக்குப் பயன்படுத்தினரேயொழிய உண்மையாகவே அந்த மக்களின் விமோசனம் பற்றி அக்கறைப்படவில்லை. அம்மக்களை உரிமையற்றவர்களாக்கி அவர்களின் உழைப்பைக் குறைந்த கூலியில் கொள்ளையடிக்கும் கூட்டத்தில் இவர்களும் பங்காளிகளே!

அதேவேளையில் 1968ல் மாவட்ட சபை மசோதாவின் வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதையடுத்து எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியின் ஒரு பகுதியினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அந்த நிலையில் டட்லி மாவட்ட சபை மசோதாவை நிறைவேற்றும் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதெனவும் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமையைப் பொறுப்பேற்றுத் தான் பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்யப்போவதாகவும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சிக் குழுவினரை அழைத்து திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இப்பேச்சுகளை நிறைவு செய்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிய செல்வநாயகம் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் 'ஆளும் கட்சியைவிட மோசமான இனவாதத்தைக் கொண்ட எதிர்க்கட்சி ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும். எனவே அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பது தமிழர்களின் நலன்களை மேலும் மோசமாக்கும். நான் பிரதமருக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக வாக்குறுதியளித்துள்ளேன். நான் அவரைக் கைவிடமாட்டேன் என அவருக்கு நம்பிக்கையளித்துள்ளேன்' என விளக்கினார்.

தமிழரசுக் கட்சியினர் எந்த மாவட்ட சபை அமைக்கும் டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐ.தே,கட்சியுடன் இணைந்து ஆட்சியின் பங்காளர்கள் ஆனார்களோ, அந்த மாவட்ட சபை இல்லையென்பது திட்டவட்டமாகத் தெரிந்த பின்பும் தந்தை செல்வநாயகம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதில் உறுதியாயிருந்தார். அதாவது அவர் தமிழ் மக்களின் நலன்களைவிட ஐ.தே.கட்சி ஆட்சியிலிருக்க வேண்மென்பதற்கே முன்னுரிமை வழங்கினார்.

தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்ட திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கும் கோரிக்கை, வடக்கு கிழக்குக்கு வெளியே பாடசாலைகளில் தமிழ் கற்பிப்பதை தடை செய்யும் திட்டத்தை நீக்கும் கோரிக்கை, தமிழ் மொழி உபயோகச் சட்டத்தை அமுல்படுத்திய போது சிங்களம் சித்தியடையாத தமிழ் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை நிறுத்துதல், ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது மூலம் மலையக மக்களை நாடு கடத்துவதைத் தடுப்பது, மாவட்ட சபைகளை நிறைவேற்றுவதன் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போன்ற கோரிக்கைகள் அனைத்தும் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின் கிடப்பில் போடப்பட்டு இறுதியில் கைவிடப்பட்டு விட்டன. ஆனால் இக் கோரிக்கைகள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருத்த வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காகப் பலி கொடுக்கப்பட்டன.

இவற்றைத் தமிழ் இளைஞர்கள் புரிந்து கொண்டால் தனது வார்த்தைகளுக்கோ தனக்கோ மதிப்பளிக்கமாட்டார்கள் என்பதால், செல்வநாயகம் எதிர்க்கட்சிகளைப் பூச்சாண்டி காட்டி இளைஞர்களை ஏமாற்றி வந்தார்.

சிங்களத் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டனர் என்பது காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் உண்மை. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்தனர் என்பதே அடிப்படை உண்மையாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE