Thursday 28th of March 2024 11:16:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
புதிய அரசமைப்புக்கான நிபுணர் குழுவை அமைக்கும்போது எம்முடன் கலந்தாலோசிக்கவில்லை! - இரா.சம்பந்தன்!

புதிய அரசமைப்புக்கான நிபுணர் குழுவை அமைக்கும்போது எம்முடன் கலந்தாலோசிக்கவில்லை! - இரா.சம்பந்தன்!


புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்த்து வைக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விடயமாக தமிழ்த் தேசியப் பிரச்சினை உள்ள போதும், அரசமைப்பை வரைவதற்கான நிபுணர்கள் குழுவை அமைக்கும்போது, தங்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய அரசமைப்பை வரைவதற்கான நிபுணர்கள் குழுவுக்கு, சம்பந்தன் இது குறித்த கடிதமொன்றை இம்மாதம் 18ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நிபுணர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட சந்திப்பு மற்றும் அதன் பின்னர் பெப்ரவரி 24 ஆம் திகதி அந்தக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதம் மூலம் தம்மால் முன்வைக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பாக பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் சம்பந்தன் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"நாட்டுக்கான புதியதோர் அரசமைப்பில் தீர்த்து வைக்கப்படவேண்டிய மிக முக்கியமான விடயம் தமிழ்த் தேசியப் பிரச்சினையேயாகும் என்ற போதிலும், ஜனாதிபதி உங்களுடைய குழுவை நியமித்தபோது எங்களோடு கலந்தாலோசிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

எனினும், உங்கள் குழு பொது மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரியபோது, நாம் அந்த நடைமுறையில் மிக ஆக்கபூர்வமாக ஈடுபட்டு எமது ஆலோசனைகளை அனுப்பி வைத்தோம்.

அதன் பின்னர் உங்களது அழைப்பின் பேரில் நாம் உங்களைச் சந்தித்து, தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும், கடந்த 33 ஆண்டுகளில் எட்டப்பட்ட கருத்தொருமைப்பாட்டு விடயங்களை இனங்காண்பதில் உங்களது குழுவோடு இணைந்து செயற்படுவதற்கான எமது விருப்பம் குறித்தும் மேலும் விரிவாக எடுத்துரைத்திருந்தோம்.

ஏற்கனவே வாய்மூலமாகவும் எழுத்துமூலமாகவும் உங்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு என்ற வரையறைக்குள் தீர்வொன்றை காண்பதற்கு நாம் விரும்புகின்றோம். எனினும், அது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்துக்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும்.

இது, இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதோர், அரசமைப்பை வகுக்கும் உன்னத பணியில் உங்களோடு ஒத்துழைப்பதற்கான எமது விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு நினைவூட்டுதலாகும்" - என்றுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், ஐ.நா. செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE